தீர்கதரிசியாக விளங்கிய இவர், 1960 களின் துவக்கத்தில் எழுதிய 'சுருக்குப் பை ' என்ற தொடர் நாடகத்தில் வருங்கால கிரிக்கெட் எப்படி இருக்கும் என்று இடம் பெற செய்து இருந்தார்.
சிறுவர், சிறுமியர்களுக் கான இந்த தொடர் நாடகம், வாரம் தோறும் ஒலிபரப்பாயிற்று ரேடியோவில். அதில் கதாநாயகனாக நடித்த சிறுவன் கிரிக்கெட் மேட்ச்சில் ஒரு ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களாக அடித்து நொறுக்குவான்.
1968 ல் மேற்கு இந்திய தீவுக்கள் வீரர் காரி சோபர்ஸ் உண்மையாகவே ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களாக பறக்க விட்டு சாதனை புரிந்தார், முதல் தர ஆட்டத்தில்.
இந்த 'சுருக்குப் பை' நாடகத்தில் அந்த பையன் 1000 ரன்களுக்கு மேல் குவிப்பான். இதுவும் சாதியம் ஆயிற்று. மகாராஷ்டிரவின் கல்யாண் பகுதியை சார்ந்த பிரணவ் தனவாடே என்ற பள்ளி மாணவன் உலக ரிகார்டு ஏற்படுத்தினான். பள்ளிக்கூடங்களுக்கு இடையில் நடந்த டோர்ன்மெண்டில், 2016 ல் இந்த மாணவனின் ஸ்கோர் 1009* ரன்கள் நாட் அவுட்.
அந்த 'சுருக்குப் பை' நாடகத்தில் அதே கதாநாயக சிறுவன் பவுலிங்கில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் வரிசையாக 6 விக்கெடுக்கள் வீழ்த்தியுள்ள தாக சித்தரித்து இருப்பார் வானொலி அண்ணா.
அதுவும் நடை முறையில் நடை பெற்றது. 2017 ல் ஆஸ்திரேலிய வீரர் அலெட் கரெய் (Aled Carey) என்பவர் பவுலிங்கில் இத்தகைய சாதனை புரிந்துள்ளார்.
இந்த ரேடியோ தொடர் நாடகத்தை எழுதியவர் வானொலி அண்ணா என்று அழைக்கப்பட்ட கூத்தபிரான். அவரை பற்றி...
இவர் ஆல் இந்தியா ரேடியோவில் பணி புரிந்தவர். குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை தயாரித்து நடத்தி வந்தவர். தமிழில் கிரிக்கெட் வர்ணனையாளராக திகழ்ந்தவர். கதைகள் கூறுவதில் வல்லவர்.
நடராஜன் என்ற இவரது பெயரை கூத்தபிரான் என்று வைத்துக் கொள்ள யோசனை கூறியவர் இவரது மனைவி ஆவார்.
வானொலி அண்ணா என்று அழைக்கப்பட்ட கூத்தபிரான் 30 வருடங்களுக்கு மேலாக ரேடியோவில் 'சிறுவர் சோலை' நிகழ்ச்சி ஒலிப்பரப்பினார். ஆல் இந்தியா ரேடியோவின் இவர் நடத்தி வந்த 'பாப்பா மலர்' நிகழ்ச்சி அந்த கால கட்டத்தில் மிகவும் புகழ் பெற்றது.
பள்ளியில் படிக்கும் பொழுதே கலையில் ஆர்வம் கொண்டவர். நாடகங்களில் நடித்தவர். 6500 க்கும் மேற்பட்ட முறை மேடை நாடகங்களில் தோன்றியவர். பல புத்தகங்கள் குறிப்பாக குழந்தைகளுக்காக எழுதியவர். குழந்தைகளின் கலை ஆர்வத்தை மேலும் திறன் பட செய்ய பெரிதும் பாடு பட்டார்.
குழந்தைகளை மேடை நாடகங்களில் பங்கு பெற பயிற்சி அளிக்க 'அடையார் சிறுவர் சங்கம்' நிறுவினார். இந்த சங்கத்தின் முதல் நாடகமான 'அம்மா சொல் அமிர்தம்' துவக்கி வைத்தவர் ராஜாஜி அவர்கள்.
கல்கி அவர்களின் எழுத்துக்கள் மீது தனி மரியாதை வைத்து இருந்த கூத்தபிரான் அவரது படைப்புகளான தேவகியின் கணவன், அமர தாரா ஆகியவற்றை மேடை நாடகங்களாக நடத்தியவர்.
சோவின் நண்பர் ஆன இவர் வசனம் எழுதி இயக்கிய 'தேன் மொழியாள்' நாடகம் சோ அவர்களின் விவேகா பைன் ஆர்ட்ஸ் குழுவால் மேடையில் நடிக்கப் பட்டது.
இவர் மெரினா , சுஜாதா எழுதிய நாடகங்கள் மற்றும் காத்தாடி ராமமூர்த்தி, ஜெய்சங்கர், பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் உடன் மேடை நாடகங்களில் தோன்றி நடித்தவர்.
கூத்தபிரான் கடைசி வரையில் மேடை நாடகங்களோடு தொடர்பு கொண்டு இருந்தார். 1932 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2014 ஆம் ஆண்டில் மறைந்தார். இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.