காலத்தை வென்ற ‘நாகரிகக் கோமாளி’ கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்!

ஆகஸ்ட் 30, என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு தினம்
என்.எஸ்.கிருஷ்ணன்
என்.எஸ்.கிருஷ்ணன்
Published on

திரைப்படங்களில் தனக்கென்று ஒரு பாணியை கையாண்டு, மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். 1908ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி நாகர்கோவிலை அடுத்த ஒழுகினசேரியில் பிறந்தார் என்.எஸ்.கிருஷ்ணன். வறுமையின் காரணமாக நாடகக் கொட்டகையில் சோடா விற்கும் பையனாக தனது ஆரம்பகால வாழ்க்கையைத் தொடங்கினார்.

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணனின் நினைவு தினம் இன்று. இவரது தந்தை பெயர் சுடலைமுத்து பிள்ளை. தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. ஆகும். ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் இவர் அறிமுகமானார். இவரது இரண்டாவது படமான ‘மேனகா’ முதலில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்று கலைவாணரின் நகைச்சுவையை உலகிற்கு அறிமுகம் செய்தது.

திரைப்படங்களில் நகைச்சுவையின் தரம் என்.எஸ்.கிருஷ்ணனின் வருகைக்குப் பிறகு உயர்ந்தது. நகைச்சுவை என்பது வெறும் உடல் மொழியோ வார்த்தை ஜாலங்களோ மட்டுமல்ல, அதைத் தாண்டி மக்களை சிந்திக்கவும் வைப்பது என்பதை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஆணித்தரமாக தமது நடிப்பின் மூலம் இவர் காண்பித்தார். திரையுலகில் வள்ளல் தன்மையுடன் திகழ்ந்தவர் கலைவாணர். ‘என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அதற்கு முழு முதல் காரணம் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான்" என்று மக்கள் திலகம் எம்ஜிஆரால் புகழப்பட்டவர். என்.எஸ்.கிருஷ்ணன் தனது தனிப்பட்ட வாழ்விலும் மனிதநேயத்தைப் பின்பற்றியவர்.

தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா இவர்களுடன் நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தபோதும் தனக்கென்று ஒரு நாடகக் குழுவையும் நடத்தி வந்தவர் இவர். சினிமாவில் பேரும் புகழுடன் இருந்தாலும் நாடகக் குழுவில் உள்ளவர்களின் நலனுக்காக அதைத் தொடர்ந்து நடத்தியவர். சில சமயம் நஷ்டத்தில் இயங்கும் நாடகக் குழுக்களையும் தானே ஏற்று நடத்தி அதை பிரபலப்படுத்துவதும் இவரது மனிதநேயத்தை காட்டியது. என்.எஸ்.கிருஷ்ணன் சிறந்த நடிகர் மட்டுமின்றி, எடிட்டிங், திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுவது என சினிமா துறையில் தேர்ச்சி பெற்றவர்.

கலை என்பது மக்களை மகிழ்விக்க மட்டுமின்றி, சிந்திக்கவும் வைத்து சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கை உடையவர் கலைவாணர். இவர் தனது படங்களில் சுயமரியாதை கருத்துக்களையும், பகுத்தறிவு கருத்துகளையும் பரப்பியவர். பல தலைவர்கள் ஒன்றுசேர்ந்து செய்ய வேண்டிய சமூகப் பணியை தனி ஒருவராக திரைப்படங்களில் நிகழ்த்திக் காட்டியவர். தமிழ் சினிமாவின் முதல் தம்பதி கலைஞர்களான என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் வெற்றி பெற்று இவர்களுக்கு புகழைத் தந்தது.

என்.எஸ்.கிருஷ்ணனடி.ஏ.மதுரம்
என்.எஸ்.கிருஷ்ணனடி.ஏ.மதுரம்

திரையுலகை உலுக்கிய வழக்குகளில் பத்திரிகையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கு முக்கியமானது. இதில்  தியாகராஜ பாகவதர், கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் பட்சிராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு மூவர் மீதும் வழக்கு பதிவானது. ஆரம்பத்திலேயே நாயுடு இதில் விடுவிக்கப்பட்டார். தியாகராஜ பாகவதர் மற்றும் கலைவாணர் இருவரும் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டு பாகவதர் மற்றும் என்.எஸ்.கே இருவரும் நிரபராதிகள் என சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த கலைவாணர் விடுதலையானதும் நடித்த படத்தில் தனது சிறை அனுபவங்களை, ‘ஜெயிலுக்கு போய் வந்த...’ என பாட்டாக பாடி மக்களை மீண்டும் மகிழ்விக்கத் தொடங்கினார்.

இதையும் படியுங்கள்:
இரை தேடுவதோடு இறையையும் தேடு!
என்.எஸ்.கிருஷ்ணன்

என்.எஸ்.கிருஷ்ணன் தமக்குத்தாமே சூட்டிக்கொண்ட பட்டப்பெயர், ‘நாகரிக கோமாளி’ என்பதாகும். ‘நாட்டுக்கு சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தான் ஐயா. ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி நல்ல அழகான ஜதையோடு வந்தான் ஐயா’ என்று தன்னுடைய சொந்தப் படமான ‘நல்ல தம்பி’யில் தம்மைப் பற்றிய கொள்கை முழக்கத்தை ஒரு பாடலின் மூலம் வெளியிட்டவர்.

ஒரு சமயம் சென்னை வானொலியில் உரையாற்றும்பொழுது, "என் கடன் களிப்பூட்டல்" என்று கூறிய அவர், தனது வாழ்விலும் சரி, திரையுலக வாழ்விலும் சரி நகைச்சுவை உணர்வுக்கு தந்த இடம்  முக்கியமானது. ‘சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு’ என்ற பாடல் ஒன்றே கலைவாணரின் நகைச்சுவை கலந்த சிந்தனைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. நகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என்.எஸ்.கிருஷ்ணன் 1957ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி தன்னுடைய 49வது வயதில் காலமானார். தமிழக அரசு அவரது நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு ‘கலைவாணர் அரங்கம்’ எனப் பெயர் சூட்டியது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கி, பிறர் மனதை புண்படுத்தாமல் நகைச்சுவையைக் கையாண்ட அற்புதமான கலைஞன் என்.எஸ்.கிருஷ்ணனை இந்நாளில் நினைவு கூறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com