
ஆண்டுதோறும் மே 16 அன்று சர்வதேச ஒளி தினம் அனுசரிக்கப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரத்தில் தொழில்நுட்பங்களின் பங்கை இந்த நாள் வலியுறுத்துகிறது. மேலும் அறிவியல் கண்டுபிடிப்பான லேசர் ஒளி சாதனம் எவ்வாறு சமூகம், தகவல் தொடர்பு, சுகாதாரம் மற்றும் பல துறைகளில் புரட்சிகரமான நன்மைகளை தருகிறது என்பதை மக்களுக்கு விளக்குவதும் இதன் நோக்கமாகும்.
லேசர் ஒளிக்கற்றையின் அறிமுகமும், பயன்பாடும்:
1960, மே 16ம் தேதி, கலிபோர்னியாவை சேர்ந்த விஞ்ஞானி தியோடர் எம். மைமன் முதன்முதலாக லேசர் ஒளிக்கற்றைகளை வெற்றிகரமாக இயக்கினார். முதன்முதலாக சந்திரனுக்கு அனுப்பப்பட்ட லேசர் ஒளிக்கற்றைகள் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான தூரத்தை துல்லியமாக அளவிட உதவியது. சுரங்கப்பாதை திட்டங்கள் போன்ற நில அளவைப் பணிகளில் பயன்படுத்தப்பட்டன. மருத்துவ துறையிலும் லேசர் பயன்படுத்தப்பட்டது.
சர்வதேச ஒளி தினத்தின் குறிக்கோள்கள்:
ஒளி சார்ந்த தொழில்நுட்பங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துகின்றன மற்றும் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு எவ்வாறு மையமாக செயல்படுகின்றன, என்பது குறித்த புரிதலை பொதுமக்களுக்கு ஏற்படுத்துதல்.
மக்களின் நிலையான வளர்ச்சியிலும், வளரும் நாடுகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், ஒளி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்பை அணுகுவதற்கான அவசியத்தையும் ஊக்குவிக்கிறது.
இன்றைய மாணவர்கள் மற்றும் எதிர்கால சந்ததியினர் ஒளி சார்ந்த தொழில்நுட்பங்களின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தம் பங்களிப்பை ஊக்குவிப்பதை நோக்கமாக இந்த நாள் கொண்டுள்ளது
அன்றாட வாழ்வியலில் லேசரின் பயன்பாடுகள்:
மக்கள் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தும் சிடிக்கள், டிவிடி பிளேயர்கள், ப்ளூரே பிளேயர்கள் போன்றவற்றில் அதிக துல்லியமான லேசர்கள் பயன்படுத்தப்படுகின்றன. லேசர் அச்சுப்பொறிகள் துல்லியமான படங்களை உருவாக்க உதவுகின்றன. தற்போது சிறிய கடைகளில் கூட பயன்படுத்தப்படும் பார்கோட் ஸ்கேனர்களில் லேசர் பயன்பாடு உள்ளது.
மருத்துவத்துறை:
மருத்துவத்துறையில் கண் மருத்துவம், சரும மருத்துவம், சரும மறு சீரமைப்பு மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கட்டிகளை அகற்றுதல் திசுக்களை துல்லியமாக வெட்டுதல், நீக்குதல், உறைய வைத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு லேசர்கள் பயன்படுத்தப்படுகின்றன இதனால் அதிகமான ரத்தப்போக்கு மட்டுப்படுத்தப்பட்டு மிகக் குறைந்த அளவு ரத்தப்போக்கு மட்டுமே ஏற்படும். மேலும் அறுவை சிகிச்சைக்கு பின்னால் உண்டாகும் வலி மற்றும் வடுக்கள் மிக சிறியதாக இருக்கும்.
உயிரியல் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதற்கும் லேசர்கள் பயன்படுத்தப்பட்டு நோய்கள் முன்கூட்டியே கண்டறியப்படுகின்றன மேலும் குறைந்த அளவிலான லேசர் சிகிச்சை மூலம் உடலில் வலி நீக்கும் சிகிச்சைகளை மருத்துவர்கள் செயல்படுத்துகிறார்கள். பல் மருத்துவத்தில் பற்களை வெண்மையாக்குதல் ஈறு அறுவை சிகிச்சை மற்றும் பற்குழி சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
தொழில்துறை:
உலோகங்கள், பிளாஸ்டிக்குகள், துணிகள் போன்ற பல்வேறு பொருட்களை துல்லியமாக வெட்டுவதற்கு லேசர் பயன்படுகிறது. பொருள்களின் வலுவான மற்றும் துல்லியமான இணைப்பிற்கு லேசர் வெல்டிங் பயன்படுகிறது. தயாரிப்புகளின் நிரந்தர அடையாளத்தை குறிக்க லேசர் குறியீடு பயன்படுகிறது. த்ரி டி பொருட்களை அடுக்கடுக்காக உருவாக்க பயன்படுகிறது.
சிலிக்கான் செதில்களில் நுண் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு பயன்படுகிறது. விஞ்ஞானிகளுக்கு மைக்ரோஸ்கோப்பில் இமேஜிங் திறன்களை மேம்படுத்தவும், நேரத்தை துல்லியமாக அளவிட பயன்படும் அணு கடிகாரங்களை உருவாக்கவும் லேசர் பயன்படுகிறது. அணுக்கள் மற்றும் செல்கள் போன்ற துகள்களை கையாள லேசர் ஒளிக்கற்றைகளை பயன்படுத்துகிறார்கள்.
ராணுவத்துறை:
ராணுவத் துறையினருக்கு லேசர் பயன்பாடு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ராணுவ வீரர்களுக்கு வழிகாட்டும் ஆயுதங்களாக பயன்படுகின்றன. லேசர் ஒளிக் காட்சிகள், லேசர் ப்ரொஜெக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தீமைகள்:
லேசர்கள் ஏராளமான நன்மைகளை வழங்கினாலும் சரியாக பயன்படுத்தப்படாவிட்டால் அவற்றினால் சில உடல் நல அபாயங்களும் ஏற்படும். லேசர்களுடன் வேலை செய்யும் போது பாதுகாப்பு கண்ணாடிகள் அணிவது மிக முக்கியம் ஏனென்றால் அதிக சக்தி கொண்ட லேசர்கள் சருமத்தில் வெப்ப தீக்காயங்களை ஏற்படுத்தும் கடுமையான கொப்பளங்கள் கூட ஏற்படலாம். அறுவை சிகிச்சையின் போதும் மிகுந்த கவனத்துடன் தான் லேசர் ஒளிக்கற்றைகள் பாய்ச்சப்பட வேண்டும்.