ஆண்டுவிழாவா! குடும்ப விழாவா! மகிழ்ச்சியில் மிதந்த மக்கள்!

Kolkata Kali Temple, west mambalam, chennai
Kolkata Kali Temple, west mambalam, chennai

- பி.ஆர். லட்சுமி

சென்னை - மேற்கு மாம்பலத்தில் தனசேகரன் தெருவில்  கல்கத்தா காளிகோவில் எங்குள்ளது எனக்கேட்டால் சிறு குழந்தைகள்கூட வழிகாட்டும். கல்கத்தா காளி கோவிலின் விழா மண்டபத்தில் பதஞ்சலி குழுவின் ஒரு பிரிவினர் தங்களது யோகா பள்ளியின் 15ஆவது ஆண்டுவிழாவைச்  சிறப்புடன் அட்சயதிருதியை அன்று (மே பத்தாம் தேதி) கொண்டாடினர்.

மாலை 5 மணியளவில் ஆசிரியர் சுபாஷிணி வழிகாட்டுதலில் இவ்வாண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. நாட்டுப்பற்று தொடர்பான பாடல்கள் யோகா மாணவிகளால் இசைக்கப்பட்டது. தெய்வவழிபாட்டுடன் விழா இனிதாகத் தொடங்கியது. விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை சுபாஷிணி வரவேற்றுப் பேசினார். அனைவருக்கும் இந்தியப் பாரம்பரிய வழக்கத்தின்படி சந்தனம், குங்குமம், பூ அளித்து, வெற்றிலை, பாக்கு வைத்து விழாவினைச் சிறப்பாக்கினார்.

பொதுவாக யோகா தொடர்பான விழா என்றால் ஆணும், பெண்ணும் சரிசமபங்கில் இருப்பர். ஆனால், விழாவிற்கு மஞ்சள் புடவை அணிந்து மகளிர் பட்டாளமே அங்கு திரண்டிருந்தது. ஆண்கள் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. தோட்டத்தில் மஞ்சள் வண்ண ரோஜாமலரில் வெள்ளை முத்துகளை ஆரமாகக் கட்டி தொங்கவிட்டதுபோல மஞ்சள் வண்ண உடையணிந்து பெண்கள் மல்லிகைச் சரத்தைச் சூடியிருந்தனர். அங்கங்கு அந்தச் சகோதரிகள் தாகத்திற்கு கரும்பு ஜூஸ் பரிமாறிய காட்சியானது அழகு மஞ்சள் ரோஜாமலர்கூட நடந்து வருமா! என நினைக்க வைத்தது. இதற்குப் போட்டியாக ஆண்தேவதையாக ஒருவர்  தட்டில் மோர்க்குவளையை ஏந்தியபடி உபசரித்துக்கொண்டிருந்தார். வெள்ளி பாற்கடலில் பச்சை மரகதக் கற்களாய் கறிவேப்பிலை மணக்க மணக்க  அன்பில் கலந்த அந்த மோர்   விவேகசிந்தாமணியின் ‘ஒப்புடன் முகம்மலர்ந்து உபசரித்துண்மை பேசி உப்பிலா கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும்’ என்ற பாடலை நினைவுபடுத்தியது.

சில்லுன்னு கரும்பு ஜூஸ், பானகம், மோர் மட்டும் குடித்தால் போதுமா! என்றபடி அடுத்த ரவுண்டு மாசா குளிர்பானம் வந்தது.  ஜனனி! ஜனனி! என மாணவி சங்கீதா பாடியபோது குட்டி தேவையாகவே தெரிந்தார். குளிர்பானத்தின் இனிமையைவிட இசையின்சுவை அங்கு அதிகமாக ரசிக்கப்பட்டது.

யோகாசனம் செய்வதால் ஏற்படக்கூடிய பல நன்மைகளைத் தலைசிறந்த ஆசிரியர்கள் மக்களிடையே  எடுத்துரைத்தனர். 

நோயின் அறிகுறிகளைப் புரிந்துகொண்டு முதலுதவி செய்து கொள்ளவேண்டும் என்பதை விளக்கிக் காட்டியவிதமும் அருமையாக இருந்தது.

வயதானால் சருமம் சுருங்குவதுபோல ஆரோக்கியமும் குறையும். அதை எப்படி சரிக்கட்டுவது? அப்போது   உடலில் ஏற்படும் மாற்றங்களையும் சுட்டிக் காட்டி வழிகாட்டினர்.

பள்ளிக்கூடம் பயிலும் மாணவர் முதல் வயதில் மூத்த குடிமக்கள் உட்பட பலர் விழாவில் சுவாரசியமான பல நிகழ்ச்சிகளைப் பேசி யோகாசனம் செய்வதன் நன்மைகளைக் கூறினர்.  சூரியநமஸ்காரம் முதல் சந்திரநமஸ்காரம்வரை அனைத்துவிதமான யோகாசனப் பயிற்சிகளும் செய்து காட்டப்பட்டன.

இதையும் படியுங்கள்:
வளம் தரும் அட்சய திருதியை!
Kolkata Kali Temple, west mambalam, chennai

இந்த விழாவின் ஹைலைட்டே அன்னதான உபசரிப்புதான். பசிப்பிணி நீக்கிய அட்சயபாத்திரம்போல டிரம் நிறைய சாம்பார்சாதம் வைத்துக்கொண்டு உணவு பரிமாறிய மஞ்சள் ரோஜாமலரின் முகத்தில் இருந்த புன்னகையின் மதிப்பு விலைமதிக்க முடியாதது.

விழாவிற்கு வந்திருந்த யோகாசன வகுப்பு மாணவர்கள்  பாக்கு மட்டை தட்டுகளையும், தொன்னைகளையும் பயன்படுத்தி  உணவு பரிமாறியவிதம் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. சாம்பார்சாதம், இட்லி, இதற்கு தொட்டுக்கொள்ள விதவிதமான சட்னிகளின் அணிவகுப்பு, தயிர்சாதம், பலவிதமான இனிப்புகள், காரங்கள் உட்பட பல தினுசுகள் இந்தியாவின் பல மாநிலங்கள்போல அங்கு அன்பு கலந்து பரிமாறப்பட்டன. சத்துள்ள உருண்டைகள் விதவிதமாகப் பரிமாறப்பட்டன.

சிறப்பு விருந்தினர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பல வருடங்களாக யோகாசனம் பயின்றுவரும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சின்னச் சின்ன நட்சத்திரங்களாய் இன்றைய இளசுகள் செல்ஃபோனில் நிகழ்ச்சிகளைக் ‘கிளிக்’ செய்தது வானில் இருந்து நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக கண் சிமிட்டி இறங்கி வந்துவிட்டதோ என நினைக்கத் தோன்றியது.

கட்டியவன் துணையிருந்தால் கோட்டையையும் ஆளலாம் என்பதற்கேற்ப சுபாஷிணியின் துணைவர் அவருக்கு பக்கபலமாக இருந்து அனைவரையும் வழிநடத்தியது  ஆண்டுவிழாவின் வெற்றி கிரீடத்தில் வைக்கப்பட்ட கோஹினூர் வைரக்கல் என்று வர்ணித்தால் மிகையாகாது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com