
80களில் வெளியான தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்தால், கதாநாயகர்கள் பெரும்பாலும் வங்கி மேலாளர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். ஆம், அந்தக் காலத்தில் வங்கி மேலாளர் பணி உயர்ந்த ஊதியமும், மதிப்பும் தரக்கூடிய மரியாதைக்குரிய தொழிலாகக் கருதப்பட்டது. ஆனால், 1990களில் இந்தப் போக்கு மாறி, தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) பொறியாளர் என்கிற பதவி அந்த இடத்தை பிடித்துக்கொண்டது.
இந்த மாற்றத்தை முதன்முதலில் திரையில் பிரதிபலித்தவர் இயக்குநர் மணிரத்னம். அவரது ‘ரோஜா’ (1992) திரைப்படத்தில், கதாநாயகன் அரவிந்தசாமி ஐ.டி. துறையில் பணி புரிபவராக நடித்திருப்பார். அன்று முதல் இன்று வரை, ஐ.டி. தொழில் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் மதிப்பு மிக்கதாகவே கருதப்படுகிறது.
ஆனால், சமீப காலமாக இந்தியாவில் ஐ.டி. துறையில் வேலை இழப்பு குறித்த செய்திகள் பரவலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவாதிக்கப்படுகின்றன. உதாரணமாக, டி.சி.எஸ். நிறுவனம் ஏறத்தாழ 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக வந்த செய்தி பலர் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.
வேலை தேடுபவர்கள் மட்டுமன்றி கணினி பயிலும் மாணவர்களிடையேயும் இந்த செய்தி கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நிலைமை இருக்க, ஜெர்மனியில் வேலைவாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை பார்ப்போமா?
ஜெர்மனியின் ஐ.டி. துறையில் வேலை குறைப்பு செய்திகள் ஆங்காங்கே தென்பட்டாலும், புதிதாக ஆள் எடுக்கும் வேலையும் நிறைய கம்பனிகளில் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. மற்ற துறைகளை காட்டிலும் ஐ.டி. துறை சமநிலையிலேயே உள்ளது.
அமேசான், 'டெலிவரி ஹீரோ' போன்ற நிறுவனங்களின் ஐ.டி. துறையில் பணி நீக்கங்கள் பதிவாகியுள்ளதாக டெக் க்ரஞ்ச் (Tech Crunch) அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும், சில தொடக்க (Startup) நிறுவனங்கள் 15-20% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக Reddit பதிவுகள் தெரிவிக்கின்றன.
IFO நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிக்கையின்படி, வேலை குறைப்புகள் மெதுவாக இருப்பதோடு, சில துறைகளில் பணியமர்த்தல் அதிகரித்து வருகிறது. ஐ.டி. உள்ளிட்ட சேவைத் துறைகளில் கலவையான சூழல் நிலவுகிறது. அதாவது சில நிறுவனங்கள் ஊழியர்களை குறைக்கின்றன, மற்றவை புதியவர்களை பணியமர்த்துகின்றன.
ஜெர்மனியில் திறமையான ஐ.டி. நிபுணர்களுக்கு இன்னமும் பற்றாக்குறை இருக்கத்தான் செய்கிறது. 'ப்ளூ கார்டு' திட்டம் இன்னமும் நடைமுறையில் இருப்பதிலிருந்தே இதை அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், 2023 ஆம் ஆண்டில் மட்டும் 1,49,000 ஐ.டி. காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாக ஜின்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாகத்தான், ஜெர்மனி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை ஈர்க்க ‘ப்ளூ கார்டு’ திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நிறைய இந்திய ஐ.டி. நிபுணர்கள் ஜெர்மனிக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
IFO நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 27.1% ஜெர்மன் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக வேலை குறைப்புகளை செய்யலாம் என எதிர்பார்க்கிறது. AI ஆனது சில பணிகளை தானியங்கு மயமாக்கினாலும், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது, குறிப்பாக AI மேம்பாடு, தரவு அறிவியல் (Data Science), மற்றும் சைபர் பாதுகாப்பு (Cybersecurity) துறைகளில் தொடர்ந்து வேலைவாய்ப்பு உருவாகிக் கொண்டுதானிருக்கிறது.
ஜெர்மனியை பொறுத்தவரையில் சில்லறை விற்பனை (Retail) மற்றும் கட்டுமானத் துறைகளில் வேலை குறைப்புகள் தொடர்ந்து நிகழ்ந்தாலும், ஐ.டி. துறை ஒப்பீட்டளவில் நிலையானதாகவே இருக்கிறது. இருப்பினும், உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை மற்றும் ஜெர்மனியின் பொருளாதார சவால்கள் நிறுவனங்ககளுக்கு பணியமர்த்தலில் எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டேதானிருக்கின்றன.
மொத்தத்தில் நாம் திறமையாக இருக்கும் பட்சத்தில் வாய்ப்புகள் எப்போதும் கதவை திறந்து வைத்து காத்துக்கொண்டே இருக்கின்றன. அதை எட்டிப்பிடிப்பதில் தான் நம் திறமை இருக்கிறது. கிடைக்கும் வரை முயற்சி செய்யுங்கள், கண்டிப்பாக கிடைக்கும்.