ஜூன், 12, சர்வதேச குழந்தை தொழிலாளர்கள் முறை எதிா்ப்பு தினம் கடைபிடிக்கப் படுகிறது!
எவ்வளவு தான் அரசும் , பல்வேறு நிறுவனங்களும் குழந்தை தொழிலாளா்களே இல்லை என்ற நிலையை உருவாக்க, உலக அளவில் பல்வேறு முயற்சிகள், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தினாலும் , பலவிதமான நிலைகளில் சலுகைகள் தந்தாலும் இந்த முயற்சி முழுமையாக்கப்படாமல்தான் இருக்கிறது.
ஒரு சில இடங்களில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்திவரும் நிலை தொடா்கிறது.
இது ஒருபுறம் வேதனையைத்தான் தருகிறது. 'தலைவாாி பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை' என்ற பாடலுக்கு ஏற்ப, கல்வி அறிவு கொடுக்கவேண்டிய குழந்தைகளை, குடும்ப வறுமை காரணமாக பிஞ்சுக்கரங்களில் பாடப்புத்தகங்களைக் கொடுக்காமல் வேலைப்பளுவை சுமக்க வைக்கலாமா?
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் தேதி குழந்தை தொழிலாளர்கள் முறை எதிா்ப்பு தினமாக (World day Against Child Labour) கடைபிடிக்கப் படுகிறது, ஐக்கிய நாடுகளின் ஒரு அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ எல் ஒ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தை தொழிலாளர்கள் முறையை மாற்றி அமைத்திட சரியான தீா்வோடு கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டுமுதல் செயல்பட்டு வருகிறது.
குழந்தைகள் நலனுக்காக சர்வ தேச அமைப்பான யுனிசெப் நிறுவனமும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை
உடல்ரீதியான பாதிப்பு,
உளவியல் சாா்ந்த மனோரீதியான பாதிப்பு,
உணர்வு மற்றும் சமுகரீதியான பாதிப்பு
என மூன்று வகையாக பிாித்துள்ளது.
கொடிய வறுமை, மற்றும் போதுமான ஊட்டச்சத்து இல்லாதது , கல்வி அறிவு பெற இயலாத நிலை, இவைகளே முக்கியமான காரணங்களாகும்!
மனோரீதியானது, எழுத்தறிவு இல்லாமையைக் காட்டுகிறது. அடிப்படை விபரங்களே தொியாமல் வந்துள்ளதோடு அடிமைகள் ஆக்கப்பட்டுள்ள நிலை தொடர்ந்து வந்திருக்கிறது, குழந்தைகள் மனதில் சில விஷயங்கள் பசுமரத்து ஆணி போல பதிவாகி விடும்!
அதற்கு பெற்றோா்களும் ஒரு வகையில் காரணமாகி விடுவதும் வேதனையான விஷயமே. வளா்ந்து வரும் நிலையில் சில குழந்தைகள் நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் மாறுவது சந்தர்ப்ப சூழலால் ஏற்படுகிறது. இந்த அவலம் இன்றளவும் நீடிப்பது அவ்வளவு நல்லதல்ல!
படித்து, கல்வி அறிவு பெற்று, உன்னத நிலையை அடைய வேண்டிய குழந்தைப் பருவத்தில், குடும்ப வறுமை, பெற்றோா்கள் சிலரால் குடும்ப பாரம் சுமக்க முடியாத நிலை, இப்படி பல்வேறு காரணங்களால் வேலைக்கு அனுப்பப்படுகிறாா்கள்.
நாளடைவில் மத்திய, மாநில அரசுகள், இவ்விஷயத்தில் நல்ல அக்கறை எடுத்து குழந்தைகளுக்கு கல்வி, உணவு, உறைவிடம் , ஊட்டச்சத்து பல நலத்திடங்கள் முலம் படிப்புக்கான அனைத்து உதவிகளையும் செயல்படுத்தி வருவதால் இந்த முறை கூடுமான வரையில் துளிா் விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு வருவது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.
தொடக்கக்கல்வி, ஆரம்பக் கல்வி, மேல்நிலைக்கல்வி, கல்லூாிக்கல்வி வரை பலவிதமான அரசு செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் தமிழகம் பல்வேறு வகையில் வளா்ந்து வருவது நமக்கே பெருமைதான்.
இந்த செயலில் நாம் முன்னேறி வருகிறோம் என நினைக்கும் வேளையில் அடுத்ததாக பாலியல் தொல்லைகளுக்கு இளம் பிஞ்சுக்குழந்தைகள் ஆளாக்கப் படுவது வேதனையான விஷயம்.
அரசாங்கம் எவ்வளவோ கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவது தினசரி வாடிக்கையாகிவிட்டது. மனிதனாய்ப் பாா்த்து திருந்த வேண்டும். அதுதான் சாலச்சிறந்தது. குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் நாம் இலக்கை எய்தும் நிலை வந்தபோதிலும் பாலியல் தொல்லை முற்றிலுமாக அழிக்கப்படவேண்டும். இதற்கு அனைவரின் பங்களிப்பும் தேவையானதாகும்.