தேசிய பெண்கள் ஆதரவு மகளிர் தினம், அமெரிக்காவில் 2018ல் தொடங்கியது. கலை, அரசியல் மற்றும் வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் செல்வாக்குமிக்க பெண்களை கௌரவிக்கும் வகையில் இந்த சிறப்பு தினத்தை ஏமி ஓ டோனல் உருவாக்கினார். பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு ஆதரவளிப்பதின் முக்கியத்துவத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது. அதன் முக்கியத்துவத்தையும் நன்மைகளையும் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பெண்களுக்கு ஆதரவாக பெண்கள் செயல்பட வேண்டியதன் அவசியம்: இந்த உலகில் பெண்கள் வீடுகளில், பணிபுரியும் இடங்களிலும் மற்றும் சமுதாயத்திலும் பலவிதமான இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக உரிமைக்குரல் கொடுக்க பெரும்பான்மை ஆண்கள் முன்வருவார்களா என்பது சந்தேகமே. இந்த நிலையில் பெண்கள் தங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும், உடன் பணிபுரியும் மகளிர்க்கும் மற்றும் சமுதாயத்தில் பிற பெண்களுக்கும் தங்களது ஆதரவையும் உதவிக்கரத்தையும் நீட்டுவது அவசியம்.
உதவும் வழிமுறைகள்:
சமூகத்தில்: பெண்கள் ஒருவரை ஒருவர் ஆதரிக்கும்போது அது தனிமனித சுயமரியாதை மற்றும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஒரு சமூகத்தின் ஆதரவை உணரும்போது பெண்கள் தங்களது தன்னம்பிக்கையின் அளவு உயர்ந்து செயல்படத் தேவையான மனதிடமும் ஆற்றலும் கிடைத்தது போல உணர்வார்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் பெண்கள் பிற பெண்களுக்கு உதவ முன்வரும்போது, ஆதரிக்கும்போது, அவர்கள் பிற பெண்களுக்கு முன்மாதிரிகளாக விளங்குவார்கள். சாதாரண பெண்கள் தங்கள் இலக்குகளை தொடர அவர்கள் ஊக்குவிக்கிறார்கள்.
வீட்டில்: ஒரு தாய் தனது மகள்களுக்கு அல்லது சகோதரிகளுக்குள் ஒருவரை ஒருவர் ஆதரவளித்துக்கொள்ளும்போது அவர்களுடைய மனதில் இருக்கும் அச்சம் விலகுகிறது. தனக்குப் பிடித்ததை செய்ய தைரியமும் உதவியும் கிடைக்கும் என்று உணரும்போது அந்தப் பெண்கள்தான் எடுத்துக் கொண்ட செயல்களை சிறப்பாக செய்ய முடியும்.
பணியிடத்தில்: பணிபுரியும் இடத்தில் அனைத்து பாலினத்தவருக்கும் சமமான சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதை கவனித்து பிற பெண்களுக்கு, பெண்கள் உதவுவதன் மூலம் சமத்துவம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதேபோல பாகுபாடுகளை களைவதும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதையும் நோக்கமாக கொள்ள வேண்டும். இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் அவர்கள் அச்சமின்றி தங்கள் பணியை சிறப்பாக தொடர முடியும். பல்வேறு துறைகளில் பெண்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்து சாதனை புரிய வழிவகுக்கும்.
நன்மைகள்: ஊக்கமளிக்கும் வார்த்தைகள் மற்றும் செயல்கள் பெண்களிடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். பெண்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். பெண்கள் ஒருவரை ஒருவர் உயர்த்தி ஒன்றிணைந்து செயல்படும்போது சமூகம் முன்னேற்றம் அடைவதோடு மட்டுமல்லாமல் அவர்களது குடும்பமும் பலவித நன்மைகளை அடையும்.
வளங்கள், வாய்ப்புகள் மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் சக்தி வாய்ந்த நெட்வொர்க்குகளை பெண்கள் உருவாக்க முடியும். இந்த இணைப்புகள் தனிப்பட்ட மற்றும் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தும் கூட்டாண்மைகளுக்கு வழிவகுக்கும்.
ஆணாதிக்கம் மலிந்து கிடக்கும் தொழில் துறைகளில் பெண்கள் தங்களது சிறப்பான பங்களிப்பால் அதை நிரூபிக்க முடியும்.
தலைமைத்துவ மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ள பெண்களை ஆதரிப்பது மிகவும் மாறுபட்ட கண்ணோட்டங்களுக்கு இட்டுச் செல்லும். சிக்கலை தீர்ப்பதில் புதுமைகளை மேம்படுத்த உதவும். இந்த பன்முகத்தன்மை நிறுவன செயல் திறனை மேம்படுத்துவதற்கு உதவும்.
வருங்கால சந்ததியினரை ஊக்குவித்தல்: ஒருவரை ஒருவர் ஆதரிப்பதன் மூலம் பெண்கள் இளைய தலைமுறையினருக்கு சிறப்பான பாதைகளை உருவாக்குகிறார்கள். ஒத்துழைப்பு இரக்கம் மற்றும் அதிகாரம் அளித்தல் ஆகியவற்றின் மதிப்புகளை அவர்களின் வாழ்க்கையில் அடிப்படைக் கொள்கைகளாக புகுத்துகிறார்கள். இது எதிர்கால சந்ததியினருக்கு நல்ல முன்மாதிரியாக அமையும். ஒற்றுமையான பாரம்பரியத்தையும் உருவாக்கும்.