சேலம் மாவட்டம் எடப்பாடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா, நேற்றிரவு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும்போது தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சியை கொண்டுவருவதாக சூளுரைத்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு நேற்றிரவு சென்ற சசிகலா அங்குள்ள சின்னாண்டி பக்தர் சிலை, ராஜாஜி சிலை மற்றும் காமராஜர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் தரிசனம் செய்தபின், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியதாவது:
அதிமுகவுக்கு ஆரம்ப காலத்திலிருந்து கொங்கு மண்டல மக்கள் அமோக வரவேற்பும் ஆதரவும் கொடுத்து வருகின்றனர். புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இந்த அதிமுக இயக்கம் எத்தனையோ இடர்பாடுகள் தாண்டி வளர்ந்து வந்திருக்கிறது. நமது கட்சி ஆட்சிக்கட்டிலில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்காக இயக்கத்தினர் உழைந்தார்கள்.
மக்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுத்தார்கள். அப்படிப்பட்ட தொண்டர்களால்தான் இந்த இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். உண்மை தொண்டர்களின் உறுதுணையுடன் மீண்டும் தமிழகத்தில் புரட்சித் தலைவி அம்மாவின் அதிமுகவின் ஆட்சியை அமைப்பேன்.
-இவ்வாறு சசிகலா உறுதி தெரிவித்துப் பேசினார்..