இந்த உலகக் குருதிக் கொடையாளர் நாளில் (World Blood Donor Day) குருதிக் கொடை குறித்தும், குருதிக் கொடையின் தேவைகள் குறித்தும், குருதிக் கொடை செய்வதற்கான தகுதிகள் குறித்தும், குருதிக் கொடையால் தானம் பெறுபவர் மட்டுமின்றி, தானமளிப்பவர்கள் அடையும் நன்மைகளையும் அறிந்து கொள்வோம்...!
உலகச் சுகாதார நிறுவனம், குருதிக் கொடை (இரத்த தானம்) செய்வோரைச் சிறப்பிக்கும் விதமாக, ஏபிஓ குருதிக் குழு அமைப்பைக் கண்டுபித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்சுடெய்னெரின் (Karl Landsteiner) பிறந்த நாளான ஜூன் 14 ஆம் நாளை உலகக் குருதிக் கொடையாளர் நாளாகக் (World Blood Donor Day) கொண்டாடி வருகிறது.
குருதிக் கொடை அல்லது இரத்த தானம் (Blood Donation) என்பது ஒருவர் தனது குருதியைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ள தாராளமான மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது.
உடல் நலத்துடன் இருக்கும் ஒருவரின் உடலில் 5 முதல் 6 லிட்டர் வரை குருதி உள்ளது. குருதிக் கொடை அளிப்பவர் உடலிலிருந்து ஒரு நேரத்தில் 300 மி.லி குருதி வரை எடுக்கப்படுகிறது.
தானமாகக் கொடுக்கப்பட்ட குருதியின் அளவு இரண்டே வாரங்களில், நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எந்தவிதப் பாதிப்புமின்றி குருதிக் கொடை செய்யலாம்.
குருதிக் கொடை செய்வதற்கு 5 முதல் 10 நிமிடங்கள் போதுமானது. இருப்பினும் குருதிக் கொடை கொடுத்தவர்கள் 15 நிமிடங்கள் வரை சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
குருதிக் கொடை செய்வதால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்படச் சிறிதும் வாய்ப்பில்லை.
குருதிக் கொடையின் தேவைகள்:
அறுவைச் சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் குருதி இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு குருதிக் கொடை தேவைப்படுகிறது. சிலர் தன்னார்வத்துடன் குருதிக் கொடை செய்ய முன் வருகின்றனர். சிலர் சமூக சேவை அமைப்புகளின் வழிகாட்டுதலின் பேரில் குருதிக் கொடை செய்து வருகின்றனர்.
* ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கொடையாகப் பெறப்படும் குருதியின் மொத்தத் தேவை சுமார் 4 கோடி யூனிட்கள் (1 யூனிட் குருதியின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்) எனும் அளவில் இருக்கிறது. ஆனால், கொடையாகப் பெறப்படும் குருதியின் அளவு பத்தில் ஒரு பங்காகவே இருந்து வருகிறது.
* குருதி மனிதனின் வாழ்கையில் மிகவும் உயரிய பரிசாகும். குருதிக்கு மாற்று எதுவும் இல்லை.
* ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்குக் குருதி தேவைப்படுகிறது.
* ஒவ்வொரு நாளும் 38 ஆயிரத்துக்கும் அதிகமான குருதிக் கொடையாளிகளின் தேவை இருக்கிறது.
* O எனப்படும் குருதிப் பிரிவே அதிகம் தேவைப்படும் பிரிவாக இருக்கிறது.
* ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்குப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இவர்களில் பலருக்கும் குருதி தேவைப்படுகிறது.
* கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும் குருதி தேவையானதாக இருக்கும்.
* விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கு அதிக அளவில் குருதி தேவையானதாக இருக்கிறது.
குருதிக் கொடை செய்வதற்கான தகுதிகள்:
* குருதிக் கொடை செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதிற்கு அதிகமில்லாமலும் இருத்தல் வேண்டும். சில நாடுகளில் 70 வயது வரை குருதிக் கொடை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
* குருதியின் ஹிமோகுளோபின் அளவு ஆண்களுக்கு 13.5 முதல் 17.5 மி.கி./டெ.லி. அளவும், பெண்களுக்கு 12 முதல் 15.5 மி.கி/டெ.லி அளவும் இருக்க வேண்டும்.
* குருதிக் கொடை செய்வபரின் எடை 50 கிலோவிற்குக் குறைவின்றியும் 160 கிலோவிற்கு அதிகமில்லாமலும் இருக்க வேண்டும்.
* ஆண், பெண் இருபாலரும் குருதிக் கொடை செய்யத் தகுதியுடையவர்கள்.
* எந்த ஒரு தொற்று நோய்ப் பாதிப்பும் ஏற்படாதவராக இருக்க வேண்டும்.
* கடந்த ஓராண்டுக்குள் எந்தத் தடுப்பு மருந்தும் பயன்படுத்தி இருக்கக் கூடாது.
குருதிக் கொடை அளிப்போர் அடையும் நன்மைகள்:
* குருதிப் பிரிவு, குருதியில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு குருதிக் கொடையளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
* குருதிக் கொடை செய்வது பிறர் நலன் காப்பதற்கு மட்டுமல்ல, தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல, தன் நலன் மேம்படுவதற்கும் உதவும்.
* குருதிக் கொடை செய்வது இயற்கையாகப் புதிய குருதி உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.
* தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக குருதிக் கொடை செய்பவர்களுக்கு மாரடைப்பு (Heart Attack) ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.
* ஹிமோகுளோபின் (Hemoglobin) அளவினைக் கட்டுப்படுத்தவும் சமச்சீராகப் பராமரிக்கவும் குருதிக் கொடை உதவுகிறது.
* குருதிக் கொடை செய்வதன் மூலம் குருதி அழுத்தம் சீராகப் பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றன.
* குருதிக் கொடை செய்வதன் மூலம் எந்தப் பின் விளைவுகளும் ஏற்படாது.
பிறகென்ன, உடனேக் கிளம்புங்கள். அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் போன்றவற்றிலிருக்கும் குருதிக் கொடைப் பிரிவில் இன்றேக் குருதிக் கொடை அளித்து, குருதி தேவைப்படுவோரது உயிர் காக்க உதவுவோம்…!