World Sickle Cell Day
World Sickle Cell Daycredits to indias.com

June 19th - World Sickle Cell Day – உலக அரிவாள் சிவப்பணு நாள்!

Published on

அரிவாள் சிவப்பணு நோயின் உலகளாவிய தாக்கத்தை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் பொது அவை 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஜூன் 19 ஆம் நாளை உலக அரிவாள் சிவப்பணு விழிப்புணர்வு நாளாகக் கொள்ளும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

அதனைத் தொடர்ந்து, உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று, உலக அரிவாள் சிவப்பணு நாள் (World Sickle Cell Day) அனுசரிக்கப்பட்டு வருகிறது; ஐக்கிய நாடுகள் (United Nations) அவை மற்றும் உலகச் சுகாதார அமைப்பு (World Health Organisation) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்நாளானது, அரிவாள் சிவப்பணு நோயால் (Sickle Cell Disease) பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் நடவடிக்கைக்கான அவசரத் தேவையின் முக்கியமான நினைவூட்டல் நாளாக இருக்கிறது. அரிவாள் சிவப்பணு நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன், இந்நாளில், இந்நோயைப் பற்றியப் பொது அறிவை அதிகரித்தல், ஆரம்பகால நோயறிதலைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சையின் தரத்தை மேம்படுத்துதல், தொடர்ந்து அவர்கள் உடல் நலத்தைக் காக்கக் கவனம் செலுத்துதல் என்று பல்வேறு செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

அரிவாள் சிவப்பணு நோய் (SCD) என்பது மரபணு சிவப்பு இரத்த அணு நோய்களின் ஒரு குழுவாகும். இது சிவப்பு இரத்த அணுக்களின் உருவ அமைப்பை மாற்றியமைக்கிறது. அதனால் உடல் முழுவதும் ஆக்சிஜனை விநியோகிக்கும் திறனைப் பெருமளவில் பாதிக்கிறது. ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் ஹீமோகுளோபின் எனப்படும் புரதம் இரத்தச் சிவப்பணுக்களில் காணப்படுகிறது. ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் வட்ட வடிவில் இருக்கும். அரிவாள் சிவப்பணு நோயுடன் கூடிய சிவப்பு இரத்த அணுக்கள் ஒரு பிறை அல்லது 'அரிவாள்' வடிவத்தை எடுக்கின்றன.

இதன் தாக்கத்தால், அரிவாள் சிவப்பணுக்கள் தொடக்கத்தில் இறந்து விடுகின்றன. இது இரத்த சிவப்பணுக்களில் நிலையான பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றன. இதனால், பக்கவாதம், இருதயப் பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனைகள், கர்ப்பக்காலச் சிக்கல்கள் போன்ற நிலைகளில் தொற்று மற்றும் உயிரிழப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன. அரிவாள் சிவப்பணு இரத்த சோகைக்கு எந்தச் சிகிச்சையும் இல்லை. அரிவாள் சிவப்பணு நோயாளிகள் இந்த நிலையை ஆரம்பத்திலேயேக் கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெற்றுக் கொண்டால், நீண்ட காலம் வாழ முடியும்.

இதையும் படியுங்கள்:
நிலவளம் காக்க ஒன்றிணைவோம்... பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவோம்!
World Sickle Cell Day

உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை, குறிப்பாக, ஆப்பிரிக்க, மத்திய தரைக்கடல், மத்திய கிழக்கு மற்றும் இந்திய வம்சாவளியினரை இந்நோய் பெரிதும் பாதிக்கிறது.

அரிவாள் சிவப்பணு நோய், அதன் அறிகுறிகள், சிக்கல்கள் மற்றும் மரபணு ஆலோசனை மற்றும் பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றிக் கற்பிக்க அரிவாள் சிவப்பணு நாள் எனும் சிறப்பு நாள் உதவுகிறது.

இந்நாள், தனி நபர்களுக்கான அணுகக்கூடிய மற்றும் மலிவான சுகாதாரச் சேவைகளின் அவசியத்தை வலியுறுத்துவதுடன் சிறந்த சுகாதார வளங்களுக்காக வாதிடுகிறது. இந்நோய் பற்றிய புரிதல், நோயறிதல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்த ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது. இந்த நாள் மரபணு சிகிச்சை மற்றும் புதிய மருந்துகள் போன்ற சிறந்த சிகிச்சைகளின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

இந்நோயுள்ள நபர்களை முன்கூட்டியேக் கண்டறிதல் மற்றும் தலையீடு, நோய் முன்னாய்வுச் சோதனைத் திட்டங்கள், இந்நோயுடையவர்களுக்கு பொருத்தமான ஆதரவை வழங்க மரபணு ஆலோசனைகளை வலியுறுத்துகிறது.

logo
Kalki Online
kalkionline.com