

முகேரா (இன்றைய பஞ்சாப் – பாகிஸ்தான்) வில் 28 ஜனவரி 1865 ஆம் ஆண்டு பிறந்தார் லாலா லஜபதி ராய். கல்வியில் சிறந்த இவர் சட்டம் பயின்று வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் தேசிய கல்வி, சுயராஜ்யம், சுதேசி கொள்கைகளை வலியுறுத்தியதுடன் ஆர்ய சமாஜம் போன்ற இயக்கங்களிலும் தீவிர ஈடுபாடு கொண்டவராக இருந்தார். DAV (Dayanand Anglo-Vedic) கல்வி நிறுவனங்கள் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்ததுடன் சமூக சீர்திருத்தங்களிலும் ஆர்வம் கொண்டவராக இயங்கினார். ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு தந்தவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
சுதந்திரம் மீதான ஆர்வத்தில் பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால் உடன் சேர்ந்து “லால்–பால்–பால்” என்ற புரட்சிகர மூவர் அணியில் ஒருவராக சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்று இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவர் ஆனார். (Lala lajpat roy) லாலா லஜபதி ராய் – பால கங்காதர திலக் – பிபின் சந்திர பால் இந்த மூவரும் இந்தியாவில் தீவிர தேசியவாத இயக்கத்தின் முதுகெலும்பாக செயல்பட்டவர்கள்.
பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு பல இன்னல்கள் அனுபவித்து தைரியமாகப் போராடியதால் மக்களால் "பஞ்சாப் சிங்கம் (Punjab Kesari)” எனப் போற்றப்பட்டவர். குறிப்பாக சைமன் கமிஷன் எதிர்ப்பு போராட்டத்தின் முன்னணி வீரராக (1928) “Simon Go Back” போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். போராட்டத்தில் காவலரின் லாத்தி சார்ஜ் தாக்குதலில் படுகாயங்கள் அடைந்து 17 நவம்பர் 1928 அன்று வீரமரணம் எய்தினார். அவரது மரணம் இந்திய மக்களைப் பெரிதும் கொந்தளிக்க வைத்தது.
“இந்தியர்கள் தங்களது உரிமைக்காக தாங்களே போராட வேண்டும்” என்ற முக்கியமான கருத்தை வலியுறுத்தி வந்த லஜபதி ராய் மரணம் பகத் சிங் போன்ற புரட்சியாளர்களுக்கு பெரும் தூண்டுகோலாக அமைந்தது எனலாம். ஆம். லாலா லஜபதி ராயின் மரணம் தான் பகத்சிங்கின் ஆயுதப் போராட்டத்திற்கு தீப்பொறியாக அமைந்தது.
சைமன் கமிஷன் எதிர்ப்பு போராட்டத்தில் “Simon Go Back” என்ற அமைதியான பேரணியைத்தான் லாலா லஜபதி ராய் தலைமை தாங்கி நடத்தினார். ஆனால் நடந்தது வேறு. ஆங்கில போலீஸ் அதிகாரியான ஜேம்ஸ் A. ஸ்காட் உத்தரவின் பேரில் நடந்த லத்திசார்ஜில் லாலா லஜபதி ராய் கடுமையாக காயமடைந்தார். அந்தக் காயங்களால் தன்னுயிரையும் இழந்தார்.
தாங்கள் மதித்த தலைவரின் தியாக மரணம் பகத் சிங், ராஜகுரு, சுக்தேவ் போன்ற சுதந்திரத்துக்காக பாடுபட்ட இளைஞர்களை ஆழமாக பாதித்தது. முடிவு? “அமைதியான போராட்டத்திற்கே உயிர் கொடுக்கிறார்கள் என்றால், ஆட்சியாளர்களை நேரடியாக எதிர்க்க வேண்டும்.” என்ற அவர்கள் எண்ணம் வலுப்பெற்றது. குறிப்பாக பகத்சிங் மீது இந்த மரணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
லாலா லஜபதி ராய் மரணத்திற்கு காரணமான ஜேம்ஸ் ஸ்காட்டை கொல்ல வேண்டும் என்று பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு உள்ளிட்டோர் முடிவு செய்தனர். ஆனால் தவறுதலாக ஜான் சாண்டர்ஸ் (J.P. Saunders) எனும் அதிகாரி கொல்லப்பட்டார் (1928).இந்தச் சம்பவமே பகத்சிங்கை புரட்சியாளராக தேசிய அளவில் அறிமுகப்படுத்தியது. இதன் காரணமாகவே லாலா லஜபதி ராய் புரட்சியாளர்களின் தீப்பொறி என்றழைக்கப்படுகிறார்.
சுதந்திர போராட்ட வீரராக மட்டுமின்றி சிறந்த எழுத்தாளராகவும் Young India, Unhappy India போன்ற நூல்கள் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ராய் 1920ல் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார்.
“ஒரு மனிதன் இறந்தாலும், அவன் சிந்தனை உயிரோடே இருக்கும்” என்று வரலாற்றில் தனது தடத்தை ஆழமாக பதித்துச் சென்ற லாலா லஜபதி ராய் புகழ் இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.