மர்மம், திருப்பம், பிரமிப்பு: ஐன்ஸ்டீன் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்!

மார்ச் 14: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்தநாள் - பை (Pi) தினம்!
Albert Einstein
Albert EinsteinAI Image
Published on

உலகிற்கே புதிய ஒப்புமைத் தத்துவத்தைக் கொடுத்த மாபெரும் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனின் வாழ்க்கை வரலாறு சுவையான ஒன்று. அதில் சில துளிகளைப் பார்க்கலாம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி ஜெர்மனியில் உல்ம் நகரில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார்.

இவரது பிறந்த தினமே கணிதத்தில் ஒரு சிறப்பான தினமாக இருக்கிறது. ‘பை’ என்ற கணிதக் குறியீட்டை எண்ணாக எழுதினால் 3.14 என்று எழுதுவோம். மார்ச் மாதம் 14ம் தேதியை இது குறிப்பதால் பை தினத்தில் இந்தக் கணித மேதை தோன்றியது சிறப்பாக அமைகிறது.

மிக சாதாரணமாக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், ஜெர்மனியில் ஹிட்லர், யூதர்கள் மீது இழைத்த கொடுமையால் அங்கிருந்து தப்ப எண்ணினார். அவரைக் கொலை செய்ய நாஜிக்கள் திட்டமிட்டதை அறிந்த அவர் 1933ம் ஆண்டு அங்கிருந்து பிரிட்டனுக்குத் தப்பி ஓடினார். அங்கு அவருக்கு ஒரு வீடு அளிக்கப்பட்டபோதிலும் அதில் தங்குவதும் அபாயம் என்று நினைத்த அவர் மரவீட்டில் ஒன்றில் பதுங்கி இருந்து அங்கிருந்து அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டனுக்குச் சென்று நியூஜெர்ஸியில் தனது ஆராய்ச்சியை தீவிரமாகச் செய்ய ஆரம்பித்தார்.

1905ம் ஆண்டு அவருக்கு மிராக்கிள் இயர் – அற்புத ஆண்டாக அமைந்தது.

‘போட்டோ எலக்ட்ரிக் எபக்ட்’, ‘ப்ரவுனியன் மோஷன்’. ஒப்புமைத் தத்துவம் பற்றிய இரு ஆய்வுகள் ஆகிய நான்கை அவர் வெற்றிகரமாக உலகின் முன்னே வைத்தார்; உலகமே பிரமித்தது!

அவரது E = mc2 என்ற சூத்திரமே அணுகுண்டை செய்வதற்கு அடிப்படையாக அமைந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்டிற்கு அவர் ஜெர்மனி அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக ஒரு கடிதத்தை எழுதினார். உடனடியாக அமெரிக்கா அணு ஆயுதத்தைத் தயாரிக்க வேண்டும் என்பதே அவரது அறிவுரையாக அமைந்தது.

ஆனால் பின்னால் 1945ல் அமெரிக்கா ஜப்பானில் நாகசாகி ஹிரோஷிமா ஆகிய இடங்களில் அணுகுண்டுகளை வீசிய போது ஏற்பட்ட கோரமான விளைவுகளைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அணு ஆயுதங்களைத் தயாரிக்கவே கூடாது என்ற நிலைப்பாட்டிற்கு அவர் வந்தார். இனத்தின் பேராலும் நிறத்தின் பேராலும் அமெரிக்காவில் நிலவி வந்த வேறுபாடுகளையும் அவர் எதிர்த்தார்.

உண்மையில் சொல்லப் போனால் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அவரைப் பற்றி 1400 பக்கம் அடங்கிய ஒரு அறிக்கையையே தயாரித்து விட்டது.

யூதர்களுக்காக இஸ்ரேல் நாடு தனியே அமைக்கப்பட்டவுடன் அவரை ஜனாதிபதி பொறுப்பை ஏற்குமாறு 1952ம் ஆண்டு அழைப்பு விடுவிக்கப்பட்டது. ஆனால் தனது அனுபவமின்மையையும் உடல்நிலையையும் காரணம் காட்டி அதை அவர் மறுத்து விட்டார்.

இயல்பான நகைச்சுவை மனப்பான்மையையும் தனக்கே உரித்தான பல தனித்தன்மைகளையும் பெற்றவர் ஐன்ஸ்டீன்.

பர்ஸனல் காட் (Personal God) எனப்படும் தனிப்பட்ட ஏசு போன்ற கடவுள் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை; ஆனால் அளப்பரிய இறைசக்தி ஒன்றின் மீது அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அதை வெளிப்படையாக எழுத்துக்களினாலும் உறுதி செய்துள்ளார்.

வாழ்நாளில் அவர் காலுக்கு சாக்ஸ் அணிந்ததே இல்லை.

தனது போன் நம்பரைக் கூட அவர் டைரக்டரியைப் பார்த்துத் தான் நண்பர் ஒருவருக்குச் சொன்னார். “ஏன் அப்படி?” என்று அவர் கேட்ட போது. “சுலபமாக ஒரு நிமிடத்தில் டைரக்டரியைப் பார்த்துச் சொல்லும் விஷயத்தைத் தேவையில்லாமல் ஏன் நினைவில் வைத்திருக்க வேண்டும்” என்றார் அவர்.

பிரபல நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் அவரது நண்பர். 1931ம் ஆண்டு ‘சிடி லைட்ஸ்’ (City Lights) என்ற தனது திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் காண அவரையும் அவரது மனைவி எல்ஸா ஐன்ஸ்டீனையும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அழைத்தார் சாப்ளின். அவர்கள் செல்லும் வழியெல்லாம் மக்கள் கூட்டம் ஆரவாரித்து கை தட்டி அவர்களை வரவேற்றது.

அதைப் பார்த்த சாப்ளின் ஐன்ஸ்டீனிடம் கூறினார்; ” இந்த ஜனங்கள் அனைவரும் என்னைப் புரிந்து கொண்டிருப்பதால் இப்படி கைதட்டுகிறார்கள். உங்களை ஒருவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதற்காக உங்களுக்குக் கை தட்டுகிறார்கள்..." ஐன்ஸ்டீன் சிரித்தார்.

ஆமாம், இன்றுவரையிலும், அவரது தியரி ஆஃப் ரிலேடிவிடியை உண்மையாகப் புரிந்து கொண்டவர்கள் உலகில் சிலர் தான்.

இதைப் பற்றிய நகைச்சுவை துணுக்கு கூட ஒன்று உண்டு.

இதையும் படியுங்கள்:
Albert Einstein quotes: சிந்திக்க வைக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் 15 பொன்மொழிகள்!
Albert Einstein

தியரி ஆஃப் ரிலேடிவிடியை விளக்குமாறு ஒருவர் கேட்கவே ஐன்ஸ்டீன் கூறிய குட்டிக் கதை இது:

கண்பார்வையற்ற ஐன்ஸ்டீனின் நண்பர் ஒருவர் அவரது ரிலேடிவிடி கொள்கையை விளக்குமாறு கேட்டார்.

‘ஒரு டம்ளரில் பால் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்’ என்று ஆரம்பித்தார் ஐன்ஸ்டீன்.

உடனே கண்பார்வையற்ற அந்த நண்பர், “டம்ளர் என்றால் என்ன என்று எனக்குத் தெரியும். ஆனால் பால் எப்படி இருக்கும்?” என்று கேட்டார்.

“பால் என்பது வெள்ளையாக இருக்கும் திரவம்” என்றார் ஐன்ஸ்டீன்.

“திரவம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் வெள்ளை என்பது எப்படி இருக்கும்?” என்று கேட்டார் நண்பர்.

“வெண்மை என்பது வாத்தின் இறக்கை போல இருக்கும்” என்றார் ஐன்ஸ்டீன்.

“இறக்கை என்றால் என்ன என்று எனக்குத் தெரியும்? ஆனால் வாத்து என்றால் என்ன?” என்று கேட்டார் நண்பர்.

“வாத்து என்பது வளைந்த கழுத்தைக் கொண்ட ஒரு பறவை” என்றார் ஐன்ஸ்டீன்.

“அட, வாத்து என்றால் என்ன என்று எனக்குப் புரிந்து விட்டது. ஆனால் வளைந்திருக்கும் என்று சொன்னீர்களே, அது எப்படி?” என்றார் நண்பர்.

பொறுமை இழந்த ஐன்ஸ்டீன் நண்பரின் கையைப் பிடித்து நேராக இழுத்தார். இது தான் நேராக இருப்பது என்று கூறிய அவர் நண்பரின் கையை வளைத்து, “இது தான் வளைந்திருப்பது” என்றார்.

“ஆஹா! இப்போது தான் பால் என்றால் என்ன என்று எனக்குப் புரிந்தது!” என்றார் நண்பர்.

காலமும் இடமும் (ஸ்பேஸ் அண்ட் டைம்) பற்றிய உண்மை அவ்வளவு சுலபமாக விளக்கக் கூடிய ஒன்றல்ல.

இதையும் படியுங்கள்:
எல்லாம் தெரிந்தால் வாழ்க்கை போரடிக்கும்... ஐன்ஸ்டீன் சொன்ன அந்த ரகசியம்!
Albert Einstein

1955ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி மருத்துவமனை ஒன்றில் அவர் மரணமடைந்தார்.

கடைசி தருணத்தில் அவர் ஏதோ ஜெர்மானிய மொழியில் கூறினார்.

அருகிலிருந்த நர்ஸுக்கு ஜெர்மானிய மொழி தெரியாது.

ஆகவே அவர் கூறிய முக்கிய விஷயம் என்ன என்பது பற்றி உலகிற்கு இதுவரை தெரியாது.

அவர் இறந்த பின்னர் அவரது மூளை தனியே எடுக்கப்பட்டதும், அது கொள்ளை போனதும் தனிக்கதை!

ஐன்ஸ்டீனின் வாழ்வில் மர்மம், திருப்பம், திகைப்பு, வியப்பு, பிரமிப்பு என்று எல்லாம் உண்டு.

உலகம் கண்ட மாபெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் என்றால் அது மிகையல்ல!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com