
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச ஒட்டகச்சிவிங்கி தினம் அனுசரிக்கப்படுகிறது. இது ஒட்டகச்சிவிங்கி பாதுகாப்பு அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவது குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. ஏன் அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஒட்டகச்சிவிங்கிகள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள்: ஒட்டகச்சிவிங்கிகள் நிறைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. அமைதியாக அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இவை இடம் பிடித்துள்ளன. காடுகளைத் தொடர்ந்து மனிதர்கள் இவற்றை அழித்து வருவதாலும், விவசாய விரிவாக்கம் மற்றும் மனித ஆக்கிரமிப்பின் காரணமாகவும் ஒட்டகச்சிவிங்கிகள் தங்கள் வாழ்விடங்களை இழக்கின்றன. அவற்றின் இறைச்சி, தோல் மற்றும் உடல் பாகங்களுக்காக அவை வேட்டையாடப்படுகின்றன. பாரம்பரிய மருத்துவக் காரணங்களுக்காக அவற்றின் உடல் பாகங்கள் மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்படுகின்றது. காலநிலை மாற்றத்தால் உணவு மற்றும் நீர் அவற்றுக்கு சரியாகக் கிடைப்பதில்லை.
ஒட்டகச்சிவிங்கிகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்?
ஒட்டகச்சிவிங்கிகள் அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கியப் பங்கு வகிப்பதால் அவை பல்லுயிரியலைப் பராமரிக்க உதவும் ஒரு முக்கிய இனம் ஆகும்.
விதை பரப்புதல்: ஒட்டகச்சிவிங்கிகள் சைவ உணவு உண்ணும் விலங்குகள். அவை நீண்ட கழுத்துடன் பெரும்பாலான மேய்ச்சல் விலங்குகளுக்கு எட்டாத இலைகள் பூக்கள் மற்றும் பழங்களை உண்கின்றன. அவை தாவர வளர்ச்சி மற்றும் விதை பரவலை ஏற்படுத்துகின்றன. அவற்றின் மேய்ச்சல் பழக்கம் அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குள் ஆரோக்கியமான சமநிலையைப் பராமரிக்க உதவுகின்றன.
உணவளித்தல்: ஒட்டகச்சிவிங்கிகளின் உணவுப் பழக்கம் சிறிய விலங்குகளுக்கும் உணவளிக்கின்றன. ஒட்டகச்சிவிங்கியின் உடலில் உண்ணிகள் இருக்கின்றன. அவை உண்ணிகளை உண்ணும் பறவைகளுக்கு உணவை வழங்குகின்றன. இவை ஒரு வாரத்திற்கு 100 பவுண்டுகளுக்கு மேல் இலைகளை சாப்பிடுகின்றன. உணவைத் தேடி நீண்ட தூரம் பயணிக்கின்றன. கழிவுகள் மூலம் விதைகளைப் பரப்புவதால் நிறைய தாவரங்கள் வளர்ந்து பறவைகளுக்கும் பிற விலங்குகளுக்கும் ஒட்டகச்சிவிங்கிகளால் உணவு கிடைக்கிறது.
பிற விலங்குகளைப் பாதுகாத்தல்: ஒட்டகச்சிவிங்கிகள் உயரமாக இருப்பதால் அவற்றால் தங்களை வேட்டையாட வரும் சிங்கங்கள் மற்றும் கழுதைப் புலிகளை தூரத்தில் இருந்து கண்டுபிடிக்க முடியும். ஒட்டகச்சிவிங்கிகள் ஓடத் தொடங்கும் போது மற்ற விலங்குகளும் இதை கவனித்து ஓடி விடுகின்றன.
ஊட்டச்சத்து சுழற்சி: ஒட்டகச்சிவிங்கிகளின் சாணம் மற்றும் சிறுநீர் பூமிக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்கி, சுற்றுச்சூழல் அமைப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கின்றன. ஒட்டகச்சிவிங்கிகள் இல்லை என்றால் தாவரங்கள் மற்றும் அவற்றை சார்ந்திருக்கும் பிற விலங்கு இனங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படும்.
சுற்றுலா வருமானம்: பல ஆப்பிரிக்க நாடுகளில் ஒட்டகச்சிவிங்கிகள் கவர்ச்சிகரமான சின்னங்களாக விளங்குகின்றன. இவற்றைத் தேடி நிறைய பயணிகள் வருவதால் சுற்றுலா வருமானமும் ஒட்டகச்சிவிங்கிகளால் அரசுக்கும் இவற்றை வளர்ப்பவர்களுக்கும் கிடைக்கிறது.
கலாசார முக்கியத்துவம்: பல கலாசாரங்களில் ஒட்டகச்சிவிங்கிகள் கம்பீரம், கருணை மற்றும் தனித்துவத்தின் சின்னங்களாக விளங்குகின்றன. அவை பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன. அவை சரியாக பாதுகாக்கப்படாமல் போனால் அவற்றின் இழப்பு கலாசார இழப்பாக முடியும்.
ஒட்டகச்சிவிங்கிகளை பாதுகாக்கும் வழிமுறைகள்: ஒட்டகச்சிவிங்கிகளைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து அனைத்து மக்களுக்கும் கற்பிக்க வேண்டும். இவற்றின் வாழ்விடங்களுக்கு அருகில் நிலையான விவசாயம் மற்றும் குடியேற்ற நடைமுறைகளை ஆதரிக்க வேண்டும். அவற்றுக்கு பிரியமான அகாசியா மரங்களை காடுகளில் நிறைய வளர்க்க வேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளில் மசாய் ஒட்டகச்சிவிங்கி அதன் எண்ணிக்கையில் பாதியை இழந்து விட்டது. இப்போது தான்சானியா மற்றும் தென் கொரியாவில் மட்டும் சுமார் 32,000 ஒட்டகச்சிவிங்கிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஏழுக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒட்டகச்சிவிங்கிகள் அதிகாரபூர்வமாக அழிந்துவிட்டன. பார்ப்பதற்கு மிக அழகாகத் தோற்றுமளிக்கும் ஒட்டகச்சிவிங்கிகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கு பிடித்தமான ஒரு உயிரினமாகவும் பல்வேறு தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் உதவுவதால் அவை பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.