சுற்றுலாச் சென்ற அப்பாவிகளைச் சொர்க்கத்துக்கு அனுப்பிய இரக்கமற்ற தீவிரவாதிகளைக் களையெடுக்கும் விதமாக, ஆட்சியாளர்களும், அனைத்துப் பாதுகாப்புப் படையினரும் சேர்ந்து, துல்லியத் தாக்குதல் நடத்தி, நமக்கு அமைதியை மீட்டுத் தந்திருக்கிறார்கள். இதை எழுத நிமிடங்கள் போதும்! ஆனால் இதற்காக உழைத்தவர்கள் இரவு பகல் தூக்கமின்றி, நாட்டு நலனுக்காகத் தங்கள் சொந்த நலன்களைத் துச்சமெனக் கருதிப் போராடிய பாங்கினை, முழுதாக எழுத எவராலும் முடியாது!
இரண்டு பேருக்குச் சண்டை என்றாலே குடும்ப அமைதி விடை பெற்று விடும்; வேதனை சூழும்; விரும்பத்தகாத எண்ணங்கள் தோன்றும்! எங்களூரில் அங்குலக் கணக்கான வரப்புச் சண்டைக்காக பல ஏக்கர் நிலங்களை விற்று வழக்கு நடத்தியவர்களையும், வாழ்வையே முடித்துக் கொண்டவர்களையும் கூட நான் அறிவேன்!
நாடுகளுக்குள் சண்டை என்றால் உயிரிழப்பு, பொருளிழப்பு என்று ஏகப்பட்டவற்றை இழந்தேயாக வேண்டும். இது ஒரு புறமென்றால், தலைவனைப் போரில் பலி கொடுத்து விட்டுத் தவிக்கும் குடும்பங்கள் பல இருக்கும். நாளைய வாழ்வை நடத்துவது குறித்து எண்ணியே மாய்ந்து போவார்கள்; மனத்தெளிவை இழப்பார்கள்; எதிர்காலப் பயத்தை இதயத்தில் ஏற்பார்கள்!
அவ்வாறான எண்ணத்தில் உழல்பவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுவது, ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும். இழந்து போன அவர்களின் இதயத்திற்கு நெருக்கமானவர்களை நம்மால் திருப்பித்தர இயலாதுதான்! ஆனாலும் அவர்கள் பொருளாதாரத்திற்கு வழிகோலினால் அவர்களின் துன்பம் கணிசமாகக் குறையும்! நாளைய பயம் போகும். வாழ்வில் நழுவிப்போன பிடிப்பை மீண்டும் அவர்கள் அடைவார்கள். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று யோசிப்போமே!
உபாயமொன்று உள்ளத்தில் வட்டமிடுகிறது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே மனது விழைகிறது. உலகத்தில் மக்கட்தொகையில் ‘நம்பர் ஒன்’ நாடு நம்முடையது.146 கோடிகளுக்கு மேல் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
தற்போது பெரும்பாலான ட்ரான்சாக்ஷனை, நமது மக்கள் வங்கிகள் மூலமாகவே மேற்கொள்கிறார்கள். அதுவுமின்றி, ஜி பே (GPay), போன் பே (Phone Pay) என்று எளிதாக வர்த்தகம் புரியும் ஏகப்பட்ட வசதிகள் பெருகிவிட்டன.
இந்த நிலையில் இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் தலைக்கு ஒரே ஒரு ரூபாய் என்ற கணக்கில், தேசிய வங்கிகள் மூலமாகவோ, அரசுக் கருவூலங்கள் மூலமாகவோ செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். க்யூ ஆர் கோடுகள் மற்றும் இதற்கென தனி எண்களை அறிவித்தால் எல்லா மக்களும் செலுத்துவது சாத்தியப்படும். இந்த ஒரு ரூபாயால் யார்க்கும் எந்தச் சிரமமும் ஏற்படப் போவதில்லை. கட்டாயமாக ஒருவர் ஒரு ரூபாய் செலுத்தினால் போதுமானது என்று வரையறை செய்து விட வேண்டும். 4 பேர் கொண்ட குடும்பம் 4 ரூபாய் செலுத்தினால் போதுமானது.
146 கோடியில் 46 கோடியை விட்டு விட்டால் கூட, ரூ 100 கோடி நிச்சயமாகச் சேரும். இந்தத் தொகையை போரில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கும், போரால் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொது மக்கள் குடும்பங்களுக்கும் நிவாரணமாக வழங்கலாம். அதிகத் தொகை இருப்பின் இழந்த ராணுவத் தளவாடங்களைப் புதுப்பிக்கப் பயன்படுத்தலாம். மேலும்,வளர்ச்சித் திட்டங்களுக்கும் செலவழிக்கலாம்.
இதன் மூலம் யாருக்கும் எவ்விதச் சிரமமுமின்றி பெருந்தொகையைச் சேர்ப்பதுடன் ஒவ்வொரு குடிமகனையும் பெருமைப்படச் செய்யலாம். ’சிறு துளி பெரு வெள்ளம்’ என்பதை உண்மையாக்கலாம்!
சாத்தியப்படுமா? என்கிறீர்களா? அரசு ஒரு வழி ஏற்படுத்தி, மனிதன் மனது வைத்தால் அனைத்தும் சாத்தியமே!
ஜெய்ஹிந்த்!