
தமிழ்நாட்டின் துடிப்பான தலைநகரான சென்னை அதன் அழகிய கடற்கரைகள், கம்பீரமான கோவில்கள் மற்றும் செழிப்பான ஷாப்பிங் இடங்களுக்கு பெயர் பெற்றது. சென்னையில் ஷாப்பிங் செய்யும் அனுபவம் என்பது சற்று வித்தியாசமானது. தெரு சந்தைகள் முதல் உயர்தர மால்கள் வரை பலதரப்பட்டதாக உள்ளது. பரபரப்பான தெரு சந்தைகளில் பேரம் பேசி பொருட்களை வாங்கும் அனுபவம் தருவது ஒரு தனி சுகம் தான். பிரம்மாண்டமான மால்களில் பிராண்டட் கடைகளில் ஷாப்பிங் செய்வது ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.
தெரு சந்தைகள்:
சென்னையில் டி.நகர் எனப்படும் ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார் போன்ற தெரு சந்தைகள் மிகவும் பிரபலமானவை. இங்கு அப்பா அம்மாவைத் தவிர அனைத்து பொருட்களும் கிடைக்கும். துணிமணிகள், காலணிகள், காதணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பலவகையான பொருட்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும். தாராளமாக பேரம் பேசியும் வாங்கலாம். இங்கு மிகக் குறைந்த விலையில் பேரம் பேசி பொருட்களை வாங்குவதற்கு தனித் திறமை மற்றும் சாமர்த்தியம் வேண்டும்.
பாண்டி பஜாரில் ஃபேஷன் அணிகலன்கள், குர்தாக்கள் மற்றும் சல்வார் போன்ற ஆடைகள், வாசனை திரவியங்கள், கைப்பைகள், நவநாகரீக உடைகள், நகைகள், மொபைல் போன்கள் என எல்லா வயதினருக்கும் ஏற்ற பொருட்களை மலிவு விலையில் இங்கே வாங்கலாம். ரேமண்ட், லீ போன்ற பிரபலமான பிராண்டுகளையும் இங்கு காணலாம்.
மினி வட இந்தியா என அழைக்கப்படும் சௌகார்பேட் சந்தை பாரம்பரிய கைவினை பொருட்கள் மற்றும் பருத்தி கைத்தறி ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு பிரபலமானது. இங்குள்ள தெரு உணவுகளையும் தவற விட வேண்டாம்.
சிறந்த விலையில் மின்னணு பொருட்களை வாங்க ரிச்சி தெரு சந்தை தான் உகந்தது. இந்தியாவின் இரண்டாவது பெரிய மின்னணு மையமாக இருப்பதால், இங்கு கொரியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு வகையான மின்னணு பொருட்கள், சிசிடிவி கேமராக்கள், எல்இடி விளக்குகள், கணினிகள், டிவி, ரோபாட்டிக்ஸ், தொலைபேசி பேட்டரிகள் என பலவற்றை இங்கே காணலாம். அத்துடன் இங்கு பல மின்னணு பொருட்கள் பழுது பார்க்கும் கடைகளும் உள்ளன.
மால்கள்:
சென்னையில் ஏராளமான மால்கள் உள்ளன. எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஃபோரம் விஜயா மால், சிட்டி சென்டர், பீனிக்ஸ் மால் போன்ற பெரிய ஷாப்பிங் மால்கள் உள்ளன. இங்கு உள்நாட்டு பிராண்டட் கடைகள் மற்றும் சர்வதேச பிராண்டட் கடைகள் உள்ளன. இங்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களும், உணவகங்களும் உள்ளன. இங்கு எதையும் வாங்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை; விண்டோ ஷாப்பிங் செய்தாலே போதும். நேரம் சிட்டாக பறந்து விடும்.
சென்னையில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் பீனிக்ஸ் மாலும் ஒன்று. இங்கு Parcos, ONLY, Zara போன்ற பல முன்னணி சர்வதேச பிராண்டுகள் உள்ளன.
எக்ஸ்பிரஸ் அவென்யூ சென்னையில் ஷாப்பிங் செய்வதற்கு மற்றொரு சிறந்த இடமாகும். பொழுதுபோக்கு, ஷாப்பிங், ஓய்வு மற்றும் வணிகம் போன்றவற்றின் சரியான கலவையாக உள்ள இடம் இது.
ஆடம்பரமான ஷாப்பிங் செய்யவும், ஆடம்பரமான பொழுதுபோக்கை விரும்பினாலும் மால்கள் சிறந்த தேர்வாக இருக்கும். சாதாரண மக்கள் முதல் பிரபலமானவர்கள் வரை இந்த இரண்டு இடங்களிலுமே ஷாப்பிங் செய்ய விரும்புவார்கள். சென்னையின் ஷாப்பிங் அனுபவம் என்பது தெரு சந்தைகள் மற்றும் மால்கள் இரண்டின் கலவையாகவே உள்ளது.
சென்னையில் கிளாசிக் சந்தைகள் முதல் நவீன ஷாப்பிங் மால்கள் வரை ஷாப்பிங் செய்ய விரும்பும் அனைத்தும் கிடைக்கும். எனவே நீங்கள் ஒரு தெரு சந்தையில் ஷாப்பிங் செய்பவராக இருந்தாலும் சரி ஆடம்பர உயர்தர மால்களில் ஷாப்பிங் செய்பவராக இருந்தாலும் சரி உங்கள் பட்ஜெட் மற்றும் ஸ்டைலுக்கு ஏற்ற ஒன்றை இந்த சென்னை மாநகரில் காணலாம்.