நாடாளுமன்றத்தில் தமிழகம் சார்பாக காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்கு போட்டியிட அதிமுக-வுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய அக்கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினா்கள் 57 பேரின் பதவிக் காலம், வருகிற ஜூன் மாதம் 21-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் நிறைவடைகிறது. இதில் தமிழகம் சார்பாக 6 மாநிலங்களவை இடங்கள் காலியாகின்றன. இந்நிலையில் இந்த 57 இடங்களுக்கான தேர்தல் ஜூன் மாதம் 10-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சி கடந்த 15 ஆம் தேதி அறிவித்தது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் 2 இடங்களுக்கு போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப் படலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்காக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட 50 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.