அமெரிக்காவில் உலகமே அச்சம் கொள்ளும் அளவிற்கு ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திற்கு அமெரிக்காவின் முந்தைய அரசுதான் காரணம் என்று ட்ரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார்.
விமான விபத்துக்கள் சமீபத்தில் அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் அமெரிக்காவில் நேற்று முன் தினம் பயணிகள் விமானம், ராணுவ பயிற்சி ஹெலிகாப்டருடன் மோதிய விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த மூன்று பேர் மற்றும் பயணிகள் விமானத்தில் பயணம் செய்த 64 பேர் என மொத்தம் 67 பேர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகே இருக்கும் ரீகன் விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது திடீரென பாதை மாறியதாகவும் ஹெலிகாப்டர் மீது மோதியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
அதில் விமானம் செய்த அத்தனை பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2001ம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்காவில் நடந்த மிகவும் மோசமான விமான விபத்து இதுவே ஆகும். இதனால், அமெரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த விமான விபத்து குறித்தான முதற்கட்ட விசாரனையில், மோதல் நடந்த போது ரீகன் விமான நிலைய கோபுரத்தில் இரண்டு பேருக்கு ஒதுக்கப்பட்ட பணியை ஒருவர் மட்டுமே செய்து கொண்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதுகுறித்து பேசுகையில், “வாசிங்டன் நகரில் பயணிகள் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு பின்னால் சதி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. விமான பாதுகாப்பு நடைமுறை தரத்தை முந்தைய ஆட்சியாளர்கள் குறைத்துவிட்டனர்.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த விபத்து குறித்து இன்றும் பேசப்பட்டு வருகிறது. சுமார் 200 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இந்திய பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்தார். “வாஷிங்டன் டி.சி.யில் நடந்த துயர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கல். இந்த துயரில் அமெரிக்க மக்களுடன் நாங்கள் நிற்கிறோம்.” என்று தெரிவித்தார்.