
ஒலிம்பிக் தினம் என்பது விளையாட்டு மற்றும் சுறுசுறுப்புக்கான உலகளாவிய கொண்டாட்டமாகும். ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து வரும் வீரர்கள் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் பதக்கங்களை வென்று அதை நிரூபிக்கவும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பார்கள். உலக ஒலிம்பிக் தினத்தைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் மக்களை விளையாட்டின் மீதான ஆர்வத்தை ஊக்குவிப்பதும், மக்களிடையே விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23-ந் தேதி சர்வதேச ஒலிம்பிக் தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிறுவியதை நினைவுகூரும் விதமாகவும், உலகம் முழுவதும் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
1894-ம் ஆண்டு பியர் டி கூபெர்டின் என்பவர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை நிறுவினார். இது 1896-ம் ஆண்டு ஏதென்ஸில் முதல் நவீன ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு வழிவகுத்தது. இவரே `நவீன ஒலிம்பிக்கின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.
1948-ம் ஆண்டு நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 41-வது அமர்வில், உலக ஒலிம்பிக் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. 42-வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வில் அந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. வயது, பாலினம், விளையாட்டுத் திறன் ஆகியவற்றை பொருட்படுத்தாமல், உலகம் முழுவதும் உள்ள மக்கள் விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும் என இந்த தினம் ஊக்குவிக்கிறது. இந்த நாளில் கண்காட்சிகள், பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள், அனைத்து நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் கல்வி கருத்தரங்குகள், ஒலிம்பிக் கொள்கைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.
ஒலிம்பிக் போட்டி சின்னத்தில் உள்ள ஐந்து வண்ண வளையம், அனைத்து நாடுகளின் தேசியக் கொடிகளிலும் ஒரு வளையத்தில் இருப்பது போல குறைந்தது ஒரு நிறமாவது கண்டிப்பாக இருக்கும். இதுவரை, ஒலிம்பிக் போட்டிகள் 23 வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் தினத்தன்று, விளையாட்டின் மூலம் உலகை சிறந்த இடமாக மாற்றும் ஒலிம்பிக் இயக்கத்தின் நோக்கத்தை நாம் கொண்டாடுகிறோம். நாம் விளையாடும் போது, அது நம் மனதையும் உடலையும் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது.
விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடு என்பது ஆரோக்கியமான உடல்கள், ஆரோக்கியமான மனம் மற்றும் மீள்தன்மை கொண்ட சமூகங்களுக்கு குறைந்த விலை, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் கருவியாகும். சர்வதேச ஒலிம்பிக் தினக்கொண்டாட்டத்தின் போது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் விளையாட்டு போட்டிகள் மற்றும் விளையாட்டு சம்பந்தமான செயல்பாடுகளில் பங்கேற்கின்றனர்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC), அபினவ் பிந்த்ரா அறக்கட்டளை மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து (ஜூன் 23) இன்று நாடு முழுவதும் ஒலிம்பிக் தினத்தை #Let’s Move + 1, India! என்ற கருப்பொருளுடன் கொண்டாடவுள்ளது. இந்த கருப்பொருள் ஒன்றாகச் செல்வதால் கிடைக்கும் மகிழ்ச்சி மற்றும் உந்துதலை எடுத்துக்காட்டுகிறது. இந்தியா முழுவதும் உள்ள மக்களை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த விளையாட்டின் சக்தியை அனுபவிக்க அழைக்கிறது. விளையாட்டு என்பது விளையாடுவதை விட, இது மற்றவர்களுடன் நேரத்தை செலவிடவும், இணைக்கவும், சமூகத்தை உருவாக்கவும் ஒரு வாய்ப்பாகும்.