இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் நாளில் இந்திய வான்படை நாள் (Indian Air Force Day) கொண்டாடப்படுகிறது.
இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்களால், 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாளில் ராயல் இந்திய வான்படை (Royal Indian Air Force) உருவாக்கப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின்பு, 1950 ஆம் ஆண்டு, ஜனவரி 26 முதல் இந்திய வான்படை அல்லது இந்திய விமானப் படை (Indian Air Force) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமான இந்திய வான்படை, இந்தியாவின் வான் எல்லையைப் பாதுகாப்பதை முதன்மைக் கடமையாகக் கொண்டிருக்கிறது. இப்படை இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது.
இப்படைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் முதற் பெரும் படைத்தலைவர் ஆவார். இந்திய வான்படையின் நிறுவன அமைப்பின் தலைவராக, ஒரு வான்படைப் பணியாளர்களின் முதன்மை அதிகாரி (Chief of Air Staff) நியமிக்கப்படுகிறார். இந்திய விமானப் படைத் தளபதிக்கு உதவியாக ஆறு அதிகாரிகள் உள்ளனர். இந்திய வான்படையானது ஏழு செயல்பாட்டுக் கட்டளைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டளைப் பிரிவுக்கும் ஒரு வான்படை அதிகாரி தலைமை தாங்குகிறார். ஒரு செயல்பாட்டுக் கட்டளையின் நோக்கம், அதன் பொறுப்பின் எல்லைக்குள் வானூர்திகளைப் பயன்படுத்தி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.
இந்திய வான்படையில், உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரயாக்ராஜைத் தலைமையிடமாகக் கொண்டு, மத்தியச் செயல்பாட்டுக் கட்டளைப் பிரிவும், மேகாலாயாவிலுள்ள ஷில்லாங்கைத் தலைமையிடமாகக் கொண்டு கிழக்குச் செயல்பாட்டுக் கட்டளைப் பிரிவும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, தெற்கு செயல்பாட்டுக் கட்டளைப் பிரிவும், குஜராத் மாநிலம் காந்திநகரைத் தலைமையிடமாகக் கொண்டு, தென்மேற்குச் செயல்பாட்டுக் கட்டளைப் பிரிவும், புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு, மேற்கு செயல்பாட்டுக் கட்டளைப் பிரிவும், கர்நாடக மாநிலம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு, பயிற்சி செயல்பாட்டுக் கட்டளைப் பிரிவும், மத்தியப்பிரதேச மாநிலம், நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு, பராமரிப்புச் செயல்பாட்டுக் கட்டளைப் பிரிவும் செயல்படுகின்றன.
ஒவ்வொரு செயல்பாட்டுக் கட்டளைப் பிரிவிலும் ஒன்பது முதல் பதினாறு வான்படைத் தளங்கள் அல்லது நிலையங்கள் உள்ளன. இந்தத் தளங்கள் ஒரு வான்படை குரூப் கேப்டன் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. ஒரு நிலையத்திற்கு பொதுவாக ஒன்று அல்லது இரண்டு படைப்பிரிவுகள் ஒதுக்கப்படும். படைப்பிரிவுகள் என்பது குறிப்பிட்ட வான்படை தளங்களுடன் இணைக்கப்பட்ட அமைப்புகளாகும். ஒரு பறக்கும் படைப்பிரிவு என்பது வான்படையின் முதன்மைப் பணியை மேற்கொள்ளும் ஒரு துணைப் பிரிவாகும். ஒரு போர்ப் படைப்பிரிவு 18 வானூர்திகளைக் கொண்டது. ஒரு படைப்பிரிவு விங் கமாண்டர் நிலையில் உள்ள விமானப் படை அதிகாரியைத் தலைமையாகக் கொண்டு இயங்குகிறது.
இந்த உருவாக்கக் கட்டமைப்பிற்குள், இந்திய வான்படை பறக்கும் கிளை, தொழில்நுட்பக் கிளை மற்றும் நிலவழிக் கிளை எனும் மூன்று சேவைக் கிளைகளையும் கொண்டுள்ளது. பறக்கும் கிளையின் வழியாகப் பறத்தல் பணிகளும், தொழில்நுட்பக் கிளை வழியாகப் பொறியியல் பணிகளும், நிலவழிக் கிளை வழியாக, தளவாடங்கள், நிர்வாகம், கணக்குகள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2017 ஆம் வருடக் கணக்கிபடி, இந்திய வான்படையில் 12,550 அதிகாரிகள் மற்றும் 1,42,529 விமானப்படையினர் உள்ளனர். இந்திய வான்படையில் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வானூர்திகள் மற்றும் உபகரணங்கள் உள்ளன. பகிரப்பட்ட உரிமத்தின் கீழ் இந்தியாவில் சில வெளிநாட்டு வானூர்திகளை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. 900 போர் வானூர்திகள் உட்பட ஏறத்தாழ 1,750 முதல் 1,850 வானூர்திகள் இந்திய வான்படையிடம் சேவையில் உள்ளன. இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான்படையாகத் திகழ்கிறது.
இந்திய விமானப்படையின் சிறப்புப் படைப்பிரிவாக, கருட் சிறப்புப் படை செயல்படுகிறது. இந்தப் படையானது பயங்கரவாத எதிர்ப்பு, பணயக் கைதிகள் மீட்பு, வான்படையின் முக்கியத் தளங்களுக்கு பாதுகாப்பை வழங்குதல் மற்றும் பல்வேறு விமானப்படை சார்ந்த சிறப்பு நடவடிக்கைகள் ஆகிய பணிகளில் ஈடுபடுகின்றது. முதன் முதலில் 2002 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தப் பிரிவு 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் நாளன்று அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. அனைத்து கருட் வீரர்களுக்கும் 52 வார அடிப்படைப் பயிற்சி வழங்கப்படுகின்றது. இதில் சிறப்பு நடவடிக்கைப் பயிற்சி, அடிப்படை வான்வழிப் பயிற்சி மற்றும் பிற போர் மற்றும் உயிர் வாழும் திறன்களைக் கற்பித்தல் ஆகியவை அடங்கும். அடிப்படைப் பயிற்சியின் கடைசிக் கட்டத்தில், கருட் வீரர்கள் போர் நுட்பங்களைக் கற்கிறார்கள். இதில் சிறப்பு ஆயுதப் பயிற்சியும் அடங்கும்.
நாட்டின் விண்வெளி அடிப்படையிலான சொத்துக்களைத் திறம்படப் பயன்படுத்த இந்தியப் பாதுகாப்புப் படைகள், இந்திய அரசின் விண்வெளித் துறை மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஆகிய மூன்று சேவைகளும் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த விண்வெளி பிரிவைச் செயல்படுத்துகின்றன. புவி வட சுற்றுப் பாதையில் தற்போது 10 இந்தியச் செயற்கைக்கோள்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை இராணுவச் செயற்கைக்கோள்களாக இல்லை என்றாலும், இவற்றில் சிலவற்றை இராணுவப் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படலாம்.
சூர்ய கிரண் என்பது இந்திய வான்படையின் வானூர்தி செயல் விளக்கக் கலைக் குழு ஆகும். சூர்யா கிரண் வானூர்திக் கலைக்குழு 1996 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது இந்திய விமானப்படையின் 52 ஆம் படைப்பிரிவின் ஒரு பகுதியாகும். இந்தக் குழு கர்நாடக மாநிலத்தில் உள்ள பீதர் விமானப்படை நிலையத்தைத் தளமாகக் கொண்டு செயல்படுகின்றது. இந்தப் படைப்பிரிவு தொடக்கத்தில் எச்.ஏ.எல். கிரண் எம்கே 2 பயிற்சி வானூர்திகளைப் பயன்படுத்தியது. பின்னர் 2015 ஆம் ஆண்டில் ஆக் எம்கே 132 வானூர்திகளைப் பயன்படுத்தத் தொடங்கியது.
சாரங் என்பது இந்திய வான்படையின் உலங்கு வானூர்தி செயல்விளக்கக் கலைக் குழு ஆகும். இந்தக் குழு மாற்றியமைக்கப்பட்ட ஐந்து எச்.ஏ.எல். துருவ் உலங்கு வானூர்திகளைப் (Helicopter) பயன்படுத்துகின்றது. இந்தப் பிரிவு தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகே உள்ள சூலூர் விமானப்படை நிலையத்தைத் தளமாக கொண்டு செயல்படுகின்றது. சாரங் என்ற வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் மயில் என்று பொருள். மயில் இந்தியாவின் தேசியப் பறவை ஆகும். இந்தக்குழுவானது சிறப்பு மயில் படம் மற்றும் வண்ணங்கள் தீட்டப்பட்ட உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்துகிறது.