
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று உலக நடவு நாள் (World Planting Day) கொண்டாடப்படுகிறது. வீடு மற்றும் தோட்டங்களில் மரங்களை நடவு செய்து, தாவரங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கத்தில், 2007 ஆம் ஆண்டு 'கிரகத்தை நடுவோம்' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் ஒரு மில்லியன் மரங்களை நடுவதை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்நாள் உலகம் முழுவதும் பரவி, கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் மக்களை மரங்களை நடவும், தோட்டக்கலை நடவடிக்கைகளில் ஈடுபடவும் ஊக்குவிக்கிறது.
தோட்டக்கலை (Gardening) என்பது வீட்டுக்கு அருகில், முகப்பிலோ பின்னாலோ தாவரங்களை நட்டு வளர்க்கின்ற நடைமுறையாகும். தோட்டங்களில் அழகூட்டும் தாவரங்கள் அவற்றின் பூக்கள், இலைகள், அல்லது ஒட்டு மொத்தத் தோற்ற வனப்பு கருதி வளர்க்கப்படுகின்றன. கிழங்குகள், கீரைகள், பழங்கள், மூலிகைகள் தரும் தாவரங்களும் உணவுக்காகவும், சாயங்களுக்காகவும், மருத்துவத்துக்காகவும், நறுமணப் பொருட்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. தோட்டக்கலை ஓய்வு கொள்ளும் வேலையாகவும் கருதப்படுகிறது.
சிறிய பழத் தோட்டத்தில் இருந்து, செடிகள், மரங்கள், மூலிகைகள் எனப் பலவகைத் தாவரங்கள் வளர்க்கும் பெருந்தோட்டங்கள் வரை தோட்டவேலை அல்லது தோட்டவளர்ப்பு அமையும். வீட்டுப் புறக்கடையில் வளர்க்கும் வீட்டுத் தோட்டம் முதல், தாழ்வாரங்கள், வீட்டோரங்கள் தொட்டியில் அமையும் மதில்சுவர்த் தோட்டங்கள், கட்டிட உட்புற, வெளிப்புறத் தோட்டங்களாகவும் அமையலாம்.
தோட்ட வளர்ப்பு கடின உழைப்பினை வேண்டுகிறது, ஆழ்ந்த ஈடுபாட்டைக் கோருகிறது. இவை பண்ணைகள், காடுகளை விட செறிவான உழைப்பைக் கோருவதால் அவற்றில் இருந்து பெரிதும் வேறுபட்டுள்ளன.
உலகின் மிகப் பழைய தோட்ட வடிவம் காட்டுத் தோட்டமாகும். இது காடு சார்ந்த உணவு விளைச்சல் களமாகவும் விளங்கியது. காட்டுத் தோட்டம் வரலாற்றுக்கு முந்தையக் காலத்தில் ஆற்றோரமாக அமைந்த காடுகளிலும், பருவக்காற்று மழை வட்டாரங்களின் ஈரமான மலைச் சாரல்களிலும் தோன்றியது. மேலும், அவற்றுக்கு அருகே இருந்த பயன் மரங்களும் கொடிமுந்திரி தாவர இனங்களும் இனம் காணப்பட்டு மேம்படுத்தப்பட்டன. தோட்டத்தின் வேண்டாத் தாவர இனங்கள் நீக்கப்பட்டன. பிறகு, அயல் தாவரங்களும் தெரிவு செய்து தோட்டத்தில் வளர்க்கப்பட்டன.
முதல் நாகரிகங்கள் தோன்றியதும், செல்வந்தர்கள் அழகுக்காகத் தோட்டங்களை வளர்க்கலாயினர். பண்டைய எகுபதியின் கல்லறைத் தோட்ட ஓவியங்களில் கி.மு 1500 ஆண்டளவில் உருவாகிய புதிய அரசாட்சியில் தோட்டமும் நிலக்கிடப்பும் வடிவமைத்ததற்கன சான்றுகள் கிடைத்துள்ளன; அவை, தாமரை மலர்ந்த சிறுகுளங்களையும், பனைமர வரிசையையும் சீரொருமையுடன் திகழும் வேலங்கன்றுகளையும் காட்டுகின்றன. பண்டையத் தோட்ட வடிவமைப்புக்கான சிறந்த எடுத்துக்காட்டு பாபிலோனியத் தொங்கும் தோட்டமாகும். இது பண்டைய ஏழு அதிசயங்களில் ஒன்றாகும். பண்டைய ரோம் நகரில் பத்து தோட்டங்கள் வரை உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டுள்ளன.
பண்டைய எகிப்து நாட்டுச் செல்வந்தர்கள் நிழலுக்காக தோட்டங்களை வளர்த்துள்ளனர். எகிப்து நாட்டு மக்கள் மரங்களையும் தோட்டங்களையும் கடவுளரோடு தொடர்புப்படுத்தினர். அவர்களின் தெய்வங்கள் தோட்டங்களைக் கண்டு மகிழ்ச்சி கொண்டதாகக் கருதினர். பண்டைய எகிப்தின் தோட்டச் சுவர் ஓரங்களில் மரங்களை வரிசைகளில் நட்டு வளர்த்துள்ளனர். இவற்றில் பரவலாகப் பேரீச்ச மரங்களும், ஊசியிலை மரங்களும், வில்லோ மரங்களும், கொட்டை தரும் மரங்களும் அமைந்திருக்கின்றன. தோட்டங்கள் உயர் சமூக, பொருளியல் செழிப்பின் அறிகுறிகளாகி விட்டன. இவர்கள் திராட்சைத் தோட்டங்களைச் செழிப்பின் அடையாளங்களாக வளர்த்திருக்கின்றனர்.
வீட்டுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் தோட்டம் வீட்டுத் தோட்டம் எனப்படுகின்றது. பொதுவாகத் தோட்டங்கள் வீட்டைச் சூழ்ந்துள்ள நிலப்பகுதியிலேயே அமைக்கப்படுகின்றன. தற்போது, வீட்டுக் கூரைகள், பலகணித் தொட்டிகள், பலகணிகள் போன்ற பகுதிகளிலும் அமைக்கப்படுகின்றன. கட்டிடங்களுக்குள் தாவரங்களை வளர்ப்பது, 'உள்ளகத் தோட்டக்கலை' எனப்படுகிறது. இங்கு, வீட்டுத் தாவரங்களே வளர்க்கப்படுகின்றன.
சிறு குளங்கள், தடாகங்கள் போன்றவற்றுக்குப் பொருத்தமான தாவரங்களை வளர்ப்பதை, 'நீர்த் தோட்டக்கலை' என்கின்றனர். வீட்டுத் தோட்டங்களில் மட்டுமன்றி, பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், நெடுஞ்சாலையோரங்கள், சுற்றுலாப்பகுதிகள் போன்றவற்றிலும் தோட்டக்கலை அறிவு பயன்படுகிறது.
தோட்டங்களில் இருக்கும் தாவரங்களின் பசுமை, அதிலிருந்து கிடைக்கும் காற்று, நிழல் போன்றவை மனிதர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருகிறது. மனக் குழப்பமுடையவர்கள் மன அமைதி பெறுவதற்கு தோட்டங்களையே நாடுகின்றனர்.
உலக நடவு நாளில் வீட்டுக்கு அருகில் இடமிருந்தால், நமக்கு நிழலுடன் வேறு பலன் தரக்கூடிய மரங்களை இன்று நடவு செய்து பராமரித்து வளர்க்க முயற்சிக்கலாம்.