
உங்கள் தூக்கத்தை ஏழு மணி நேரம் வரை என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்...! உங்கள் வாழும் காலத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்...!
உலக தூக்க நாள் (World Sleep Day) ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு தூக்க மருத்துவத்துக்கான உலக அமைப்பினால் 2008 ஆம் ஆண்டு முதல் நினைவுகூரப்படுகிறது. ஆரோக்கியமான, சிறந்த தூக்கத்தின் பயன்களைக் கொண்டாடுவதும், தூக்கப் பிரச்சினைகள், மற்றும் அதற்கான மருத்துவம், கல்வி, சமூக நோக்கு ஆகியவற்றை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதும், தூக்கக் கோளாறுகளின் தடுப்பு மற்றும் அவற்றின் மேலாண்மையை ஊக்குவிப்பதும் இந்நிகழ்வின் நோக்கமாகும்.
தூக்கம், உறக்கம் அல்லது நித்திரை (Sleep) என்பது மனிதர்களும் விலங்குகளும் ஓய்வு கொள்ளும் ஓர் இயல்பான நிலை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, ஈருடக உயிரினங்கள், மீன்கள் என பல தரப்பட்ட உயிரினங்களின் தொடர்ந்த இயக்கத்துக்கு தூக்கம் உயிர் வாழுவதற்கு அவசியமாகும். பொதுவாக உயிரினங்கள் படுத்து, கண்களை மூடித் தூக்கம் கொள்ளும்.
ஓர் உயிரினம் வாழ்வியலுக்கு சாதகமான சூழல் இல்லாத காலங்களில் தனது செயல்பாடுகளை குறைத்துக்கொண்டு நீண்ட உறக்கத்தில் ஆழ்வதனைப் பொதுவாகப் அறிதுயில், பனிக்கால உறக்கம் அல்லது குளிர்கால ஒடுக்கம் (hibernation) என்பார்கள். இளஞ்சூட்டுக் குருதியுடைய உயிரினங்கள் குளிர்காலத்தில் மேற்கொள்ளும் நீண்ட குளிர் உறக்கமே இது. குளிர்காலம் வரும் முன்னரே முடிந்த வரை அதிகம் உணவினை உண்டு உடல் எடையை அதிகரித்துக் கொள்ளும். இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேரும். இந்தக் கொழுப்புதான் நீள் உறக்கத்தின் போது உயிர் வாழ சக்தி அளிக்கும். அவ்வாறு தேவையான கொழுப்பு சேமிப்பை முடித்ததும் எதிரிகள் வராத பாதுகாப்பான ஒரு இடத்தினைத் தேர்வு செய்து உடலினைச் சுருட்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்து விடும். இவ்வாறு தூங்கும் போது கிட்டத்தட்ட இறந்தவை போன்றேக் காணப்படும். உடனே எழுந்திருக்க முடியாது, எழுந்தாலும்
நடக்கவோ ஓடவோ முடியாது. இந்த நிலையில் எதிரிகள் கண்ணில் பட்டால் எளிதாக அவற்றின் தாக்கத்திற்குள்ளாகும்.
நீள் உறக்கத்தின் போது இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம், சுவாசம் ஆகியவை மிகக்குறைந்த அளவே நடக்கும். இதுபோன்ற உறக்கத்தின் போது சிறுநீர் கழிப்பதில்லை. மலம் கழிப்பதில்லை. உடல் வளர்சிதை மாற்றங்களும் இருக்காது. உயிரினை உடலில் தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கே உள் உறுப்புகள் செயல்படும். குளிர் காலத்தில் புறவெப்பம் 30 முதல் 40 டிகிரி இருந்தால் அதே வெப்ப நிலைக்கு உடலினைக் கொண்டு வரவே இந்த செயல்பாடுகள். சாதாரணமாக வெப்ப இரத்த உயிரினங்களின் வெப்பம் 98.6 பாகையில் இருக்கும்.
வேனில் உறக்கம் (Aestivation) என்பது உயர் வெப்பநிலை மற்றும் வறண்ட காலநிலையில் விலங்குகள் தங்களைக் காத்துக் கொள்ளும் வகையில், பனிக்கால உறக்கம் போன்று செயலற்ற தன்மையோடு உறங்கி, குறைந்த அளவிலான வளர்சிதை மாற்ற விகிதத்துடன் செயலற்ற நிலையில் இருத்தல் ஆகும். இது வெப்பம் மற்றும் வறட்சி மிகுந்த காலங்களான, சூடான உலர் பருவத்தில், பெரும்பாலும் கோடை மாதங்களில் நடக்கும்.
முதுகெலும்புள்ள மற்றும் முதுகெலும்பற்ற விலங்குகள் உயர் வெப்பநிலையிலிருந்து தங்களுக்கு சேதமேற்படுவதைத் தவிர்ப்பதற்காக, இந்த வேனில் உறக்கத்தில் ஆழ்கின்றன.
நிலவாழ் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் இரண்டும் இந்த உறக்கத்தை அடைகின்றன. இவ்வாறு சில வகை நத்தைகள், பாலைவன ஆமை, சில வகைத் தவளைகள் முதலியவை பெரும்பாலானவை பாலைவன மணலுக்குள் புதைந்து கொண்டு உறங்க ஆரம்பித்து விடுகின்றன கனவு (Dream) என்பது, ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவது கணக்கிடப்பட்டிருக்கிறது. கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான அறிவியல் புரிதல் இன்னும் இல்லை. மூளையில் உள்ள நினைவுக் குறிப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இது அனைத்து பாலூட்டிகளிலும் ஏற்படக்கூடிய விளைவாகும். ஆர்மடில்லோக்களில் மிகுதியாக இருப்பதாக அறிந்துள்ளனர்.
தூக்கமின்மை (Insomnia) என்பது உடலுக்குத் தேவையான அளவு தூங்க முடியாமல் இருக்கும் ஒரு நோயின் அறிகுறி, தூங்குவதில் சங்கடங்கள் ஏற்படுதல் போன்று குறைவான தூக்கத்தினால் ஏற்படுகின்ற கோளாறுகளினால் உருவாகும் நோயின் அறிகுறியாகும். உறக்கமின்மையை ஒரு நோயாக நம்மால் கருத முடியாது. அதனை அறிகுறிகள் மூலம் ஆய்ந்து உணர்தலும் கடினமாகும்.
தூக்கத்தை மேற்கொள்வதிலும் அல்லது மேற்கொண்ட தூக்கத்தை நீட்டிப்பதிலும் இடையூறுகள் இருந்தால் அதனை "தூக்கமின்மை" என்று விவரிக்கலாம். இது தேவையான நேரம் அல்லது ஆழ்ந்த தூக்கம் இல்லாததால் ஏற்படுகின்றது. இதன் விளைவு விழித்து இருக்கும் நேரங்களில் நம்மால் சரிவர செயல்பட முடிவதில்லை. வேறு எந்தk காரணமும் இல்லாமல் ஏற்படுகின்ற தூக்கமின்மை (கரிமங்களுடன் அல்லது கரிமங்கள் அல்லாமல்) என்கின்ற உறக்க நோய் பிரைமரி இன்சோம்னியா (முதல் நிலை தூக்கமின்மை) என்று அழைக்கப்படுகிறது.
தூக்கமின்மையின் அளவுகோல்கள் வேறுபட்டு இருந்தாலும், அது தெளிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை, நிலையற்ற (Transient), தீவிரமான (Acute), மற்றும் நாள்பட்ட/ நீடித்த (Chronic) தூக்கமின்மை என மூன்று வகைப்படும். இவற்றை முறையே, எளிதில் குணமாகக்கூடிய தூக்கமின்மை, சற்றுக் கடுமையான / தீவிரமான தூக்கமின்மை, முற்றிய தூக்கமின்மை எனக் கூறலாம்.
அமெரிக்க வாழ் மக்களிடையே அமெரிக்கப் புற்றுநோய் சங்கம் நடத்திய ஆய்வில், இரவு நேரங்களில் ஏழு மணி நேரம் உறங்குபவரின் இறப்பு விகிதம் குறைவான அளவில் உள்ளது. ஆனால், 6 மணி நேரத்திற்குக் குறைவாகவோ அல்லது 8 மணி நேரத்திற்கு அதிகமாகவோ உறங்குபவரின் இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது என்று கண்டறிந்துள்ளது.
எட்டரை மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக உறங்குபவரின் இறப்பு விகிதம் 15% அதிகரித்துள்ளது. கடுமையான தூக்கமின்மை, பெண்களிடத்தில் மூன்றரை மணிநேரத்திற்கும் குறைவாகவும், ஆண்களிடத்தில் நான்கரை மணி நேரத்திற்கும் குறைவாகவும் இருக்கிறது. தூக்கம் காணப்படுபவர்களின் இறப்பு விகிதமும் 15% ஆக இருக்கிறது. கோமோர்பிட் ஒழுங்கின்மைகளைக் கட்டுப்படுத்தியதன் மூலம் ஓரளவிற்கு தூக்கமின்மையால் உண்டாகும் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடிந்துள்ளது. உறக்க நேரத்தையும், தூக்கமின்மையையும் கட்டுப்படுத்தும் தூக்க மாத்திரைகளின் உபயோகமும் இறப்பு விகிதத்தை அதிகப்படுத்துகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓர் இரவில் ஆறரை மணி நேரம் முதல் ஏழரை மணி நேரம் வரை தூங்குபவரிடையேதான் இறப்பு விகிதம் குறைவான அளவில் உள்ளது. நான்கரை மணி நேரம் தூங்குவது கூட இறப்பு விகிதத்தை மெல்லிய அளவில் அதிகப்படுத்துகிறது. இதனால் முதல் வகை முதல் மத்திய வகை வரையான தூக்கமின்மை ஒருவரின் ஆயுளை அதிகப்படுத்தலாம் என்றும், கடுமையான
தூக்கமின்மை வகை இறப்பு விகிதத்தைக் குறைவாகவே பாதிக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இரவில் உங்கள் தூக்கத்தை ஏழு மணி நேரம் வரை என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்...! உங்கள் வாழும் காலத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்...!