

இன்று நாம் பயன்படுத்தும் பென்சிலுக்கு 500 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. பென்சிலின் கூரில் உள்ள பொருளுக்கு 'கிராபைட்'என்று பெயர். இது நிலக்கரியின் மாறுபட்ட வடிவம் ஆகும்.
பென்சில் வரலாறு:
கிபி 16ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் உள்ள பரோடேல் என்ற இடத்தில் ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. அதன் அடிப்பகுதியில் சாம்பல் நிறத்தால் ஆன ஒரு உலோகம் படிந்திருந்தது. அக்காலகட்டத்தில் அது கிராபைட் என்பதும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் கிராபைட் கொண்டு ஒரு பேப்பரில் குறித்தால் அது கருப்பு நிறத்தில் அடர்த்தியாக இருப்பது மட்டும் தெரிந்தது. ஆங்கிலேயர்கள் கிராபைட் கட்டிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எழுத பயன்படுத்தினர். வெளி உலகத்திற்கும் விற்பனை செய்யவும் தொடங்கினர். அதன் பிறகு தான் இதற்கு பென்சில் என்ற பெயர் வந்தது. லத்தீன்மொழியில் 'தரமான பிரஷ்' என்பதற்கு பென்சிலியம் என்று பெயர். அதுவே சுருங்கி 'பென்சில்' என்று ஆனது.
1858 -க்குப் பிறகு பென்சிலின் அடியில் ரப்பர் இணைக்கப்பட்டது. இப்படி படிப்படியாக முன்னேறிதான் பென்சில் தற்போது நிலையை எட்டி இருக்கிறது . இன்றும் கூட பென்சில் வடிவமைப்பில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் பயன்படுத்தப்படும் கிராபைட் - களிமண் கலவை, காண்டேவின் என்பவரின் கண்டுபிடிப்பு.
1564-ம் ஆண்டு இங்கிலாந்தில் பெருமளவில் கிராபைட் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிராபைட் எழுதுவதற்கு எளிதாக இருந்ததால் ஆடுகள் மீது அடையாளம் இடப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
முதல் பென்சில் உருவானது
இத்தாலியைச் சேர்ந்த சிமோனியோ - வின்டியானா தம்பதி, கிராபைட் குச்சியைவைத்து எழுத ஆரம்பித்தனர். இப்படித்தான் முதல் பென்சில் உருவானது. அவர்களே சில முயற்சிகளுக்கு பிறகு மென்மையான மர உருளையை இரண்டாக வெட்டி நடுவில் குடைந்து அதற்குள் கிராபைட் குச்சியை வைத்து பசையால் ஒட்டி பென்சில்களை உருவாக்கினார்கள். இந்த தயாரிப்பு முறை தான் இன்றளவும் பென்சில் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1662 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து பென்சில்கள் தயாரிக்கப்பட்டன. அடுத்து பிரான்சை சேர்ந்த நிகோலஸ் ஜாக்1795ஆம் ஆண்டு கிராபைட் துகளுடன் களிமண்ணையும் சேர்த்து நவீன பென்சிலை உருவாக்கினார். களிமண் அளவை மாற்றி பென்சில்களை உருவாக்கும் போது அழுத்தத்திலும் நிறத்திலும் மாற்றம் ஏற்பட்டது.
1790 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவை சேர்ந்த ஜோசப் ஹார்ட் மத் koh - I- Noor என்ற பென்சில் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார். 1802 - ஆம் ஆண்டு உரிமை பெற்று வியன்னாவில் இந்த நிறுவனம் இன்றளவும் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.
பென்சில் தயாரிப்பு உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. ரப்பர் வைத்த பென்சில் , பிளாஸ்டிக் உருளை/கிராபைட், இங் குச்சிகள் வைத்த பென்சில், கிராபைட் இங்கபென்சில், வண்ண பென்சில் என்று ஏராளமான வகைகள் வந்து விட்டன . வண்ண பென்சில்களில், மெழுகும் வண்ணமும் சேர்க்கப்படுகின்றன.
பென்சில் குறியீடு
ஐரோப்பாவில் தயாராகும் பென்சில்களில் HB என்று குறிப்பிடப்பட்டிருக்கும். B கறுப்பையும், H கடினத்தன்மையையும் குறிக்கின்றன. அமெரிக்காவில் தயாராகும் பென்சில்களில் கடினத்தன்மையை குறிப்பதற்கு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பென்சில், வண்ண பென்சில் தயாரிப்பில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. ஜெர்மனியும் பிரேசிலும் அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன.
ஒரு பென்சிலில் சுமார் 35 மைல் தூரத்துக்கு கோடு போடலாம். 45 ஆயிரம் வார்த்தைகளை எழுதலாம் என்கிறார்கள்.
பென்சிலை ஆரம்ப காலத்தில் பயன்படுத்தியதை லெட் பென்சில் என்றே பலரும் அழைக்கின்றனர். ஆனால் இப்போது அது கிடையாது. கிராபைட், களிமண் பென்சில்களே பயன்பாட்டில் உள்ளன.