பொருளாதார மந்த நிலையில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்க அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை அறிவிக்கப்போகிறது? நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தல், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், வேலை வாய்ப்பை உருவாக்குதல் போன்ற சவால்களை எப்படி சந்திக்கப்போகிறது? என்ற மக்களின் எதிர்பார்ப்புகளுக்கிடையே 8வது முறையாக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.
இதற்கு முன்பு 10 பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்தவர் நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாய். ஆனால், அவர் அதை வெவ்வேறு காலகட்டங்களில்தான் தாக்கல் செய்துள்ளார். தற்போது, அந்தச் சாதனையை நெருங்கும் நிர்மலா சீதாராமன் அதை 8வது முறையாக தொடர்ச்சியாக தாக்கல் செய்திருக்கிறார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டின் முக்கிய நோக்கங்களாக பொருளாதார மேம்பாடு, ஒருங்கிணைந்த வளர்ச்சி, தனியார் முதலீடு அதிகரிப்பு, மக்கள் மேம்பாடு, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் உயர்வு போன்ற 5 அம்சங்களை குறிப்பிட்டிருந்தாலும் இந்த பட்ஜெட்டின் ஹைலைட் அவர் அறிவித்த தனிநபர் வருமான வரி விதிப்பின். அதிரடி வரிச்சலுகைதான்.
புதிய வருமான முறையில் 7 லட்ச ரூபாய் வரை வருமான வரி இல்லை என்பதை இப்போது 12 லட்ச ரூபாய் வருமானம் வரை வரி இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது நடுத்தர வர்க சம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி. இந்த எதிர்பார்ப்பைத்தான் மக்கள் பெரிதும் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள் என்பது குறிப்பிடவேண்டிய விஷயமாகும். 12 லட்சம் ரூபாய் வரை வருமானத்துக்கு வரி கிடையாது. கூடுதலாக 75,000 ரூபாய் கழிவு கிடைக்கும். ஆக மொத்தம் 12.75 லட்ச ரூபாய்க்கு வருமான வரி கிடையாது.
நிதியமைச்சரின் 2025 - 26ம் நிதி ஆண்டு பட்ஜெட் உரையை உற்றுநோக்கும்போது, மக்களிடம் பணப்புழக்கம் இல்லாது இருந்த இந்த நிலையில், அதை அதிகரிப்பதற்காக இலக்கு நிர்ணயித்து அரசு செயல்பட்டிருப்பதாகத் தெரிகிறது. 12 லட்ச ரூபாய் வரை வருமான வரிச் சலுகை கிடைத்திருப்பதால், மக்களிடம் பணப் புழக்கம் அதிகரிக்கும். இதனால் கையில் இருக்கும் பணத்தை மக்கள் செலவு செய்ய ஆரம்பிப்பார்கள். இதன் காரணமாக நாட்டின் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் வளரவும் வாய்ப்பு இருக்கிறது.
வருமான வரிச்சட்டம் மிகக் கடுமையாக இருக்கிறது மற்றும் வருமான வரிப்பிடித்தம் கடினமாக இருக்கிறது என சொல்லப்பட்டு வந்து நிலையில், இந்த பட்ஜெட் உரையில் இந்த இரண்டும் எளிமையாக்கப்படும் என உறுதியளித்திருக்கும் அமைச்சர் அதற்கான மசோதாவை அடுத்த வாரம் தாக்கல் செய்கிறார்.
இந்த வரிச் சலுகையைத் தவிர மூத்த குடிமக்களுக்கான வட்டி வருமானத்துக்கு வழங்கப்படும் டிடிஎஸ் வரி விலக்கு வரம்பு 1 லட்ச ரூபாயாக உயர்வு, வீட்டு வாடகை வருமானத்துக்கான TDS உச்சவரம்பு 6 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இரண்டு சொந்த வீடுகளுக்கு வரிச் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினருக்கான மிக முக்கிய அறிவிப்பாகும். வரவேற்கத்தக்க அறிவிப்பும் கூட.
மக்களின் நுகரும் சக்தி அதிகரித்திருப்பதாகவும், உலகின் வளரும் பொருளாதாரங்களிலேயே இந்தியப் பொருளாதாரம் முதலிடம் என்று தனது உரையின் தொடக்கதில் அறிவித்த நிதியமைச்சர் அதற்காக பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் முக்கிய அம்சங்கள்
* 12 லட்ச ரூபாய் வரை வருமான வரி இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளதால், 1 லட்ச ரூபாய் வரை மாத சம்பளம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை.
* சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன். கடன் வழங்க 1.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 20 கோடி ரூபாய் கடன் உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.
* கல்வித்துறையில், ஏஐ திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் எனக் கூறியுள்ள மத்திய அமைச்சர், டிஜிட்டல் முறையில் பாடங்கள் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, கிராமப்புற பள்ளிகள் இலவச இணையம், 50,000 பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
* நாடு முழுவதும் 23 ஐஐடிக்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், அதன் மூலம் 6,500 மாணவர்கள் பயன் பெறுவர்.
* அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் 10,000 புதிய இடங்கள் ஏற்படுத்தப்படும், அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 மருத்துவ இடங்கள் சேர்க்கப்படும்.
* அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் மையங்கள் ஏற்படுத்தப்படும்..
* பொருட்களை டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சொமேட்டோ, செப்டோ உள்ளிட்ட டெலிவரி ஊழியர்களுக்கு இலவச காப்பீட்டுத் திட்டம்.
* 2047ம் ஆண்டிற்குள் அணு உலைகள் மூலமாக 100 ஜிகாவாட் மின் உற்பத்தி மற்றும் சிறு, நடுத்தர அணு உலைகள் அமைக்க 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
* உயிர் காக்கும் 36 புற்றுநோய் மருந்துகளுக்கு வரி விலக்கு, 82 மருந்துகளுக்கு செஸ் அல்லது மதிப்புக்கூட்டு வரிகளில் ஏதேனும் ஒன்று மட்டும் வசூலிக்கப்படும்.
* லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்கவரி குறைக்கப்படுவதோடு, டிவி பேனல்களுக்கான சுங்க வரி 20 சதவீதம் குறைக்கப்படும்.
* மேம்படுத்தப்பட்ட உதான் திட்டத்தின் மூலம், 120 புதிய வழித்தடங்களில் விமான சேவை தொடங்கப்படும்.
* 5 லட்சம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன பெண்களுக்கு 2 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும்
ஏமாற்றமளிக்கும் விஷயங்கள்:
* கடந்த பட்ஜெட்களில் அறிவிக்கப்பட்ட பல நலத்திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. 2025 - 26 நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவிகிதம் முதல் 4.5 சதவிகிதம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 16 லட்ச ரூபாய் கோடி பற்றாக்குறை ஏற்படும். இதில் 14 லட்சம் கோடி ரூபாய் கடனாக வாங்க வேண்டியிருக்கும். இதை எதிர்கொள்ள அரசின் நிலை என்ன என்பது அறிவிக்கப்படவில்லை.
* நாட்டின் மிகப்பெரிய அச்சமாக வளர்ந்து கொண்டிருக்கும் வேலை வாய்ப்புகள் குறைந்துவரும் நிலையைச் சமாளிக்க குறிப்பான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
* இந்த பட்ஜெட்டில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் இடம் பெறவில்லை;
* காப்பீட்டு துறையில் 74 சதவீதமாக இருந்த அந்நிய முதலீடு 100 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இது வளர்ந்துவரும் உள்நாட்டு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமையும்
மத்திய பட்ஜெட்டில் கடந்த ஆண்டு ஆந்திராவுக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில், இந்த ஆண்டு பீகார் மாநிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு பயனளிக்கும் வகையில் எந்தவிதமான அறிவிப்புகளும் இடம்பெறவில்லை என்பது தமிழக அரசியல்வாதிகளின் பார்வை.
ஆனால், மின்சார வாகனங்கள் மற்றும் கைபேசிகளுக்கு வரியில் சலுகை, லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்க வரிகளுக்கு முழுமையான விலக்கு, பின்னலாடைகளுக்கு இறக்குமதி வரி சலுகைகள், தோல் பொருள்கள் உற்பத்தியை அதிகரிக்க தோல் இறக்குமதிக்கு வரிச்சலுகை போன்றவை, தமிழ் நாட்டில் அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்தத் தொழில்கள் மூலம் தமிழக அரசின் வரி வருவாய் உயர கிடைத்திருக்கும் மறைமுகமான சலுகைகள் என்பதைக் கவனிக்க வேண்டும்.
மொத்தத்தில் இன்றைய பொருளாதார சூழலில் இந்த மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கு அரசு தீவிர முயற்சிகள் கொன்டிருக்கிறது என்ற நம்பிக்கையை அளிக்கும் ஒரு பட்ஜெட்.
புடைவையின் கலையும் கதையும்!
தொடர்ந்து 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன், பீகாரின் பாரம்பரிய கலை வடிவமான மதுபானி கலை நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வெள்ளை நிறத்திலான சேலையை அணிந்திருந்தார். சிவப்பு ரவிக்கை மற்றும் தங்க நிற பார்டர் கூடிய சேலை அனைவராலும் கவனிக்கப்பட்டுள்ளது.
இது மதுபானி கலையையும், கடந்த 2021ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவியின் திறமையைப் போற்றும் வகையிலும் அவரால் தயாரிக்கப்பட்ட Madhubani Art புடைவையை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.