இறைச்சி உண்ணும் தாவரங்கள்! 

Meat-Eating Plants
Meat-Eating Plants
Published on

தாவரங்கள் என்றால் ஒரு இடத்தில் நிலையாக இருந்து சூரிய ஒளி, நீர், மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை உணவாக உட்கொள்வதாக நாம் நினைக்கிறோம். ஆனால், இயற்கை என்றுமே நம்மை ஆச்சரியப்படுத்தத் தவறியதில்லை. சில தாவரங்கள் இதற்கு விதிவிலக்காக பூச்சிகள், சிறிய விலங்குகளைப் பிடித்து உண்ணும் தன்மை கொண்டவை. இவை இறைச்சி உண்ணும் தாவரங்கள் (Meat-Eating Plants) எனப்படுகின்றன. இதுபோன்ற தாவரங்கள் எவ்வாறு உருவாகின, அவற்றின் வேட்டையாடும் தன்மை, எப்படி உயிரினங்களை உண்கின்றன என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?  

எவ்வாறு உருவாகின? 

இவ்வுலகில் உள்ள பெரும்பாலான தாவரங்கள் மண்ணில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை பயன்படுத்தி வளரும். ஆனால், சில பகுதிகளில் மண் மிகவும் குறைவான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும். இத்தகைய சூழலில் வாழும் தாவரங்கள், தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற வேறு வழிகளைத் தேட வேண்டியிருந்தது. இதன் காரணமாக, பரிணாம வளர்ச்சியில் சில தாவரங்கள், பூச்சிகள், சிறிய விலங்குகளைப் பிடித்து உண்ணும் திறனைப் பெற்றன. இதன் மூலமாக அவை தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களைப் பெற்று, மற்ற தாவரங்களால் வாழ முடியாத சூழலில் வாழத் தொடங்கின. 

இறைச்சி உண்ணும் தாவரங்களின் வகைகள்: 

Venus Flytrap
Venus Flytrap
  • Venus Flytrap: இந்த தாவரத்தின் இலைகள் இரண்டு பக்கங்களாக பிரிந்திருக்கும். இதன் இலைகளின் விளிம்பில் சிறிய முடிகள் இருக்கும். ஒரு பூச்சி இந்த இலைகளின் நடுவில் அமர்ந்தால், உடனடியாக அவை மூடிக்கொண்டு, பூச்சியை பிடித்துக்கொள்ளும். 

Sundew
Sundew
  • Sundew: இதன் இலைகள் வட்ட வடிவத்தில் இருக்கும். இலை முழுவதும் ஒட்டும் தன்மை கொண்ட சிறிய முடிகள் இருக்கும். இவை பார்ப்பதற்கு பனித்துளிகள் போல தெரியும். பூச்சிகள் இவற்றை உண்ண முயற்சித்து அந்த திரவத்தில் ஒட்டிக்கொள்ளும்போது, இலைகள் மெதுவாக மூடிக்கொள்ளும். 

Pitcher Plants
Pitcher Plants
  • Pitcher Plants: பார்ப்பதற்கு குடம் போல இருக்கும் இந்த தாவரத்தின் இலைகளில் நீர் நிரம்பி இருக்கும். இதிலிருந்து வெளிவரும் வாசனை பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கும். குடம் போன்ற அமைப்பின் விளிம்பில் பூச்சிகள் வந்ததும் தவறுதலாக அதன் உள்ளே விழுந்துவிடும். உள்ளே தண்ணீர் இருப்பதால் அதிலிருந்து வெளியேற முடியாமல் பூச்சிகள் இறந்துவிடும். 

Bladderworts
Bladderworts
  • Bladderworts: நீர் வாழ் தாவரங்களான இவை தங்களின் வேர்களில் சிறிய பந்து வடிவ பொறிகளைக் (Traps) கொண்டிருக்கும். இந்த பொறிகள் நீரில் வாழும் சிறிய உயிரினங்களை உள்ளே இழுத்துக்கொண்டு, தனக்கான உணவாக மாற்றிக்கொள்ளும்.  

இதையும் படியுங்கள்:
வீட்டில் செல்வம் கொழிக்க வளர்க்க வேண்டிய 7 தாவரங்கள் தெரியுமா?
Meat-Eating Plants

அமைப்பும், செயல்பாடும்: 

இறைச்சி உண்ணும் தாவரங்கள் பல்வேறு வகையான அமைப்புகளைக் கொண்டுள்ளன. அவற்றின் இலைகள், தண்டுகள், வேர்கள் போன்றவை வேட்டையாடுவதற்கு ஏற்றவாறு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. குறிப்பாக, அவற்றின் இலைகள் பூச்சிகளைப் பிடிக்க பிரகாசமான நிறத்திலும், பைகளைப் போலவும் இருக்கும். அதன் உள்ளே பூச்சிகள் சென்று சிக்கிக்கொள்ளும். பிடிபட்ட பூச்சிகள் இலைகளில் உள்ள செரிமான நீரால் செரிமானம் செய்யப்பட்டு, அவற்றின் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படும். சில இலைகள், பூச்சிகள் தொட்ட உடனேயே மூடிக்கொள்ளும்படி இருக்கும். இது பூச்சிகளை இறுக்கமாகப் பிடித்து அவற்றின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும்.

இறைச்சி உண்ணும் தாவரங்கள் இயற்கையின் அற்புதப் படைப்புகளில் ஒன்றாகும். இவை தங்களது வாழ்க்கைக்கான போராட்டத்தில் தனித்து வாழும் வழிகளைக் கண்டுபிடித்துள்ளன. இப்படித்தான், நாமும் நமது வாழ்க்கையில் தனித்துவமான வழிகளைக் கண்டறிந்து வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com