இந்தியாவில் ஒரே நாளில் 90% அளவுக்கு கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் 4-ம் அலைக்கான சாத்தியக்கூறுகள் உருவாகி இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாரத்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது:
இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று குறைந்த நிலையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் சீனா, தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருவதால் அந்த நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உணரப்பட்ட டெல்லி, மராட்டியத்தில் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், டெல்லியில் கடந்த 15 நாட்களில் மட்டும் 500% அளவிற்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கடந்த 15 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 500% அளவு உயர்ந்துள்ளது.
இதேபோல மற்ற சில மாநிலங்கலிலும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்திருப்பதாக ஆய்வை நடத்திய நிறுவனம் கூறியுள்ளது.
இதையடுத்து இந்தியாவில் 4-வது அலைக்கான சாத்தியக்கூறுகள் தொடங்கியிருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது,தனி மனித இடைவெளி கடைபிடிப்பது போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். தவறினால் மோசமான பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
-இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.