
மகாத்மாவே! மனித தெய்வமே!
உண்மைதனையே உதிரத்திலேற்று
அதன்வழியே அழகாய் நடந்து
அகிலத்தார் உள்ளத்தில்
ஆழமாய்ப் பதிந்தவரே!
அனைத்துப் பிறப்புகளிலும்
ஆத்மா உண்டு!
மகாத்மாவாய் மாற்றும் சூட்சுமம்
உங்களிடமே ஒளிந்திருந்ததால்
இன்னல்கள் எவ்வளவு
எதிர்வந்த போதும்…
எதிர்த்தே நின்று
வெற்றிவாகை சூடினீர்!
அதற்காக நீங்கள்
அல்லும்பகலும் பட்ட அல்லல்
அகில உலக வரலாற்றின்
பொன்னேட்டுப் பக்கங்களில்
பொலிவாய் உள்ளன!
சிறையிலும் வெளியிலும்
எளிமைதனையே என்றும் கடைப்பிடித்தீர்!
“அந்த அரையாடை மனிதர்
படையுடன் வந்து
பயமுறுத்தி இருந்தால்…
பீரங்கியை ஏவி
பிரளயம் விளைவித்திருப்பேன்!
ஆனால் அவரோ…
கும்பிட்ட கரங்களுடன்
குற்றமில்லாச் சிரிப்புடன்
‘கொடுங்கள் சுதந்திரத்தை’
என்றே கேட்டவருக்கு
என்ன பதில் இறுப்பதென்று
தடுமாறியே நான் திகைத்தேன்”
என்றே கூறி
இதயத்தைத் திறந்தாராம் சர்ச்சில்!
கத்தியும் கம்பும்
கடின துப்பாக்கியுமே
தனிமனித ஆயுதங்களென்று
தரணி நினைத்திருந்தபோது…
அவற்றையும் மீறி அழுத்தமான
ஆயுதமொன்று அகிலத்திலுண்டு
என்றே சொல்லி நிரூபித்தும்விட்டீர்!
எவருக்கும் எந்தத்தீங்கும்
இழைக்காத பேராயுதம் அது!
அன்பும் அஹிம்சையும் மட்டுமே
உங்கள் ஆயுதம்
உலகமே இதை அறியும்!
இரும்பிலும் பேருறுதி
இதற்குத்தானே உண்டு!
இரட்டைக்குழல் துப்பாக்கியாய்
உங்களுக்கு உதவியது
அன்பும் அஹிம்சையுமே!
அதனாலேயே அகில உலகும்
திரும்பிப் பார்த்தது!
மகாத்மாவாக்கி மகிழ்ந்துநின்றது!
இன்றுவரைக்கும் இணையாய் எவரும்
தோன்றவுமில்லை! தோன்றலுமரிது!
இவற்றுக்குத் துணையாய்
இன்னும் சில உண்டு!
சத்தியாக்கிரஹம் உண்ணாநோன்பு!
ஆயுதங்கள் அத்தனையும்
அன்பின் வழியில்!
அவற்றின்பலனோ அபரிமிதமானவை!
நீங்கள் தோன்றிய
நெகிழ்வான இம்மண்ணில்
நாங்களும் வாழ்வதில்
நாளெல்லாம் பெருமை!
முயன்று நீங்கள்
முழுதாய் வாங்கிய
சுதந்திரக் காற்றைச்
சுவாசித்து மகிழ்கிறோம்!
இஸ்ரேல்-காசா
இடையே நிகழும்
போரைக் கண்டு
புழுங்குது மனசு!
எழுபதாயிரம்பேர் இறந்த பின்னும்
நிற்காமலே அது
நீளுது தினமும்!
உங்கள் ஆயுதம்
உபயோகிக்கப் பட்டிருந்தால்…
குழந்தைகள் பெண்கள்
குற்றம்செய்யா மக்கள்
குதூகலம் பெற்றே
குவலயத்தில் இருந்திருப்பர்!
அஹிம்சையை அன்பை
விதைப்போம் நாமும்! அண்ணலைப்போல!
காந்தி காட்டிய
கனிவான வழியது!
பூமிப்பந்தில் பூத்துஅதுகுலுங்கினால்
அமைதியே எங்கும்
ஆலாய்ப் பெருகும்!
அண்ணல் பிறந்த இனியநாளில்
அன்பை அஹிம்சையைப்
பரப்புவோமென்று உளமார
நாமும் உறுதியேற்போம்!
நாளைய உலகை
நன்கு காப்பாற்ற
அவசரத்தேவை அதுவொன்றுதானே!