

ஒவ்வொரு வருடமும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆங்கில புத்தாண்டு (English New Year history) என்பது கடந்த 500 ஆண்டுகளாக தான் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை மெசபடோமியர்கள் தான் முதன்முதலாக அறிமுகம் செய்தனர். மெசபடோமியா என்பது மேற்கு ஆசிய நாடுகளான ஈராக்கின் பெரும் பகுதி மற்றும் ஈரான் துருக்கி சிரியா குவைத் போன்ற பகுதிகளின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது இவர்கள் மார்ச் 25ஆம் தேதியை ஆண்டின் முதல் நாளாக கருதினர். இவர்களது காலண்டர் படி பத்து மாதங்கள் தான் இருந்தன. இது சரியாக இருக்காது என ரோமானிய மன்னர் நுமா பாம்பிலியஸ் கருதினார். சூரியனின் நகர்வை பொருத்து 12 மாதங்கள் தான் சரியாக இருக்கும் என்ற அவர் மார்ச் முதல் தேதியை புத்தாண்டு தினமாக்கினார். அத்துடன் ஜனவரி பிப்ரவரி என்ற இரண்டு மாதங்களை டிசம்பருக்கு அடுத்தபடியாக அதாவது கடைசி இரண்டு மாதங்களாக வரும்படி சேர்த்தார்.
அதன் பின் இப்போதைய ஜனவரி முதல் தேதியை புத்தம் புது தினமாக அறிவித்தவர் ரோமானிய மன்னர் ஜூலியஸ் சீசர் தான். இந்த மாற்றம் கிமு 46 இல் நடைமுறைக்கு வந்தது இந்த மாற்றம் செய்வதற்கு ஒரு காரணம் இருந்தது.
ரோமானியர்கள் ஜானஸ் என்ற தெய்வத்தை வணங்கி வந்தனர். இந்து தெய்வங்களில் பிரம்மாவுக்கு நான்கு முகம் சிவனுக்கு ஐந்து முகம் என்றெல்லாம் சொல்வது போல் ஜானஸ் தெய்வத்துக்கு இரண்டு முகங்கள் இருந்தன. இவரை காலக் கடவுள் என அழைத்தனர். அதில் ஒரு முகம் நிகழ் காலத்தையும் இன்னொரு முகம் எதிர்காலத்தையும் கணிப்பதாக நம்பினார்கள். இதனால் ஜானஸ் என்ற தெய்வத்தின் பெயரால் ஜனவரி என பெயர்சூட்டி முதல் மாதம் ஆக்கினார்கள்.
பிப்ரவரி மாதம் பெப்ருவா என்ற மனதை தூய்மையாக்கும் விழாவின் பெயரால் உருவானது. மார்ச் மாதத்திற்கு மார்ஷ் என்ற போர்க்கடவுளின் பெயர் சூட்டப்பட்டது. லத்தின் மொழியில் ஏப்ரிலிஸ் என்றால் வசந்த காலத்தை குறிக்கும் எனவே ஏப்ரல் என்றானது. கிரேக்க கடவுள் ஆன மேயா மற்றும் ரோமானிய கடவுள் மேஸ்தா என்ற கடவுளின் பெயரால் மே மாதமும், கடவுளின் ராணி எனப் போற்றப்படும் ஜுனு என்ற பெண் தெய்வத்தின் பெயரால் ஜூன் மாதமும் பிறந்தன.
ஜூலியஸ் சீசர் பெயரால் ஜூலை மாதமும் முதல் ரோமானிய பேரரசர் அகஸ்டஸ் சீசரின் பெயரால் ஆகஸ்ட் மாதமும் வந்தது. முன்னொரு காலத்தில் மார்ச் முதல் மாதமாக இருந்தபோது ஏழாம் மாதமாக இருந்ததன் அடிப்படையில் செப்டெம் என்ற லத்தின் எண் பெயரால் செப்டம்பர் மாதம் வந்தது. ஆக்டோ என்ற எட்டாம் எண்ணின் பெயரால் அக்டோபரும், நோவம் என்ற ஒன்பதாம் எண்ணின் பெயரால் நவம்பரும், டெசி என்ற பத்தாம் எண்ணின் பெயரால் டிசம்பர் பிறந்தன.
இவ்வாறாக ஜனவரி முதல் டிசம்பர் வரை மாதங்களுக்கு பெயர் சூட்டப்பட்டது.