

காலைப் பொழுதில் வீட்டின் தாழ்வாரத்திலும், மேற்கூரைகளிலும் சிட்டுக்குருவிகள் கூட்டமாக அமர்ந்து கீச்.. கீச்.. என்று கூச்சலிட்டு கொண்டு இருக்கும். ஆனால் இப்போது சிட்டுக்குருவிகளும் இல்லை, அவைகள் எழுப்பும் கூச்சல் சத்தமும் இல்லை..!
நான் சென்னையில் உள்ள எனது சித்தப்பா வீட்டிற்கு சென்று இருந்த போது தற்செயலாக அவரிடம் கேட்டேன், “சித்தப்பா நீங்க சிட்டுக்குருவிய கடைசியா எப்ப பார்த்தீங்க?”
அதற்கு அவரோ சிரித்துக் கொண்டு போனை பார்த்தபடி, “சின்ன பிள்ளையா இருக்கும்போது பார்த்தது டா” என்றார்.
இந்த விஷயத்தை நாம் கூர்ந்து கவனித்தால் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு 'யார் காரணம்?' என்று தெரியவரும்.
மனிதன் தனது பேராசைக்காக இயற்கை வளங்களை சுரண்டுகிறான். மலை வளம், கனிம வளம், மண் வளம், நில வளம், நீர் வளம் இப்படி பல இயற்கை வளங்களை அளவுக்கு அதிகமாக சுரண்டி எடுப்பதன் மூலம் இயற்கையை சார்ந்துள்ள விலங்குகள், பறவைகளின் பல்லுயிர் பெருக்கம் அதால பாதாளத்திற்கு செல்கிறது..!
சிட்டுக்குருவிகளின் இனம் எதனால் அழிந்து கொண்டே வருகிறது?
விவசாயத்தில் அதிக வீரியம் கொண்ட பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்போது; சிறு சிறு புழுக்கள், பூச்சிகள் அழிந்து விடுவதால் இதை சார்ந்து உணவுக்காக வரும் சிட்டுக்குருவியின் நிலை கேள்விக்குறியாகிறது?
கான்கிரீட் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக இருப்பதால் இடுக்குகளில் சிட்டுக்குருவிகளால் கூடு கட்ட முடியாமல் போகிறது.
சிறிய மரங்கள்,செடிகளை வெட்டுதலும் சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதை மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது.
செல்போன் கதிர்வீச்சுகளும் சிட்டுக்குருவிகளின் இனப்பெருக்க நிலைகளையும் சுழற்சிகளையும் பாதிக்கிறது.
குப்பைகளை எரிப்பது, இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவது. அதேபோல் திறந்த வெளியில் குப்பைகளை கொட்டுவது இப்படி பல செயல்பாடுகளால் பறவைகளுக்கு கிடைக்கக்கூடிய உணவுகள் மாசுபடுத்தப்படுகின்றன.
பெரும்பாலான வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளின் ஜன்னல்களில் பிரதிபலிக்கும் கண்ணாடிகள் இருப்பதால் குருவிகள் அதில் மோதியும், அலகால் கொத்தியும் பாதிப்புக்குள்ளாகிறது.
வாகனங்களில் மூலம் எழுப்பப்படும் ஒலி, தொழிற்சாலை இயந்திரங்களின் சத்தம் இப்படி அதிக ஒலியால் சிட்டுக்குருவிகள் அச்சத்திற்குள்ளாகி பாதிக்கப்படுகிறது.
ஒரு சில நேரங்களில் மனிதர்களாலேயே சிட்டுக்குருவிகள் வேட்டையாடப்படுகின்றன.
சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதால் நமக்கு என்ன பயன்?
சிட்டுக்குருவிகள் அதிகமாக இருந்தால் புழுக்கள், பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்கும். பூச்சிகள் குறைந்தால் அதன் மூலம் மனிதர்களுக்கும், தாவரங்களுக்கும் வரும் நோய்கள் தடுக்கப்படும். நோய்கள் தடுக்கப்பட்டால் மனிதனின் ஆரோக்கியமும், விவசாயமும் செழிக்கும். விவசாயம் நன்கு செழித்தால் உணவு தட்டுப்பாடு என்பதே இருக்காது. குருவிகள் மூலம் விதை பரவல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மரங்கள், செடிகளின் எண்ணிக்கையும் உயரும். இதன் மூலம் மழைபொழிவு அதிகமாக கிடைக்கும். மழை பொழிவு அதிகமாக கிடைத்தால் நீர் பற்றாக்குறை என்பதே இருக்காது. இப்படி ஒவ்வொன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு இருக்கிறது. எனவே இயற்கையில் உள்ள ஒவ்வொரு உயிர்களும் முக்கியம். ஒன்றை அறுத்து விட்டால் அந்த உணவு சங்கிலியே பாதிக்கப்படும்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கு ஏதுவாக அட்டைப்பெட்டிகளை கட்டி தொங்கவிடலாம்.
சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைக்கலாம். பக்கத்திலேயே தானியங்களை போடலாம்.
வீட்டிலுள்ள ஒலிபெருக்கியின் பயன்பாட்டை குறைத்தல்.
மரம், செடிகளை நடுதல்.
சிறிய மரப்பெட்டிகள் வைப்பதன் மூலம் சிட்டுக்குருவிகள் தங்குவதற்கு ஏதுவாக இருக்கும்.
சிட்டுக்குருவிகளை அழிப்பதற்கு பல காரணங்களும், விளைவுகளும் இருந்தாலும் கூட ஆனால் அவற்றின் இனத்தை பெருக்குவதற்கு மேலே கூறிய ஐந்து வழிமுறைகளே போதும். அளிப்பதற்கு தான் ஆயிரம் காரணங்கள் இருக்குமே. தவிர அதை உருவாக்குவதற்கு நம்மால் முடிந்த சிறிய முயற்சிகளினாலே அது சாத்தியமே..!
கடைசியாக ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமானால் சிட்டுக்குருவிகள் இருப்பதால் மனிதனின் மன நிம்மதி என்றுமே அழியாது என்பதே நிதர்சனம்..!