தமிழகத்தின் இதயக்கனி!

MGR
MGR
Published on

"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.

உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்

அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்..."

தெய்வத்தாய்  படத்தில் இடம்பெற்ற வாலியின் பாடல்.

200 சதவீதம்  உண்மையானது. MGR  என்ற மூன்றெழுத்து மக்கள் உள்ளம் எனும் ஊரில் அவர் மறைந்து 37 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட  நிலைத்து நின்றுகொண்டு இருக்கிறது.

திரையிலும் அரசியலிலும் மக்கள் அவரை 'வாத்தியார்' ஆகவே  பார்த்தார்கள். பல நல்ல கருத்துகளை தனது படங்கள் மூலமாக சொல்லி மக்கள் 'எங்கள் வீட்டுப் பிள்ளை' என்று கொண்டாடும் அளவுக்கு அவர்கள் மனதில் இடம் பிடித்தார்.

எம்.ஜி.ஆர். புகழுக்கு மேலும் மேலும் வலு சேர்த்தவர் கவிஞர் வாலி அவர்கள். 'நம் நாடு' படத்தில் இடம்பெற்ற 'வாங்கய்யா வாத்தியாரய்யா வரவேற்க வந்தோமையா...' பாடல் இப்போது கேட்டாலும், பார்த்தாலும் நம்மை ஓர் உற்சாகமான மனநிலைக்கு அழைத்துச் செல்லும். 

தனது அரசியல் பயணத்தை திமுகவில் அதிரடியாக தொடங்கினார். கட்சியின் மீது அவர் கொண்ட அளவற்ற பற்றை வாலி தனது பாடலில்,

சூரியன் உதித்ததுங்க இங்கே

காரிருள் மறைஞ்சதுங்க...

சரித்திரம் மாறுதுங்க

இனிமேல் சரியாப் போகுதுங்க...'

போன்ற வரிகள எழுதி இருந்தார்.1969 ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வெளியான படம் இது. உதயசூரியன் ஆட்சிக்கு வந்ததும் இருள் விலகி விட்டது என்றும் புது சரித்திரம் உருவாகிறது என்றும் இனி எல்லாமே 'சரியாக நடக்கும் என்றும் எழுதியிருப்பார். இந்த பாடல் எம்ஜிஆர் புகழை உச்சிக்கு கொண்டு சென்றது. மக்களுக்கு அவரால் நல்லது செய்ய முடியும் என்ற பிம்பம் உருவாக  காரணமானது.

குண்டடி பட்ட நிலையில் 'கொடுத்து சிவந்த கரம் கும்பிட்டு கேட்கிறது' என்ற போஸ்டரை வெளியிட்டு  தேர்தலில் வெற்றி பெற்றது திமுக. 1971 ஆம் ஆண்டு தேர்தலின் போது  பொள்ளாச்சியில் பிரமாண்டமான திடல் ஒன்றில் பேச எம்.ஜி.ஆர். வருவதாக அறிவிப்பு செய்தார்கள். ஏராளமான மக்கள் திரண்டு வந்தார்கள். மாலை 6-00 மணிக்கு வந்த கூட்டம் விடியல் காலை 4-00 மணிக்கு அவர் வந்த போது கூட கலையாமல் இருந்தது. அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். நின்று பேசாமல் இரண்டு கைகளிலும் இரண்டு மைக்களை வைத்துக்கொண்டு எல்லா திசைகளிலும் அமர்ந்திருப்பவர்கள் பார்க்கும் வண்ணம் நடந்தபடி பேசினார். இன்றுவரையில் என்னால் மறக்க முடியாத கூட்டம் அது.

இதையும் படியுங்கள்:
எம்.ஜி.ஆர் எப்படி சினிமாத்துறைக்குள் நுழைந்தார் தெரியுமா? 
MGR

அவர் அதிமுக தொடங்கிய போது சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல்.  அதில் இமாலய வெற்றி பெற்ற அன்று காலையில் வானொலியில் 'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்' - 'தேடி வந்த மாப்பிள்ளை' படத்தில் இடம்பெற்ற பாடலை   ஒலிபரப்பினார்கள். 

படம் பிள்ளை
படம் பிள்ளை
இதையும் படியுங்கள்:
எம்.ஜி.ஆர் நினைவுநாள்: நிஜம் ஆன MGR-ன் 'பஞ்ச்' வசனங்கள்!
MGR

'நேற்று இன்று நாளை' படத்தில் 'தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று' என்று ஒரு பாடல் வரும். அதில் அப்போதைய திமுக ஆட்சி பற்றிய விமர்சனங்கள் ஏராளமாக இருந்தன. அதனால் தியேட்டரில் ஏதாவது பிரச்சனை வரும் என்று கருதி போலீஸ் பாதுகாப்போடு படம் ஓடியது. திண்டுக்கல் NVGB தியேட்டரில் (தற்சமயம் இல்லை) முதல் வகுப்பில் இருபுறமும் போலீஸ் பாதுகாப்போடு இப்படத்தைப் பார்த்தது நினைவில் உள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முதல்வராக இருக்கும் போது முன் வந்தார். அப்போது எதிர்ப்புகள் அதிகம் வரவே செயல்படுத்த அவரால் முடியவில்லை. இப்போது வந்துள்ள அந்த நிகழ்வுக்கு அன்றே முன்னுரை அவர் எழுதினார். சத்துணவு பள்ளிகளில் கொண்டு வந்து ஏழை எளிய மக்களின் நாயகனாக உயர்ந்தார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் அவர் ஆட்சியில் தான் உருவானது.

1980 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்றதால் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் 1980 மே மாதம்  நடந்த சட்டமன்ற  தேர்தலில் மீண்டும் அவர்தான் வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.  டெல்லிக்கு யார் வேண்டும் தமிழகத்திற்கு யார் வேண்டும் என்று மக்கள் தெளிவாக சிந்தித்து வாக்களித்தார்கள். 

இதையும் படியுங்கள்:
இவரைப் போல் எவரும் இல்லை!
MGR

நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தாலும் 1984  சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இதற்கு காரணம் மக்கள் அவர் மேல் வைத்திருந்த அன்புதான்.

திரைத்துறையிலும், அரசியலிலும் தனக்கென்று  ஒரு  பாதை வகுத்துக்கொண்டு பயணம் செய்தார்.  அந்த பாதை முழுவதும் மலர்களால் நிரம்பி இருந்தது. "பூ மழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த" வெற்றி ஊர்வலங்கள் நடந்தன.

வேறு யாருக்கும் இது போல வாய்க்கவில்லை. அவர் ஆரம்ப காலங்களில் விதைத்த தரமான விதைகள் அவருக்கு வெற்றிக் கனிகளை தந்தன. தமிழகத்தின் இதயக்கனி யாக இன்று வரையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com