

சென்னை மயிலாப்பூரில் 1919ல் பிறந்து 91 வருடங்கள் வாழ்ந்து பல சாதனைகளைச் செய்து 2010ல் காலமான எஸ்.ராஜம் (S. Rajam) அவர்கள் இசை, ஓவியம், நடிப்பு, எழுத்து, புகைப்படக்கலை என சகலகலைகளிலும் அபார ஞானம் பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் என்பதை அறியும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.
சங்கீத மும்மூர்த்திகளை முதன்முதலில் சித்திரமாகத் தீட்டிய பெருமைக்குரியவர் எஸ்.ராஜம். இவரிடம் பழகிய அனைவரும் தவறாமல் குறிப்பிடும் ஒருவிஷயம் இவருடைய கர்வமற்ற எளிமையான ரசனையான வாழ்க்கை. பலதுறைகளிலும் அசாத்திய திறமை கொண்டு செயலாற்றுபவரை சகலகலாவல்லவன் என்பார்களே அதுபோல இசை ஓவியம் இரண்டிலும் அபார சாதனைகளைச் செய்த ராஜத்தை சகலகலாச்சாரியார் எனலாம்.
இசையில் மிகுந்த ஈடுபாடு உடைய அப்பா வக்கீல் வி.சுந்தரம் அய்யரிடமிருந்தும் ஓவியத்தில் மிகுந்த ஈடுபாடு உடைய அம்மா செல்லம்மாளிடமிருந்தும் இசையும், ஓவியமும் ராஜத்தை ஈர்த்து பிற்காலத்தில் இவர் இரண்டு துறைகளிலும் வல்லுநராய்த் திகழக் காரணமாக அமைந்தது. இவருடன் பிறந்தோர் இரண்டு தம்பிகள் மற்றும் மூன்று தங்கைகள்.
இசை ஆர்வலரான சுந்தரம் அய்யரை சந்திக்க பல இசைக்கலைஞர்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். ராஜத்தின் ஐந்தாவது வயதில் சுந்தரமய்யர் மயிலாப்பூரில் சங்கீதசபா இருந்த தெருவில் ஒரு வீட்டை வாங்கி அங்கே ஜாகையை மாற்றினார். இதன் மூலம் ராஜத்திற்கு சங்கீதம் நெருக்கமானது.
அம்பி தீட்சிதர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், சௌந்தரம், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், மதுரை மணி அய்யர், பாபநாசம் சிவன் முதலான இசை ஜாம்பவான்களிடம் இசை பயின்றார். பாபநாசம் சிவனிடம் இவர் 1928 முதல் 1930 வரை இசை பயின்றார். இவர் தனது பதிமூன்றாவது வயதிலேயே சென்னையில் அகில இந்திய வானொலி ஆரம்பித்த இரண்டாவது நாளே இசைக்கச்சேரி செய்த பெருமை உடையவர்.
பின்னர் அங்கேயே பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. சங்கீதத்தைப் போலவே ஓவியத்திலும் இவர் காட்டிய ஈடுபாட்டை உணர்ந்து இவருடைய பெற்றோர் இவருக்கு ஊக்கம் அளிக்க, அதிலும் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார்.
மயிலாப்பூர் பி.எஸ். ஹைஸ் கூலில் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்ததும் Madras School of Arts-ல் சேர்ந்து முறையாக ஓவியத்தைப் பயின்று முதல் மாணவராய் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.
தனக்கென ஒரு பாணியை உருவாக்கி பலரும் வியக்கத்தக்க வகையில் சித்திரங்களைத் தீட்டினார். கலைமகள் பத்திரிகையில் இவருடைய ஓவியங்கள் தொடர்ந்து வெளியாகின. சென்னை மயிலாப்பூரில் மிக எளிமையாக வாழ்ந்த இவர், பழகுவதற்கும் மிகவும் எளிமையானவராக இருந்தார். கலைநயமிக்க கோயில்களுக்குச் சென்று அங்கேயே அமர்ந்து நேரடியாக சித்திரங்களைத் தீட்டுவது இவருக்குப் பிடித்தமான ஒரு செயலாக இருந்துள்ளது.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜ ஸ்வாமிகள், முத்துஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகளை வண்ண ஓவியமாக முதன்முதலில் தீட்டிய பெருமை ராஜம் அவர்களையே சாரும். சென்னை மியூசிக் அகாடமியின் சுவர்களை அலங்கரிக்கும் சங்கீத மும்மூர்த்திகளின் ஓவியங்கள் இவர் கைவண்ணத்தால் உருவானது என்பது பலரும் அறியாத ஒன்று.
ராஜம் அவர்களின் சகோதரர் புகழ்பெற்ற வீணை இசைக்கலைஞரும் திரைப்பட இயக்குநருமான வீணை எஸ்.பாலச்சந்தர். ராஜம் 1934 ஆம் ஆண்டில் வெளியான “சீதா கல்யாணம்” என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த பின்னர் முழுநேரமும் இசைக்கலைஞராகவும் ஓவியராகவும் பணியாற்றினார்.
இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இவருக்கு 2008 ஆம் ஆண்டில் சங்கீத கலாசிகாமணி விருதினை வழங்கியுள்ளது. இந்திய அரசால் உருவாக்கப்பட்ட சங்கீத நாடக அகாதமி எனும் அமைப்பு இவருக்கு 1991ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருதினை வழங்கி பெருமைபடுத்தியுள்ளது.
ராஜம் தனது 91-வது வயதில் சென்னையில் மயிலாப்பூரில் 29 ஜனவரி 2010 அன்று காலமானார்.