மாதந்தோறும் அன்னாபிஷேகம், காணும் சிவன் கோயில்!

Vilamal Pathanjali Manoharar Temple
Vilamal Pathanjali Manoharar Temple
Published on

பொதுவாக, ஐப்பசி மாத பெளர்ணமி நாளில்தான் சிவாலயங்களில், ஈசனின் லிங்க திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் வழக்கமாக நடத்தப்படும் அபிஷேகங்கள் நடைபெறும். ஆனால், மாதந்தோறும் அமாவாசை நாளில் அன்னாபிஷேகம் செய்யப்படும் அற்புதமான சிவன் கோயில் ஒன்று தமிழகத்தில் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு சிறப்புக்குரிய ஆலயம்தான் விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் இது. இக்கோயிலில் சிவனின் திருவடி தரிசனத்தை தரிசிக்க முடியும்.

சிறிய கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோயில் எதிரில் உள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கோபுர வாயிலின் இருபுறமும் விநாயகரும் முருகனும் வீற்றிருக்கின்றனர். கோயில் முன் மண்டபத்தில் பதஞ்சலி முனிவரின் திரு உருவம் உள்ளது. வியாக்ரபாத முனிவர், சூரியன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். அவர்களின் சன்னிதியும் இக்கோயிலில் உள்ளது.

இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும்போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீப ஜோதியாக தெரிவதைக் காணலாம். மற்ற கோயில்களில் சுவாமி, அம்பாள் யாராவது ஒருவர் சிறப்புக்குரியவர்களாக இருப்பார்கள். இத்தலத்தில் சுவாமி, அம்பாள், தீர்த்தம் என அனைத்தும் சிறப்புக்குரியதாகும்.

இதையும் படியுங்கள்:
துரோணாச்சாரியாருக்கு அமைந்த ஒரே கோயில் எங்கு உள்ளது தெரியுமா?
Vilamal Pathanjali Manoharar Temple

ஒவ்வொரு மாதமும் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் ஒரே கோயில் விளமல் பதஞ்சலி மனோகரர் ஆலயம்தான். இங்கு வேண்டுதல் நிறைவேறியவர்கள் சிவனுக்கு அன்னம் படைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. முன்னோர்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் அமாவாசை நாளில் இந்தக் கோவிலுக்கு வருகிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, முன்னோர்கள் மோட்சம் பெறுவதற்காக மோட்ச தீபம் ஏற்றுகின்றார்கள்.

இந்தக் கோயிலில் வந்து அமாவாசையில் விளக்கேற்றி வழிபட்டால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து, தலைமுறை சிறக்க ஆசி வழங்குவார்கள் என்பது ஐதீகம். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பதஞ்சலி முனிவர் தனது உடலை பாம்பாகவும், வியாக்ரபாதர் தனது கால்களை புலிக்கால்களாகவும் மாற்றி, இங்குள்ள கமலாம்பாளை வணங்கினர். அதோடு, மணலில் லிங்கம் செய்து வழிபட்டனர். இந்த வழிபாட்டின் பலனாக சிவபெருமான் அவர்களுக்குக் காட்சி தந்து, அஜபா நடனம் மற்றும் தனது திருவடி தரிசனத்தையும் காட்டி அருளினார். இதனால் இந்த சிவனுக்கு பதஞ்சலி மனோகரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

சிவபெருமான் நடனமாடிய போது காட்டிய திருவடி ருத்ரபாதம் என அழைக்கப்பட்டது. இவர் நடனமாடி திருவடி காட்டிய தலம் என்பதால் விளமல் என அழைக்கப்படுகிறது. விளமல் என்றால் திருவடி என்று பொருள். சிவனின் ருத்ரபாதத்திற்கு இன்றும் தினசரி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயிலின் மூலஸ்தானத்தில் லிங்கம், அதற்கு பின்புறம் நடராஜர், முன்புறம் சிவன் பாதம் என சன்னிதியில் சிவனின் மூன்று வடிவங்களை இங்கு தரிசிக்கலாம்.

சிவனுக்கு தீப்பொரிகள் கிளப்பும் நெற்றிக்கண் இருப்பதை போல், இத்தல அம்மனுக்கு குளிர்ச்சியான நெற்றிக்கண் உள்ளது. இந்த அம்மன் மதுரபாஷிணி என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறாள். 34 நலன்களையும் தரும் தேவியாக இவள் விளங்குவதால் இந்த தலம் வித்யா பீடமாகவும் கருதப்படுகிறது. இப்பகுதி மக்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு மதுரபாஷிணிக்கு தேன் அபிஷேகம் செய்து, அந்த்த் தேனை குழந்தையின் நாவில் தடவி பிரார்த்தனை செய்து, பள்ளியில் சேர்க்கும் வழக்கம் உள்ளது. குழந்தைகளுக்கு திக்குவாய் பிரச்னை உள்ளவர்களும் இந்த அம்மனை வேண்டினால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
‘பழுதை கட்டி’ என்றால் என்னவென்று தெரியுமா?
Vilamal Pathanjali Manoharar Temple

ராகு - கேது தோஷம் இருப்பவர்கள் இங்குள்ள எட்டு கைகள் உள்ள துர்கையை வழிபடுவது சிறப்பானதாகும். தசரதன் புத்திர பாக்கியம் வேண்டி வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும். சிவன் திருவடி காட்டி அருளிய தலம் என்பதால் இங்கு நவகிரகங்கள் கிடையாது. தலை திருப்பிய நந்தி, விஷ்ணுவின் தலையில் சிவனின் திருவடி இருப்பது, எம சண்டிகேஸ்வரர், இரண்டு ஐராவதங்களுக்கு நடுவில் காட்சி தரும் மகாலட்சுமி என வேறு எங்குமே காண முடியாத அரிய திருக்காட்சிகள் பலவற்றை இத்தலத்தில் காண முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com