
நடுவர்: கூர்மையான பென்சிலை போன்று கூர்மையான கருத்துகளுடன் பென்சில் அணி சார்பாக வந்திருக்கும் பெண்களுக்கும், பேனாவை போன்று கரடுமுரடாக ஆனால் கச்சிதமாக, பேனா அணி சார்பில் வந்திருக்கும் ஆண்களுக்கும் வணக்கம். இன்னும் கொஞ்ச நேரத்தில் பட்டிமன்றம் ஆரம்பிக்க போகிறது.
இரண்டு பக்கத்திலிருந்தும் என்னை கூர்மையான முனையால் குத்த போறாங்க, என் மனைவி வேற சொன்னங்க, வேண்டாங்க தலைப்பே விபரீதமா இருக்குன்னு...
(பார்வையாளர்கள் சத்தமாக சிரித்தார்கள். 😄😄😄😄😄😄)
நடுவர்: வாங்கம்மா பென்சில் அணியிலிருந்து,
பென்சில் அணி: நடுவர் அவர்களே, வணக்கம், நடுவரே நான் உங்களை ஒரு கேள்வி கேட்கலாமா?
நடுவர்: கேளுங்கம்மா (சிரித்து கொண்டே)
பென்சில் அணி: ஐயா, நீங்கள் முதன் முதலா நோட்டு புத்தகத்தில் எழுதும் போது எதனால் எழுதினீர்கள்? பென்சிலா? பேனாவா?
நடுவர்: ஏம்மா என்னை மாட்டி விடவேண்டும் என்றே கேட்கிறாயா? பென்சிலால் தான் எழுதினேன்
பென்சில் அணி: ஆக ஒருவருக்கு முதன் முதலாக எழுத ஏற்றதாக இருப்பது பென்சில் தான். மேலும், பேனாவால் எழுதினால் தவறாக இருந்தால் அழிக்க முடியாது. நமக்கு முதலில் உதவியாக பென்சில் தான் இருந்தது... ஆகவே பென்சில் தான் உயர்ந்தது என்று கூறி விடை பெறுகிறேன்.
நடுவர்: இந்த அம்மா பத்த வெச்சுட்டு போய்ட்டாங்க, இப்ப பேனா அணியிலிருந்து என்ன பண்ண போறாங்களோ! வாங்க பேனா ஐயா அவர்களே!
பேனா அணி: நடுவர் அவர்களே வணக்கம். ஐயா ஒரு வேண்டுகோள்
நடுவர்: ஆரம்பிச்சட்டாங்க அவங்க பங்கிற்கு, சொல்லுப்பா
பேனா அணி: தயவு செய்து coat buttonஐ கழட்டி உங்க சட்டை பாக்கெட்டை எல்லோருக்கும் காண்பியுங்க
நடுவர்: கதை இப்படி சுத்துதா... புரிந்துவிட்டது...
(சட்டை பாக்கெட்டை காண்பித்தார்...)
பேனா அணி: (சிரித்து கொண்டே) ஏன் ஐயா பாக்கெட்டில் பென்சிலை வைக்காமல் பேனாவை வைத்திருக்கிறீர்கள்?
நடுவர்: மொத்தத்தில் இன்னிக்கு என்னை ஒரு வழியாக்கிடுவ போல இருக்கேப்பா, ஏதாவது குறித்து கொள்ள.. அல்லது sign போடுவதற்காக வைத்திருக்கிறேன் பா!
பேனா அணி: ஐயா இது போதும், நீங்களே சொல்லி விட்டீர்கள், நான் சொல்ல வந்ததை. பேனாவால் தான் sign பண்ண முடியும். மேலும் பள்ளிக்கூடத்தில் கூட மூன்றாம் வகுப்பிற்கு பிறகு பேனாவால் தான் எழுத வேண்டும். மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே அரசாங்க தேர்வு, neet, jee, இப்படி எல்லா தேர்வுகளிலும் பேனாவால் தான் எழுத வேண்டும். ஆகவே பேனா தான் முக்கியம் என்று கூறி விடை பெறுகிறேன்.
நடுவர்: இவர் நெருப்பில் இன்னும் கொஞ்சம் நெய்யை ஊத்திட்டு போய்ட்டார். அடுத்து இன்னொரு பென்சில் சகோதரி வராங்க, அந்தம்மா என்னத்தை ஊத்த போறாங்களோ பார்க்கலாம், வாங்கம்மா, வாங்க!
பென்சில் அணி: நடுவர் அவர்களே வணக்கம். இதற்கு முன்னால் வந்த பேனா சகோதரன் பேனாவால் தான் sign போட முடியும், பரீட்சை எழுத முடியும் என்று கூறினார். ஒன்றை அவர் மறந்து விட்டார் என நினைக்கிறேன். எல்லா பரீட்சைகளிலும் side ல் rough work ஐ பென்சிலால் தான் செய்ய வேண்டும், கணக்கு பரீட்சையில் geometry பகுதியில் பென்சில்தான் மிக அவசியம். வீடு கட்டுவதற்கான் drawing இல் கூட முதலில் பென்சிலால் வரைந்து விட்டு பிறகுதான் அதன் மேல் drawing penஆல் வரைவார்கள். என் சகோதரருக்கு இதேல்லாம் தெரியாது போலும். நடுவர்களே நன்றாக யோசித்து தீர்ப்பை கொடுக்கவும். விடைபெறுகிறேன், நன்றி.
நடுவர்: பென்சில் அணியிலிருந்து நாரு நாரா கிழிச்சிட்டு போய்ட்டாங்க... இப்ப பேனா அணியிலிருந்து கடைசியாக ஒரு ஆண் சிங்கம் வருகிறார், வாங்க ஐயா!
பேனா அணி: நடுவர் அவர்களுக்கு வணக்கம். இதற்கு முன்னால் பேசின பென்சில் சகோதரி பென்சிலால் தான் drawing போட முடியும், geometry பண்ண முடியும் அது இது என்று சொன்னாங்க... நான் ஒன்றை கேட்கிறேன், building drawing வரைந்து blue print எல்லாம் எடுத்த பின் கடைசியாக அதிகாரி பேனாவால் தான் sign பண்ணுவார். அதைப் போல் என்னதான் geometry rough work இதை எல்லாம் பென்சிலில் செய்தாலும் கடைசியில் ஆசிரியர் பேனாவால் திருத்தி பேனாவால் தான் மதிப்பெண் போடுவார். ஆகவே பேனாவுக்குத்தான் அதிகாரம்! பேனாதான் சிறந்தது என்று அடித்து கூறி விடைபெறுகிறேன், நன்றி.
நடுவர்: இரண்டு அணியும் பின்னிட்டு போய்ட்டாங்க, அவங்க வேலை ஆயிடுத்து, இனி எனக்குதான் மண்டைகுடைச்சல். பேனாவா? பென்சிலா? ரொம்ப இக்கட்டான சூழ்நிலை. தீர்ப்பை கூற வேண்டிய நேரம் வந்தாச்சு...
இப்ப நான் இரண்டு பக்கமும் திரும்ப மாட்டேன், ஏனென்றால் பயமாக இருக்கு. இரண்டு அணியினரும் கூர்மையா கண்களை உருட்டி கிட்டு என்னையே பார்க்கிறார்கள். அதனாலே நான் நேரா ஜனங்களை பார்த்தே சொல்றேன். எழுதுவதற்கு பென்சிலும் பேனாவும் இரண்டும் அவசியம். ஆனால் எதைக் கொண்டு எழுதினாலும் எழுதுவதற்கு காகிதம் தேவை! ஆகவே பேனா, பென்சில் இரண்டையும் விட, காகிதம் தான் சிறந்தது என்று கூறி தீர்ப்பளிக்கிறேன்!