உலகின் தலைசிறந்த கணித மேதைகளில் ஒருவர் ஜி.எச்.ஹார்டியின். ‘கணிதத் துறையில் எனது மிகப்பெரிய பங்களிப்பு ராமானுஜனை கண்டெடுத்ததுதான்' என பெருமிதத்துடன் கூறியதுடன், உலக கணித மேதைகளை வரிசைப்படுத்தச் சொன்னபோது ராமானுஜனுக்கு 100 மதிப்பெண்ணும் தனக்கு 25 மதிப்பெண் மட்டுமே போட்டுக்கொண்ட தன்னடக்கம் மிக்கவர் இவர். இங்கிலாந்து நாட்டின் சர்ரே பகுதியில் 1877ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி பிறந்த ஜி.எச்.ஹார்டி (காட்பிரே ஹரால்ட் ஹார்டி). கணித எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வு ஆகிய துறைகளின் வல்லுநர்.
ஹார்டிக்கு கணிதம் மீது அதிக ஆர்வம். தனது இளம் வயதிலேயே மில்லியன் வரை எண்களை எழுதும் ஆற்றலைப் பெற்று இருந்தார். தனது கணித ஆர்வம் காரணமாக கிரின்லே கல்லூரியில் கணிதம் மற்றும் லத்தீன் பாடங்களைப் படித்து அதில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். அதனால் வின்ஸ்டர் கல்லூரியில் ஸ்காலர்ஷிப் வாங்கிப் படித்தார். கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் 1896ம் ஆண்டு சேர்ந்த ஹார்டி, அங்குதான் முழுக்க முழுக்க கணித பாடங்கள் சம்பந்தப்பட்ட டிரப்போசிஸ் தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். இதனால் 1901ம் ஆண்டு ‘ஸ்மித்' பரிசை பெற்றார். அதனைத் தொடர்ந்து ஹார்டி தனது கணித கண்டுபிடிப்புகள் பற்றிய கட்டுரைகளை புகழ் பெற்ற கணிதவியல் பத்திரிகையான ‘மெஸ்ஞ்சர் ஆப் மேத்தமேடிக்ஸ்’ஸில் வெளியிட்டார்.
கணிதத்தில் முதுநிலை பட்டம் பெற்ற ஹார்டி பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றினார். ஜே.இ.லிட்டில் வுட் போன்ற பல்வேறு கணிதவியலாளர்களுடன் இணைந்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு கணிதவியல் கட்டுரைகளை வெளியிட்டார். 'இண்டகரல் பற்றிய அவருடைய முதல் கண்டுபிடிப்பு முதல் கட்டுரையாக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து 60 பேப்பர்கள் 1905 முதல் 1915 வரை வெளியே வந்தது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஹார்டி இருந்தபோது ‘இண்டகரேசன் பங்ஷன்ஸ் ஆப் சிங்கள் வேரியபில்' (1905), ‘ஏ கோர்ஸ் ஆப் பியூர் மேத்தமேட்டிக்ஸ்' (1908), ஆர்டர் ஆப் இன்பினிட்டி (1910), ‘தி ஜெனரல் தியரி ஆப் டைரிச்லெட்ஸ் சீரிஸ் (1915) என்று கணித உலகின் புகழ் பெற்ற புத்தகங்களை எழுதினார்.
ஹார்டியின் நூல்கள் இங்கிலாந்தில் மட்டுமே புகழ் பெறவில்லை, அவருடைய கணித நூல்கள் உலகெங்கிலும் புகழ் பெற்றது. அதில் ‘ஆர்டர் ஆப் இன்பினிட்டி’ நூல்தான் நம் ஊர் கணித மேதை ராமானுஜத்தை மிகவும் பாதித்தது. அதனால் தன்னுடைய கணித சந்தேகங்களையும், தனது சொந்த கணிதத் தேற்றங்கள் 120யையும் சேர்த்து 1913ம் ஆண்டு இரு கடிதங்களை ராமானுஜம், ஹார்டிக்கு அனுப்பினார். கணித சந்தேகங்களுக்கு ராமானுஜன் பல கணித அறிஞர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், ஹார்டி மட்டுமே ராமானுஜனுக்கு பதில் கடிதம் எழுதியதுடன் அவரை இங்கிலாந்துக்கும் அழைத்தார்.
ஹார்டியின் அழைப்பை ஏற்று 1914ம்ஆண்டு இங்கிலாந்து சென்றார் ராமானுஜன். அதிலிருந்து 4 ஆண்டுகளுக்கு ஹார்டி ராமானுஜனுக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் விளங்கினார். சில அடிப்படை கணித விஷயங்களை ராமானுஜனுக்கு புரிய வைத்தார். அதேவேளையில் ஹார்டியின் சந்தேகங்களையும் ராமானுஜம் தீர்த்து வைத்தார். அங்கு ராமானுஜம் 27 ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டார். அதில் 7 கட்டுரைகளை ஹார்டியின் கூட்டு முயற்சியில் வெளியிட்டார். இதன் காரணமாக ராமானுஜம் பெயர் உலகளவில் தெரியவந்தது.
ஹார்டி தனது கணித வாழ்க்கையில் 300க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளையும், கணித சம்பந்தப்பட்ட 11 புத்தகங்களையும் எழுதியுள்ளார். அதில் மிகவும் பிரபலமானது 1940ம் ஆண்டில் வெளிவந்த ‘ஒரு கணிதவியலாளரின் தன்னிலை விளக்கம்' (ஏ மேதமேடிசியன்ஸ் அபாலஜி) எனும் புத்தகம். சாமானியர்களுக்கும் கணிதத்தை புரியவைக்கும் அரிய படைப்பு. ஹார்டி கணிதத்தில் மட்டுமே கவனம் செலுத்தி இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல்1947ம் ஆண்டு டிசம்பர் 1 அன்று தனது 70ம் வயதில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ச்சைர் பகுதியில் காலமானார்.