அன்றாட வாழ்வில் அளவியலின் அவசியம்!

மே, 20 உலக அளவியல் தினம்
அன்றாட வாழ்வில் அளவியலின் அவசியம்!
https://www.prabhatkhabar.com
Published on

ந்த வருடம் முதல், ஒவ்வொரு வருடமும் மே மாதம் 20ம் தேதி ‘உலக அளவியல் தினம்’ கொண்டாடப்படும். அளவியல் என்பதை ஆங்கிலத்தில் ‘மெட்ராலஜி’ என்கிறோம். மே 14 அன்று யுனெஸ்கோ, அதனுடைய பாரிஸ் தலைமையகத்தில் ‘எதிர்காலத்தில் நிலையான தன்மையடைய நாம் இன்று அளவிடுகிறோம்’ என்ற கருப்பொருளை முன் வைத்தது.

‘உலக மக்கள் அளவியல் என்றால் என்ன, நாம் ஏன் அதைச் சார்ந்திருக்கிறோம்,என்பதை அறிந்துகொள்ள இந்த நாள் வழி வகுக்கும்’ என்பது யுனெஸ்கோவின் நம்பிக்கை. அளவியல் விஞ்ஞானம் அதிக அளவில் அறியப்படவில்லை. ஆனால், நமது அன்றாட வாழ்க்கையில் தினம்தோறும் இதை சந்திக்கிறோம். கடையில் சென்று கறிகாய், பழம் வாங்கும்போது, நமக்கு இத்தனை கிலோ வேண்டும் என்று கேட்டு அதை கடைக்காரர் அளந்து கொடுக்க வாங்குகிறோம். அதைப் போலவே, மளிகைக் கடை. உடைகள் வாங்கும்போது, அந்த உடை நம்முடைய உயரத்திற்குத் தோதானதா என்று பார்த்து வாங்க வேண்டும். ஆகவே, உடை தயாரிப்பில் பல அளவுகளில் உடை உருவாக்கப்படுகிறது.

உங்களுடைய உயரத்திற்கு இவ்வளவுதான் எடை இருக்க வேண்டும் என்கிறார் மருத்துவர். நாம் வண்டியில் செல்லும்போது, நாம் நினைத்த இடத்திற்குச் செல்ல உதவுவது ஜிபிஎஸ். அதன் மூலம் நாம் செல்ல இருக்கும் இடம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது, அந்த இடத்தை அடைய எத்தனை மணி நேரம் தேவைப்படும் என்று அறிந்து கொள்கிறோம். விமானத்தில் செல்பவர்களுக்கு அவர்கள் எடுத்துச் செல்லும் பொருட்களின் எடைக்கு வரையறை உண்டு. ஆக, நாம் அன்றாட வாழ்வில், நம்மை அறியாமலே அளவியல் சார்ந்த கருவிகளின் தேவை இருக்கிறது. வீடு கட்டுவதற்கு, வீடு வாங்குவதற்கு எல்லாவற்றிலும், வீட்டின் நீளம், அகலம் எல்லாமே அளவுகள் தான். நாம் சாப்பிடும் மருந்துகளில் இருக்கின்ற வேதிப் பொருட்கள் சரியான விகிதத்தில் இருப்பதை உறுதி செய்வது அதற்காக வடிவமைக்கப்பட்ட அளவை இயந்திரங்கள். இதனைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம்.

ஒரு பொருளின் தரத்தை அறிவதற்கு அளவியல் இன்றியமையாதது. தொழில் துறை, கட்டுமானம், பயணம், மருந்து தயாரிப்பு, பாதுகாப்பு, வானவியல் என்று எல்லாத் துறைகளிலும், இதனுடைய தாக்கம் பரவியுள்ளது. அதனால், உலகமெங்கும் தரப்படுத்தப்பட்ட அளவீடுகள் இருப்பது அவசியமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பாரிஸ் நகரில், மே 20, 1875ம் வருடம் ‘இன்டர்நேஷனல் புரே ஆஃப் வெயிட்ஸ் அண்டு மெஷர்ஸ்’ உருவாக்கப்பட்டது. இதனுடைய நோக்கம் தரப்படுத்தப்பட்ட அளவியலை உலகிற்கு அறிமுகப்படுத்துவது. இதன் மூலம் எடையைக் கணக்கிடுவதற்கு மில்லி கிராம், கிலோ கிராம், நீளத்தை அளப்பதற்கு மில்லி மீட்டர், மீட்டர் உருவாக்கப்பட்டன. ஆகவே, இந்த நாள் உலக அளவியல் தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

சரியான அளவியலை உபயோகப்படுத்தாவிட்டால் என்ன ஏற்படும்?

பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் இதற்கு உதாரணம். இதனைக் கட்டமைத்தவர்களிடம், இது வடிவமைத்த இடத்திலுள்ள நிலத்தின் தன்மையைக் கண்டறிய சரியான உபகரணங்கள் இருக்கவில்லை. ஆகவே, அங்கிருந்த மண் மென்மையானது, நிலையற்ற தன்மை கொண்டது என்பதை அறியவில்லை.

1983ம் வருடம், பயணியர் விமானம் ஒன்றில் நடுவானத்தில் விமானத்தில் அதன் இலக்கையடைய தேவையான எரிபொருள் இல்லை என்பதைக் கண்டறிந்தார்கள். விமான சிப்பந்திகளுக்கு புதிய மெட்ரிக் அளவைப் பற்றிய புரிதல் இல்லாததால் இது நேர்ந்தது. அதிர்ஷ்டவசமாக விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.

இதையும் படியுங்கள்:
பருவநிலை மாற்றங்களில் இருந்து நம்மைப் பாதுகாத்து கொள்வது எப்படி?
அன்றாட வாழ்வில் அளவியலின் அவசியம்!

1999ம் வருடம் நாசா செவ்வாய் கிரகத்தின் காலநிலையை அறிய ‘ஆர்பிட்டர்’ அனுப்பியது. ஆனால், ஆர்பிட்டர் வேக வளர்ச்சியை, ஒரு பகுதியினர் மில்லி மீட்டர், மீட்டரில் கணக்கிட, மற்றொரு குழு அதனை அங்குலம், அடியில் கணக்கிட்டது. இந்தக் குழப்பத்தில் நாசா ஆர்பிட்டரை இழந்தது.

1999ம் வருடம், ஒரு மருத்துவ விடுதியில், நோயாளிக்கு செலுத்த வேண்டிய பினோபார்பிடால் என்ற மயக்க மருந்து, அதிகப்படியாக 0.5 கிராம் செலுத்தப்பட்டது. அவருக்கு செலுத்த வேண்டிய அளவு 0.065 கிராம்.

அளவியல் என்ற அறிவியல் ஆய்வு மருத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாகனங்கள் வழிநடத்துதல், கட்டுமானப் பணிகள், பல வகையான உற்பத்தி தொழில்கள், உணவு பதப்படுத்துதல் என்று எல்லா வகையான பணிகளுக்கும் இன்றியமையாதது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com