இரை தேடுவதோடு இறையையும் தேடு!

ஆகஸ்ட் 25, கிருபானந்த வாரியார் பிறந்த நாள்
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
Published on

குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்த ஆன்மிகச் சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியார். ‘கிருபானந்த வாரி’ என்பது முருகப்பெருமானின் பெயர்களில் ஒன்று. இந்தப் பெயரைக் ‘கிருபை’ என்றால் கருணை என்றும், ‘ஆனந்தம்’ என்றால் இன்பம் என்றும், ‘வாரி’ என்றால் பெருங்கடல் என்றும் பிரித்துப் பொருள் கொள்ளலாம். இந்தப் பெயருக்கேற்ப கருணையே உருவாகப் பிறரை தனது சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தவர் கிருபானந்த வாரியார் என்றால் அது மிகையில்லை.

வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்த செங்குந்த வீர சைவ மரபினரான மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியருக்குப் பிறந்த பதினொறு குழந்தைகளில் 1906ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதியில் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் கிருபானந்த வாரியார்.

இவருக்கு மூன்று வயதானபோது, இவரைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. இவரது தந்தையே இவருக்குப் பாடங்களைக் கற்பிக்கத் தொடங்கினார். இவர் தந்தை இவருக்கு இளம் வயதிலேயே நன்னூல் முதலான இலக்கண நூல்களையும், தேவாரம், நளவெண்பா, ஔவையாரது நூல்கள், திருப்புகழ் கீர்த்தனைகள் போன்ற நூல்களையும் பாடம் சொல்லிக் கொடுத்து, மனப்பாடம் செய்து ஒப்பிக்கச் செய்தார். வரலாற்றுப் பாடல்களையும் கற்பித்தார். இவருக்குப் பன்னிரண்டு வயது நிரம்பியபோதே, தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்த புராணம், கம்ப ராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் இருந்த பதினாயிரம் பாடல்கள் வரை மனப்பாடம் ஆகிவிட்டன. இவர் சிறு வயதிலேயே, கற்றறிந்த புலவருக்குக் கூடக் கடினமாக இருக்கும் அஷ்டநாக பந்தம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலான பந்தங்கள், சித்திரக் கவிகள் போன்றவை இயற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்த வாரியாரின் தந்தை மல்லையதாசருக்கு ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டது. அந்தச் சொற்பொழிவிற்குத் தந்தைக்கு பதிலாகப் பதினெட்டே வயதான வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், ‘மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒப்புக்கொண்டு, தான் வராமல் அவரது இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே’ என்று வருத்தப்பட்டனர். அன்று வாரியார் முதன்முதலாகச் செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய் விட்டனர். வாரியாரின் எளிமையான உரைநடையிலான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. படிப்பறிவே இல்லாதவர்கள் கூட, அந்தச் சொற்பொழிவை எளிமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. முன்பு மல்லையதாசர் வரவில்லையே என்று வருத்தப்பட்ட சொற்பொழிவு ஏற்பாட்டாளர்கள் வாரியாரை வாழ்த்தி அனுப்பினர். இப்படித்தான் தொடங்கியது வாரியாரின் சொற்பொழிவுப் பயணம்.

வாரியாருக்குப் பத்தொன்பதாம் வயதில் அமிர்தலட்சுமி என்பவரைத் திருமணம் செய்து வைத்தனர். இத்தம்பதியருக்குக் குழந்தை ஏதும் இல்லை. வாரியாருக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் விருப்பம். இவருடைய சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் முன்பகுதி குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். இவர் தனது சொற்பொழிவின் இடையிடையே குழந்தைகளிடம் எளிமையான சில கேள்விகளைக் கேட்பார். இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதிலளிக்கும் குழந்தைகளுக்கு நெற்றியில் திருநீறு பூசி, சிறிய அளவிலான கந்தசஷ்டி கவசப் புத்தகம் ஒன்றும், சிறிய திருநீறுப் பொட்டலம் ஒன்றும் பரிசாக அளிப்பார். இந்தப் பரிசைப் பெற குழந்தைகளிடையே மிகுந்த போட்டி இருக்கும்.

என் சிறு வயதில் தேனி, வரசித்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி திருவிழாவில் நடைபெற்ற ஆன்மிகச் சொற்பொழிவில் கிருபானந்த வாரியாரின் கேள்விக்கு இரண்டு ஆண்டுகள் சரியான பதிலைச் சொல்லி இருமுறை இந்தப் பரிசைப் பெற்றிருக்கிறேன் என்பதை இங்கு மகிழ்வுடன் நினைவு கொள்கிறேன்.

இதையும் படியுங்கள்:
சந்திராஷ்டம பயத்தைப் போக்கும் அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர்!
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

இவருடைய சொற்பொழிவுகளில் பெண்கள் கூட்டத்துக்கும் குறைவு இருக்காது. இவர் எப்போதும் பெண்களைக் குறைவாகப் பேசுவதை விரும்ப மாட்டார். ஒவ்வொரு கூட்டத்திலும் பெண்களை அடிமையாக நினைக்கும் ஆண்களை எச்சரிக்கும் விதமாக, ‘மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக் கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது’ என்று சொல்வார். குழந்தைகளுக்குப் பெற்றெடுத்த தாயின் பெயரையே முதலெழுத்தாகப் (இன்சியலாக) போட வேண்டும் என்று பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக முதன் முதலில் குரல் கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு.

வாரியாருக்கு 23 வயதான போது, சென்னை, ஆனைக்கவுனி தென்மடம் வரதாச்சாரியார் என்பவரிடம் நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்ற இவர், தம்முடைய சொற்பொழிவுகளில், திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான நூல்களில் இருந்து பல பாடல்களைச் சொற்பொழிவிற்கேற்ப நல்லிசையுடன் சிறப்பாகப் பாடுவார். இப்பாடல்களைக் கூட்டத்திலிருப்பவர்கள் அனைவரும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

இவருடைய ஆன்மிகம் மற்றும் இலக்கியச் சொற்பொழிவுகளில் இசை மட்டுமில்லை, நடைமுறைச் செய்திகளும், நகைச்சுவைகளும் அதிகமிருக்கும். இவரது சொற்பொழிவின் இடையிடையே இவர் சொல்லும் குட்டிக் கதைகள் அனைவரையும் கவர்வதாக இருக்கும். இதனால் இவருடைய சொற்பொழிவைக் கேட்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருந்தது. இந்தக் கூட்டம் இந்தியாவில் மட்டுமில்லை, தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசித்து வந்த வேறு சில நாடுகளிலும் இருந்தது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து என்று  பல நாடுகளில் இவர் சொற்பொழிவாற்றி இருக்கிறார். இவரது சொற்பொழிவுகளில் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வெளியிடப்பட்டிருக்கின்றன.

தமிழ்க்கடவுள் முருகனை தனது முதற்கடவுளாகக் கொண்டிருந்த வாரியார், தனது சொற்பொழிவுகளில் தமிழின் பெருமையைப் பல வேளைகளில் உயர்த்திக் காட்டியிருக்கிறார். இவர் தனது சொற்பொழிவைத் தொடங்கும் போதெல்லாம் முருகப் பெருமான் நினைவாக ‘வயலூர் எம்பெருமான்…’ என்று கூறித்தான் தனது சொற்பொழிவைத் தொடங்குவார்.

சைவ சித்தாந்தத்தில் பெரும் புலமை பெற்ற இவர், அபரிமிதமான நினைவாற்றலும், நாவன்மையும் பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் பெரும் புலமை பெற்றவர்.

ஒரு சொற்பொழிவில், ஒரு பாடலைப் பாடி, இந்தப் பாடல் முழுவதும் ஒரு மாத்திரையிலேயே அருணகிரிநாதர் எழுதியிருக்கிறார் என்று சொன்னார். அந்தப் பாடலில் ‘அம்மை’ என்று ஒரு சொல் வந்தது. சொற்பொழிவு முடிந்து திரும்புகையில் “சுவாமி! ‘அம்மை’யில் வரும் ‘ஐ’ இரண்டு மாத்திரையாயிற்றே!” என்று ஒருவர் கேட்டார். அதற்கு உடனே வாரியார், "ஆம், ‘ஐ’க்கு 2 மாத்திரைதான். ஆனால், இந்த 'ஐ'க்கு பெயர் ஐகாரக் குறுக்கம், எனவே ஒரு எழுத்துதான்" என்று விளக்கினார்.

இவர் கூறும் விளக்கங்களைக் கேட்டுக் கல்வியில் சிறந்த புலவர்களும் தங்களுக்கு இது தெரியாதே என்று வியந்து பாராட்டி இருக்கின்றனர். ‘வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன'’ என்று அறிஞர்கள் இவரைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள்.

கவியரசர் கண்ணதாசன் ஒரு முறை இவரைச் சந்தித்தபோது, ‘தாமரைக் கண்ணால் பெண்கள் நோக்கினர்’ என்று கம்பர் கூறுகிறார். “தாமரையோ செவ்வண்ணம் உடையது. மது அருந்தியவருக்கும், அளவுக்கு அதிகமாகச் சினம் கொண்டவருக்கும்தானே சிவந்த கண்கள் இருக்கும். அது எப்படிப் பெண்களுக்குப் பொருந்தும்?” என்று கேட்டார். அவரிடம் வாரியார், ‘‘தாம் அரைக் கண்ணால்’ என்று பிரித்துப் பொருள் கொள்ளலாம் அல்லவா?” என்று எளிமையாக விளக்கம் கூறக் கவியரசர் அசந்துபோனார்.

இதையும் படியுங்கள்:
பரசுராம க்ஷேத்திரத்தில் பகவான் ஸ்ரீ உன்னி கிருஷ்ணன்!
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

வாரியார் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் மட்டுமில்லாமல், எழுத்துத் துறையிலும்  சிறப்பு பெற்று விளங்கினார். ‘திருப்புகழ் அமிர்தம்’ எனும் மாத இதழை சுமார் முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். இந்த இதழில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாக வெளியிடப்பட்டன. சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராம காவியம், மகாபாரதம் போன்ற 150க்கும் அதிகமான தலைப்புகளில் இவர் எழுதிய நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

இவர் தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகவி’ எனும் தமிழ்த் திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். ‘துணைவன், திருவருள், தெய்வம்’ போன்ற சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்துமிருக்கிறார்.

தனி மனித ஒழுக்கத்தையும், பல நல்ல அறிவுரைகளையும் வழங்கிய வாரியார் அதன்படி வாழ்ந்தும் காட்டினார். தன் வாழ்நாள் முழுவதும் கோயில், பூசை, சொற்பொழிவு என்று தனக்கென ஒரு பாதையை உருவாக்கி அதன் வழியேச் சென்று கொண்டிருந்தார். இவரிடம் நினைவுக் குறிப்புப் புத்தகத்தில் (ஆட்டோகிராப்) கையெழுத்து வேண்டுவோரிடம் கூட, ‘இரை தேடுவதோடு இறையையும் தேடு!’ என்ற வாக்கியத்தை எழுதியே கையெழுத்து இடுவார்.

கலைமாமணி, திருப்புகழ் ஜோதி, பிரவசன சாம்ராட், இசைப்பேரரசர், அருள்மொழி என்று பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்ற இவர் 1993ம் ஆண்டில் அக்டோபர் மாதம் லண்டன் நகருக்குச் சொற்பொழிவாற்றச் சென்றார். அங்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுக் கொண்டு, நவம்பர் மாதம் 6ம் தேதி லண்டனிலிருந்து திரும்பினார். நவம்பர் 7ம் தேதி அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது அவர் உயிர் பிரிந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com