கலாக்ஷேத்ராவும் ருக்மணி தேவியின் ஆன்மாவும்!

கலாக்ஷேத்ராவும் ருக்மணி தேவியின் ஆன்மாவும்!
Published on

கலாக்ஷேத்ரா குறித்து இன்று ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருக்கும் பரபரப்பான குற்றச்சாட்டுகளின் முகாந்திரம், அதற்கான போராட்டம், விசாரணை, சட்ட நடவடிக்கைகள் குறித்து முதலில் அறிந்து கொள்வோம். பிறகு ருக்மணி தேவி குறித்தும் நாம் கண்டிப்பாக அறிந்து கொண்டாக வேண்டும். ஏனெனில் கலாக்ஷேத்ரா மீது இன்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிக அதிர்ச்சிகரமானவை என்ற போதிலும், நாம் அவற்றை மட்டுமே வைத்து கலாக்ஷேத்ராவை எடை போட்டு விட முடியாது.

காரணம், மாணவிகளின் சட்டப்போராட்டம் நியாயமான முறையில் தீர்த்து வைக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் அவை நிச்சயம் நம் நினைவுகளில் இருந்து மறைந்து போகலாம். ஆனால் ஒரு நுண்கலை நிறுவனம் எனும் வகையில் இதுவரையிலும் கலாக்ஷேத்ரா கடந்து வந்த பாதை என்பது அதை நிறுவிய ருக்மணி தேவியின் ஆன்மாவுடன் தொடர்புடையது. அதற்கு களங்கம் நேர்வது தான் இவ்விவகாரத்தின் மிகப்பெரிய அவலமாகக் கருதப்படுகிறது.

இன்று இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் கலாக்ஷேத்ரா மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட ஹரி பத்மன் உட்பட நால்வர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டாகி விட்டது!

ஆயினும் கலாக்ஷேத்ராவின் நற்பெயருக்கு நேர்ந்த களங்கம் என்பது இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தை ஒட்டிய அதன் நீண்ட நெடிய வரலாற்றில் ஒரு கரும்புள்ளியே! என்பதில் ஐயமில்லை.

இந்தக் கரும்புள்ளியை நீக்கி நற்பெயரை மீட்டெடுப்பார்களா? அல்லது இன்றைய அவசர உலகின் எண்ணற்ற பரபரப்புகளைப் போன்றே இதுவும் அப்படியே சவசவத்துப் போகுமா? என்பதே எண்ணற்றோரின் கேள்வி!

கலாக்ஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரம்...

சென்னையில் உள்ள கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் மாணவியர் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நான்கு பேரில் ஒருவரான ஹரி பத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது மார்ச் 31 வெள்ளிக்கிழமை, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்), பிரிவு 506 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் பிரிவு 4 (பெண்களைத் துன்புறுத்துவதற்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனடிப்படையில் ஹரி பத்மன் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கலாக்ஷேத்ரா என்பது மத்திய அரசின் நிதியுதவி பெறும் ஒரு நிறுவனம். அதை நிறுவியவரான திருமதி ருக்மணி தேவி அருண்டேல் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகளை முன்னிட்டு இந்நிறுவனம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக பற்பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தமிழகத்தின் கலை அடையாளங்களில் ஒன்றாக மிகவும் பெருமைக்குரிய நுண்கலைக் கல்லூரிகளில் ஒன்றாக இதுவரையிலும் அடையாளம் கண்டிருந்த இந்த நிறுவனம் தற்போது நச்சு கலாச்சாரத்தை பரப்புவதாக அங்கு பயிலும் பல மாணவ,மாணவியர் குற்றம் சாட்டியுள்ளனர், இத்தகைய குற்றச்சாட்டிற்கு காரணமாக அவர்கள் குறிப்பிடுவது நடன பேராசிரியர்களான ஹரி பத்மன், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத் ஆகிய நால்வரையே! இவர்கள் மீது மாணவிகள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை கூறி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கூட அவர்கள் மீது இதுவரையிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதே மாணவிகளின் தொடர் போராட்டத்துக்கான முக்கிய காரணமாக இருந்து வந்தது.

கலாக்ஷேத்ராவில் நீண்டகாலமாக அரங்கேறி வந்த இந்த பாலியல் துன்புறுத்தல் விவகாரங்கள் விஸ்வரூபமெடுத்து இனி இதை நீடிக்க விடக்கூடாது எனத் தீர்மானித்து கல்லூரியின் பழைய மற்றும் இன்றைய மாணவ,மாணவிகள் ஒருங்கிணைந்து குற்றம்சாட்டப்பட்ட நால்வர் மீது நடவடிக்கை கோரி இணையதளத்தில் ஒரு கையெழுத்துப் பிரச்சாரத்தை தொடங்கினர். அதில் 100 க்கும் மேலே புகார்கள் பதிவு செய்யப்பட்டன. அத்துடன் நேரடியாகப் பாதிக்கப்பட்ட இரு மாணவிகள் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் எனும் உறுதிமொழியின் அடிப்படையில் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை துணிந்து புகாராக காவல்துறையில் பதிவு செய்தனர்.

இதையொட்டி தேசிய மகளிர் ஆணையத் தலைவி இந்த விவகாரத்தில் தலையிட்டு, தங்களது பங்காக முறையான விசாரணை கோரி காவல்துறையினரிடம் எச்சரிக்கை கலந்த கோரிக்கையை முன் வைத்தார். தமிழ்நாடு காவல்துறையினர் இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் நேரடியாக மகளிர் ஆணையமே இந்த விஷயத்தைக் கையில் எடுத்து மாணவிகளுக்கு நீதி கிடைக்கப் பாடுபடும் என்று தெரிவித்திருந்தார்.

அதன் பதில் வினையாக தேசிய மகளிர் ஆணையம் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட சில நாட்களுக்குப் பிறகு நேற்று மார்ச் 31 வெள்ளிக்கிழமை காலை, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் கலாக்ஷேத்ராவுக்குச் சென்றார்.

மாணவர்கள் மார்ச் 30 அன்று தேர்வுகளை புறக்கணித்துவிட்டு வளாகத்தில் தங்கி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரவு முழுவதும் போராட்டத்தை நடத்தினர். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் பேசியதுடன், அவை உண்மை என கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மாணவிகளின் தொடர் போராட்டத்துக்கான நல்விளைவாக இப்போது இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மற்றும் தமிழக மகளிர் ஆணையத் தலைவி ஆகியோரின் தலையீடு மற்றும் விசாரணைக்குப் பின்னர் கலாக்ஷேத்ரா நடன ஆசிரியர் ஹரி பத்மன் மீது சென்னை போலீசார் பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு ஆதரவாக பிரபல நாட்டியக் கலைஞர் அனிதா ரத்தினத்தின் ட்வீட்…

இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே பிரபல நாட்டியக் கலைஞரான அனிதா ரத்னம், பாதிக்கப்பட்ட மாணவிகள் பக்கமே நின்று அவர்களுக்காக குரல் கொடுத்தது முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் ட்விட்டரில் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்துப் பதிவுகளை எழுதி வந்தார்.

“மாணவிகளின் குரலில் உண்மை இருக்கிறது. அவர்களைப் பேச விடுங்கள். அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்”

- என்பதையே அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதற்கிடையில், மேற்கண்ட சட்ட நடவடிக்கைகளால் இப்போதைக்கு போராட்டத்தை கைவிட்ட மாணவிகள், செய்தியாளர்களுக்கும், தமிழக மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரிக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். "எங்கள் அனைவருக்கும் உறுதுணையாக இருந்த சட்டம் ஒழுங்கு மற்றும் பிற உத்தியோகபூர்வ அமைப்புகளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்" என்று மாணவ,மாணவிகள் ஒரு வீடியோவில் தெரிவித்தனர்.

சற்றே தணிந்தது போராட்ட நெருப்பு…

இவ்விதமாக கலாக்ஷேத்ரா மாணவ. மாணவிகளிடையே கடந்த சில வாரங்களாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த போராட்ட நெருப்பு தற்போது சற்றே

தணிந்திருக்கிறது. உரிய நடவடிக்கைகளின் பின் இனி அவர்களது சட்டப்போராட்டம் தொடரும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம் நிரூபணமான பின் அவர்களுக்கான தண்டனை உறுதியான பின்பே இந்தப் போராட்டம் முழுமை அடையக்கூடும்.

ஒரே ஒரு மாணவியுடன் துவக்கப்பட்ட கலாக்ஷேத்ராவின் பூர்வ கதை...

தமிழகத்தில் இயங்கி வந்தாலும் கலாக்ஷேத்ரா என்பது இந்தியா முழுமையிலும் அறியப்பட்ட ஒரு கலாப்பூர்வமான நிறுவனமாகவே இதுநாள் வரையிலும் அடையாளம் காணப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் அதைத் தொடங்கியவரான திருமதி ருக்மணி தேவி அருண்டேல்.

ஒரே ஒரு மாணவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கலைக்கல்லூரியில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உலகெங்கணும் இருந்து இங்கு தங்கி கலை பயில்கின்றார்கள். ருக்மணி தேவி அருண்டேலின் வழிகாட்டலே கலாக்ஷேத்திராவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கியது.

1962 இலிருந்து கலாக்ஷேத்ரா சென்னையில் திருவான்மியூரில் புதிய வளாகத்தில் இயங்கத்தொடங்கியது.

1993 இல், இந்திய நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தின் படி கலாசேத்திரா இந்தியாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது.

கலாக்ஷேத்ராவின் வரலாறு...

1936 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் ருக்மிணி தேவி அருண்டேல் மற்றும் அவரது கணவர் ஜார்ஜ் அருண்டேல் ஆகியோரினால் சென்னையில் அடையாறில் பிரம்மஞான சபையின் தோட்டத்தில் முதன்முதலாக ‘கலாக்ஷேத்ரா’ தொடங்கப்பட்டது. கலாக்ஷேத்ராவின் முன்னேற்றத்துக்கு அன்னி பெசன்ட் அம்மையார், டாக்டர் ஜார்ஜ் அருண்டேல், டாக்டர் ஜேம்ஸ் கசின்ஸ், டாக்டர் சி. பி. இராமஸ்வாமி ஐயர், ஸ்ரீசுப்பிரமணிய சாஸ்திரி போன்ற பெரியோர்கள் பலர் உறுதுணையாக இருந்தனர்.

திருமதி ருக்மணி தேவியும் அவரது கணவரும் கலாக்ஷேத்ரா என்பது இசை மற்றும் நடனக்கலை பயிற்றுவிக்கப்படும் சிறந்த பள்ளிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினர். அதன் காரணமாகவே தமிழகம் முழுவதிலும் இருந்து சிறந்த இசை மற்றும் நடன ஆசிரியர்கள் பலரை இங்கு வரவைத்து அவர்கள் மூலமாகத் தங்களது மாணவமணிகளுக்கு சிறந்த கலை வடிவங்களை அறிமுகப்படுத்தினர். அப்படித்தான் தலைசிறந்த இசைக்கலைஞர்கள் இங்கு கடமையாற்றியுள்ளனர். டைகர் வரதாச்சாரி, காரைக்குடி சாம்பசிவ ஐயர், மைசூர் வாசுதேவாச்சாரியார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

சதிரை புனரமைத்து உருவான கலாக்ஷேத்ரா பாணி...

சதிர் வடிவில் சிருங்கார ரசம் மிகுந்திருந்த பரதக் கலையை தெய்வீக வடிவுக்கு உயர்த்தியதில் ருக்மணி தேவியின் பங்கு தனித்துவமானது!

பண்டைய தமிழகத்தில் தெய்வ சந்நிதானங்களில் நடைபெற்று வந்த சதிர் கச்சேரி பாணியிலான நடனமானது சற்றே சிருங்கார ரசம் தூக்கலானதாக இருந்தது. அது அன்றைய மன்னர்கள், பாளையக்காரர்கள், நிலச்சுவாந்தாரர்கள் உள்ளிட்ட பெருந்தனக்காரர்களை வசப்படுத்தும் பொருட்டு தேவதாசிகள் பயன்படுத்தி வந்த நாட்டியமுறையாக அப்போது அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் இருந்த வழக்கம். இதில் மிதமிஞ்சி இருந்த சிருங்கார பாவத்தால் அந்த அற்புதக் கலை வடிவம் பொதுமக்களில் பிற பிரிவினர் கற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை எனும் நிலையில் இருந்து அதைக் காத்து அக்கலையின் மீது ஈடுபாடு கொண்டு மிகச்சிறப்பாக அதை வெளிப்படுத்துவதற்கான திறமையும், ஆர்வமும் கொண்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ஆடத்தகுந்த வகையில் அதில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து ‘கலாக்ஷேத்ரா பாணி’ எனும் தனிப்பாணியை அறிமுகப்படுத்தி அதன் சிறப்பை உலகறியச் செய்தார் ருக்மணி தேவி.

பரதக்கலைக்கு மேஜிக்கல் மெஸ்மரிஸம் சேர்த்த பாலே நடனம்…

ஜார்ஜ் அருண்டேலை மணந்த பின் அடையாறு தியோசாபிகல் சொஸைட்டியின் பணிகளுக்காக தன் கணவருடனும், தனியாகவும் பல பயணங்கள் மேற்கொண்டிருந்தார் ருக்மணி தேவி. அப்படி மேற்கொண்ட பயணங்கள் ஒன்றில் தனக்கு அறிமுகமான பாலே நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவாவுடனான அறிமுகம் தான் இன்றைய கலாக்ஷேத்ரா பாணி எனும் தனித்த பிரத்யேக பாணிக்கு அடிநாதம். ரஷ்யாவின் பாலே நடனத்தை நம்மூர் பரதக்கலையுடன் கலந்து ருக்மணி தேவி உருவாக்கிய கலாச்ஷேத்ரா பாணி நாட்டியம் அதை முதன்முதலில் தரிசிக்க நேர்ந்தவர்களுக்கு அளித்தது மிகச்சிறந்த மேஜிக்கல் மெஸ்மரிஸத்துக்கு ஆட்பட்ட அற்புதமான உணர்வையே!

முதன் முதலில் அதைக் கற்றுக்கொண்டு 30 வயதில் மேடையேறி ஆடி அன்றைய கட்டுப்பெட்டித்தனமான சமூகத்தில் பலவிதமான விமர்சனங்களை எதிர்கொண்டு ருக்மணி தேவியால் புனரமைக்கப்பட்டது தான் இன்றைய கலாக்ஷேத்ரா நாட்டிய பாணி.

இப்படித்தான் ருக்மணி தேவி பரதநாட்டியத்தை ஒரு தூய கலைவடிவமாக மாற்றினார்.

1935 ஆம் ஆண்டு தியோசாபிகல் சொஸைட்டியின் வைர விழா கொண்டாட்டங்களில் அவர் தனது முதல் நிகழ்ச்சியை வழங்கினார். அன்று தனது வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை மிகக் கடுமையான பொது ஏளனத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, ஏனெனில் கட்டுதிட்டங்கள் நிறைந்த சென்னையின் மரபுவழி இந்த நிகழ்வைப் புறக்கணிக்கப் போவதாக அச்சுறுத்தியது. ஆனால், அவர் அசரவில்லை. மீண்டும், தனது அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதியின் துணையுடன் சமூகத்தின் எதிர்ப்புகளை எதிர்கொண்டார்.

பாலசரஸ்வதியின் மெச்சுதலான பாராட்டு…

ருக்மணி தேவியின் இந்த முயற்சியைப் பற்றிப் பேசுகையில் தமிழகத்தின் தன்னிகரற்ற நாட்டியக் கலைஞர்களுள் ஒருவரான, பாலசரஸ்வதி,

"புதுமையான யோசனைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பரதநாட்டியத்தை சுத்திகரிக்கும் முயற்சி இந்த முயற்சியானது, புடமிட்ட தங்கத்தின் மீது பளபளப்புக் கூட்டுவது அல்லது தெய்வீக அழகுடன் தாமரையை வரைவது போன்றது"

-என்று கூறினார்.

ஆம் இப்படியாக இன்று நாம் கண்டு ரசிக்கும் பரதக்கலை வடிவத்தின் கெளரவமான தனிப்பாணிக்கு அன்று அஸ்திவாரமிட்டார் ருக்மணி தேவி.

ருக்மணி தேவி குறித்துப் பேச வேண்டுமென்றால் நாம் இன்னுமொரு தனிக்கட்டுரையில் தான் பேசியாக வேண்டும். அத்தனை விசேஷங்கள் கொண்டது அவரது வாழ்க்கை. அப்படியொரு தூய ஆத்மா, பரதக்கலையின் மீது தான் கொண்ட பேரார்வத்தின் பா துவக்கிய இந்த நிறுவனம் இன்று அதன் மாணவிகளுக்கு பாதுகாப்பான இடமாக இல்லை என்பது மிகுந்த வருத்தத்துக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட.

நுண்கலைகளின் ஆலவிருட்சம் ஒழுக்கக் கேடான தனிநபர் கூடாரமானால் ருக்மணி தேவியின் ஆன்மா மன்னிக்காது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com