
இன்று அக்டோபர் 16 உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது உலகம் முழுவதும் பசி பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் (FAO) 1979 ஆம் ஆண்டு உலக உணவு தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நாள் உலகம் முழுவதிலும் 150 நாடுகளில் 50 மொழிகளில் கொண்டாடப்படுகிறது.
உலக உணவு தினம் சர்வதேச உணவு தினம் என கொண்டாடப்படும் உணவு நாள் ஐநா நாட்காட்டியின் மிக முக்கியமான சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது. மேலும் உணவு உற்பத்தி கொள்முதல் பாதுகாப்பிற்கான வாய்ப்பை வழங்குவதோடு உலக அளவில் உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுவதை எதிர்த்தும் போராடுகிறது.
உலக உணவு தின வரலாறு
1945 நிறுவப்பட்ட உணவு மற்றும் விவசாய அமைப்பு நவம்பர் 1979இல் இருபதாவது பொது மாநாட்டின் போது ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 16 சர்வதேச உணவு தினமாக நியமித்தது உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்களும் அமைப்புகளும் உணவு தினத்தை கொண்டாடுவதோடு உணவு பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றன.
உலக உணவு தின தீம் 2024
ஐநா சபையால் FAO நிறுவப்பட்டதிலிருந்து, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறது. நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கிற்கு ஏற்ப அன்றாட வாழ்வில் தண்ணீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான உணவு தினத்தின் கருப்பொருளாக 'நீரே உணவு: நீர்தான் வாழ்க்கை: யாரையும் விட்டு விடாதீர்கள்' என்பதாக உள்ளது . நிலத்தடி நீர் இருப்பும் நன்னீர் இருப்பும் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் தண்ணீரை வீணாக்குவதை குறைத்து தண்ணீரை மீண்டும் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
2024 உலக உணவு தினத்தின் முக்கியத்துவம்
நிலையான விவசாயத்தைக் கொண்டு வந்து பசியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்திற்காகதான் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. உணவு வீணாவதை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தின் தேவையை ஊக்குவித்து, உணவு பாதுகாப்பு சவால்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களை அங்கீகரித்து கொண்டாடுவதற்கான வாய்ப்பை இந்த உலக உணவு தினம் வழங்குகிறது.
இந்தியாவில் உலக உணவு தினம்
விவசாய நாடான இந்தியாவில் உலக உணவு தினம் ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பல பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்வதோடு, பல கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகள் தேவைப்படுவோருக்கு உணவு நன்கொடை இயக்கங்களை நடத்தி, உணவுப் பாதுகாப்பு, நிலையான விவசாயம் மற்றும் நவீன விவசாய நடைமுறைகள் குறித்து கருத்தரங்குகள் நடத்துகின்றன.
உப்பு, வெள்ளம் மற்றும் வறட்சியைத் தாங்கும் விதை வகைகள் மற்றும் கரடுமுரடான தானியங்கள் போன்ற பூர்வீக கடினமான வகைகளின் வளர்ச்சியை ஊக்குவித்து, உணவுப் பொருட்களை வீணாக்காமல் உணவின் முக்கியத்துவத்தை குழந்தைகளிலிருந்து சொல்லி வீட்டில் உள்ள பெரியவர்கள் பழக்கப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு பசி பட்டினி இல்லாத உலகை விட்டுச்செல்ல முற்படுவோம்.
உணவு தினத்தை கொண்டாடுவோம் உலகை காப்போம்.