மாணவர் சேவையில் 75 வயதை பூர்த்தி செய்யும் எம்.ஐ.டி.!

MIT, Chennai
MIT, Chennai
Published on

மிழ் நாட்டின் தலைசிறந்த தொழில் நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, 75 வயதை நெருங்குகிறது. 1949ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட, இந்தக் கல்லூரியின் ஸ்தாபகர் தொழிலதிபர் சின்னசாமி ராஜம் (1882 – 1955) அவர்கள்.

சுதந்திர இந்தியாவில், தொழிற்சாலைக்குத் தேவைப்படும் உபகரணங்களை நிறுவி, அவற்றை செவ்வனே பராமரிக்க, தகுந்த வல்லுநர்கள் இல்லை என்பது தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதாகக் கருதினார் ராஜம் அவர்கள். இந்த நிலையை சீராக்க தரமான தொழில் நுட்பக் கல்லூரிகள் தேவை என்று உணர்ந்தார். ஆகவே அவருடைய நண்பர்கள், எம்.சுப்பராய ஐயர், எம்.கே.ரங்கந்தன், கே.சீனிவாசன், சி.ஆர்.சீனிவாசன், எல்.வெங்கடகிருஷ்ண ஐயர் ஆகியவர்கள் உதவியுடன், எம்.ஐ.டி. கல்லூரியை நிறுவினார். இந்தக் கல்லூரி, இந்தியாவின் முதல் சுயநிதிக் கல்லூரி.

தரமான கல்வி, செய்முறைக்கு முக்கியத்துவம் அளிப்பது என்ற குறிக்கோளுடன், ஏரோநாடிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரமென்டேஷன் என்று நான்கு பிரிவுகளுடன் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. மொத்த மாணவர்கள் சேர்க்கை 100. கணிதம், பௌதிகம் ஆகியவற்றில் இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள், தொழில் நுட்பத்தில் முதுகலை டிப்ளமோ பெறுவதற்கான மூன்று வருட வகுப்பில் சேர்க்கப்பட்டார்கள். மூன்று வருடத்தில் மாணவர்கள், 24 வாரங்கள் தொழிற்சாலையில் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டியது டிப்ளமோ பெறுவதற்கான அத்தியாசமானத் தேவை.

இந்த கல்லூரியில் ஒரு சிறப்பு, சேருகின்ற மாணவர் களுக்கு அளிக்கின்ற “டி நம்பர்”. இதனை டெக்னோ நம்பர் என்று கூறலாம். நான்கு இலக்கங்கள் உள்ள இந்த நம்பரில் முதல் இரண்டு எண்கள்,  தொகுதி எண்ணையும், அடுத்த இரண்டு எண்கள் அந்த வருடம் சேர்ந்த 100 மாணவர்களில், அவருடைய வரிசை எண்ணையும் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு 2168, என்றால், கல்லூரி ஆரம்பித்து 21வது வருடம், 1969இல் சேர்ந்தவர், 68 அவருடைய வரிசை எண். இந்த மாணவருக்கு 2068 மற்றும் 1968 எண்ணுள்ள மாணவர்கள் வழிகாட்டியாக இருந்து, வேண்டிய உதவிகளை செய்வார்கள். அது போலவே, இந்த நபரும் அவருக்குப் பின்னால் கல்லூரியில் சேரும் 2268 எண்ணுள்ள மாணவரை வழிப்படுத்த வேண்டும். இந்தக் கல்லூரியில் படித்த இரண்டு மாணவர்கள் சந்திக்கும்போது, அவர்கள் முதலில் பரிமாறிக் கொள்வது அவர்களுடைய டி நம்பர்.

பொதுவாக பொறியியல் கல்லூரிகளில் படிப்பிற்கும், பணிக்கு அமரும் இடங்களில் சந்திக்க நேருகிற சவால்களுக்கும், இடைவெளி அதிகமாக இருக்கும். ஆனால், பொறியியல் கல்லூரிகளில் அடிப்படைத் தத்துவத்தை செவ்வனே மாணவர்கள் மனதில் பதிய வைத்தால், அந்த மாணவனால், இந்த இடைவெளியை எளிதில் தாண்ட முடியும். இது கல்விக் கூடத்தின் தரக் கட்டுப்பாடு, பணி புரியும் ஆசிரியரின் கற்பிக்கும் திறன் ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. இது சரிவர அமையாத கல்லூரி மாணவர்கள், பணிக்கு அமரும் இடத்தில் பெரிய சவால்களை சந்திக்க நேருகிறது. இந்த வகையில் எம்.ஐ.டி. கல்லூரியில் படித்த என்னைப் போன்ற மாணவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள் என்று சொல்ல வேண்டும். இந்தக் கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகத்துடன் 1978ஆம் வருடம் இணைக்கப்பட்டது.

abdul kalam, sujatha, sivan...
abdul kalam, sujatha, sivan...

இந்தக் கல்லூரியில் படித்த எண்ணற்ற மாணவர்கள் அரசின் பாதுகாப்புத்துறை, வான்வெளி ஆராய்ச்சி, கடிதம் மற்றும் தந்தி துறை, இரயில் சேவை, பொதுப்பணித் துறை, அரசு மற்றும் பொது நிறுவனங்களில் பணிபுரிந்து, அவற்றின் வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறார்கள். இந்தக் கல்லூரி, பல இரத்தினங்களை இந்தியாவிற்கு அளித்துள்ளது. இங்கு மூன்று இரத்தினங்களை, குறிப்பிட விடும்புகிறேன்.

டாக்டர் அப்துல் கலாம் (1931-2015) – இந்தியாவின் தென்கோடி, இராமேஸ்வரத்தில் பிறந்த டாக்டர் கலாம், எம்ஐடியில் ஏரோநாடிக்ஸ் படித்தார். பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சித் துறை (DRDO), இந்திய வானியல் ஆராய்ச்சித் துறை (ISRO), ஆகியவற்றில் பல நிலைகளில் பணி புரிந்தார். ஏவுகணைத் துறையின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளுக்காக, இந்தியாவின் ஏவுகணை மனிதர் (Missile man of India) என்று அழைக்கப்பட்டார். 1998இல், பொக்ரானில் நடந்த அணுசக்தி சோதனையில் முக்கிய பங்காற்றினர். 2002 முதல் 2007 வரை, இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக பதவியேற்று, “மக்களின் குடியரசுத் தலைவர்” என்று மதிக்கப்பட்டார்.. அரசியல் கட்சி சாராத முதல் குடியரசுத் தலைவர் என்று கூறலாம். 1997ஆம் வருடம், இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னா விருது அவருக்கு அளிக்கப்பட்டது.

சுஜாதா (ரங்கராஜன்) (1935-2008) – எம்ஐடியில் எலக்டரானிக்ஸ் படித்த ரங்கராஜன், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில், பல நிலைகளில் பணி புரிந்தார். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு ரங்கராஜனைச் சேர்ந்தது. இந்த கண்டு பிடிப்பிற்காக பிரசித்தி பெற்ற “வாஸ்விக்” விருது பெற்றார். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தால், அரசுக்கு பெருமளவில் பணம் மற்றும் நேரம் சேமிக்கப்படுகிறது. சுஜாதா என்ற புனை பெயரில் 100 நாவல்கள், 250 சிறுகதைகள், விஞ்ஞானம் சம்பந்தமாகப் புத்தகங்கள், ஆழ்வார்கள் பற்றிய புத்தகம், நாடகம், சினிமா கதை வசனம் என்று பல்வேறு துறையில் முத்திரை பதித்தார். தமிழில் மிகவும் பிரபல எழுத்தாளராக மதிக்கப்படும் சுஜாதா, “நவீன நடை எழுத்தாளர்” என்று அறியப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
மனக்கவலை… மாற்றல் எளிது!
MIT, Chennai

டாக்டர் சிவன் – 1957ஆம் வருடம் பிறந்த சிவன் கைலாசவடிவு, எம்ஐடியில் ஏரோனாடிக்ஸ் படித்தார். 1982ஆம் வருடம், இந்திய வானியல் ஆராய்ச்சித் துறையில் சேர்ந்த சிவன், படிப்படியாக முன்னேறி, 2018ஆம் வருடம் இஸ்ரோவின் தலைவரானார். விண்வெளி தொழில் நுட்பத்தில், இந்தியாவிற்கு உலகநாடுகள் அங்கீகாரம் கிடைப்பதற்கு சிவன் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம். இவருடைய தலைமையில், இஸ்ரோ சந்திரயான் 2, சந்திரனுக்கு 2019ஆம் வருடம் அனுப்பியது. நிலவில் இறங்கும் போது, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விபத்துக்குள்ளானாலும், ஆர்பிடர் சந்திரனைச் சுற்றி வருகிறது. இந்த அனுபவம், 2023ஆம் ஆண்டு சந்திரயான் 3, வெற்றிகரமாக சந்திரனின் தென்பகுதியில் கால் பதிக்க உதவியது.

நாட்டின் வளர்ச்சிக்கு இளைய சமுதாயத்தை உருவாக்கும் எம்ஐடிக்குத் தலை வணங்குகிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com