தன்னலமற்ற தந்தையின் பாசத்தைத் தினம் தினம் புரிந்துகொள்வோம்!

ஜூன் 16 - தந்தையர் தினம்!
fathers day image
fathers day imageImage credit - pixabay.com

-மரிய சாரா

முதாயத்தில் ஒரு குழந்தை சிறந்தவனாக அல்லது சிறந்தவளாக வளர்வதற்கு தாய், தந்தை இருவரின் பங்களிப்பும் மிக முக்கியமானதுதான். தாய் 10 மாதம் வயிற்றில் சுமந்து வலியை அனுபவித்து பெற்றெடுக்கிறாள் என்றால், தந்தை தனது ஆயுள் உள்ள மட்டும் பிள்ளைகளைத் தனது மனதில் சுமக்கிறார்.

தனக்கென எந்த ஒரு பெரிய லட்சியமும் தந்தைக்கு இருப்பதில்லை. தனது பிள்ளைகளின் நலன் மட்டுமே அவருக்கு அவரின் மூச்சு உள்ளவரை இருக்கும் ஒரே லட்சியம். அந்த ஒரே லட்சியத்தை மனதில் கொண்டுதான் அனுதினமும் ஒரு இயந்திரத்தைப்போல ஓடிக்கொண்டே இருக்கிறார். தாயின் பாசமும் தியாகமும் அங்கீகரிக்கப்படும் அளவிற்கு இங்கு தந்தையரின் வெளிக்காட்டப்படாத அன்பும், தியாகங்களும் அங்கீகரிக்கப்படுவதில்லை.

தாய் அழுவதை பலமுறை பிள்ளைகள் பார்த்திருப்பார். ஆனால், தந்தை உடைந்து அழுது பார்த்திருக்க மாட்டார்கள். காலத்திற்கும் குடும்பத்தை தனது தொழில் பாரமாய் கருதாமல், சுகமாய் நினைத்து சுமப்பவர்தான் தந்தை. சிறு வயதில் தந்தையின் அளவிடமுடியாத அன்பை பிள்ளைகளால் பொதுவாக உணர முடிவதில்லை. அதற்குக் காரணம் அவர் எப்போதும் மிகுந்த கண்டிப்புடன் இருப்பதுதான்.

தான் படும் சிரமங்களைத் தனது பிள்ளைகள் படக்கூடாது. அவர்கள் வாழ்வில் அவர்கள் சுகமாய் வாழவேண்டும் என்கிற பிள்ளைகள் நலனே ஒரு தந்தையை முரடனாக, கோவக்காரராக பிள்ளைகளுக்குப் பிரதிபலிக்கின்றது. நாளை தனது பிள்ளைகள் கெட்டுப்போய் விடக்கூடாது. தான் இல்லாவிட்டாலும் தனது பிள்ளைகள் தங்களின் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்கிற தந்தையரின் ஏக்கம்தான் இதற்கெல்லாம் காரணம்.

தாயின் பாசம் தினமும் பிள்ளைகளால் உணரமுடியும். ஆனால், தந்தையின் பாசம் மறைவானது. அது பிள்ளைகளின் ஒவ்வொரு வளர்ச்சி நிலைகளிலும்தான் உணர முடியும். என் அப்பாவிற்கு என் மீது பாசமே இருந்ததில்லை என புலம்பும் பிள்ளைகள் பின்னாளில் தங்கள் தந்தையை இழந்த பின்னரோ அல்லது தான் அந்தப் பதவிக்கு வந்த பின்னரோதான் தனது தந்தையின் அளவிட முடியாத தியாகத்தையும் அன்பையும் புரிந்துகொள்கின்றனர்.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் தந்தையர் தினத்தை முதன்முதலில் கொண்டாடத் தொடங்கினார்கள். தந்தையர் தினம், அமெரிக்காவில் வாழ்ந்த சோனோரா ஸ்மார்ட் டாட் என்பவர் தனது தந்தை வில்லியம் ஸ்மார்ட் என்பவரின் நினைவாக 1910ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதன்முதலில் கொண்டாடினார். அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் 3ம் ஞாயிற்றுக்கிழமை அன்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
வெற்றி தள்ளிப்போகிறதா? இந்த 5 விஷயங்களை சரி செய்து கொள்ளுங்கள்!
fathers day image

தியாகங்கள் பல செய்து பிள்ளைகள் எனும் ஆலமரம் வளர்ந்து நிற்பதற்கு ஆணி வேராய் இருக்கும் தந்தையரின் தியாகங்களை நினைவு கூர்ந்து, அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டு தங்களின் நன்றியையும் பாசத்தையும் வெளிப்படுத்த அவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி தந்தையர் தினத்தை உலகமெங்கும் அனைவரும் ஆவலுடன் கொண்டாடுகின்றனர்.

உலகில் ஈடு செய்யமுடியாத இனிய உறவாய் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் சுயநலமில்லாத தந்தையர்கள் அனைவருக்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com