நூற்றாண்டு நாயகன் கலைஞர் மு.கருணாநிதி - தெரிந்ததும் தெரியாததும்!

Kalaignar Karunanidhi
Kalaignar Karunanidhi
Published on

லைஞர் கருணாநிதி 1924 ஜூன் 3 செவ்வாய்க்கிழமை பிறந்தார். அதேபோல் 2018 ஆகஸ்ட் 7 செவ்வாய்க்கிழமையிலேயே மறைந்தார். கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் மறைந்ததும் ஆகஸ்ட் 7ம் தேதிதான்.

இரவில் எத்தனை மணிக்கு தூங்கச்சென்றாலும் அதிகாலையிலே எழுந்து விடுவார். அரசியல் உலக நடப்புகளை விரல் நுனியில் வைத்திருந்த இவர், அனைத்து பத்திரிகைகளையும் காலையில் படித்து விடுவார். இவரது எழுத்துப் பணிகள் பெரும்பாலும் இரவில்தான் இருக்கும்.

வெயில் அல்லது குளிர் என எதுவாக இருந்தாலும் சரி வெதுவெதுப்பான நீரில்தான் குளிப்பார். ஒரு நாளைக்கு இரண்டு முறை உடைகளை மாற்றுவார். வெள்ளை நிறத்தில் தோல் செருப்பு அணிவது அவருக்கு மிகவும் பிடிக்கும். நடைப்பயிற்சி செல்லும் போது மட்டும் ‘கட் ஷூ’ அணிவார்.

1954ம் ஆண்டு நடந்த ஒரு கார் விபத்தில் அவரின் இடது கண் பார்வை பாதிக்கப்பட்டது. அதற்கு ஆபரேஷன் செய்து கொண்டு கருப்பு கண்ணாடி அணிந்தார். அதுவே அவருக்கு பின்நாளில் ஒரு அடையாளமானது

இவருக்கு மழையை ரசிக்க அதிகம் பிடிக்கும். அதேபோல பழைய சினிமா படங்களை ரசித்து பார்ப்பார். மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகர். கிட்டத்தட்ட 62 திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி உள்ளார். 25 திரைப்படங்களைத் தயாரித்து உள்ளார்.

இவருக்கு அம்பாசிடர் காரில் பயணம் செய்வதே பிடிக்கும். தமிழக முதல்வராக கருணாநிதி 5 முறை இருந்துள்ளார். அவர் எங்கே வேண்டுமானாலும் விமானத்தில் செல்ல வசதி வாய்ப்புகள் இருந்தபோதிலும். அவர் எங்கே சென்றாலும் ரயிலில் செல்லவே விரும்பினார். அவருடைய அம்பாசிடர் கார் பிளாட்பாரம் வரை செல்ல ரயில்வே நிர்வாகம் அவருக்கு விசேஷ அனுமதி வழங்கி இருந்தது. அவர் இறுதியாக 2016ல் மே மாதத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருவாரூர் சென்றார்.

தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே நீண்ட கால முதல்வர் கருணாநிதிதான். நீண்டகால எதிர்கட்சி தலைவரும் அவரேதான். இந்தியாவிலேயே இரண்டு முறை 1976 மற்றும் 1991 மத்திய அரசால் ஆட்சி கலைக்கப்பட்டது இவருடைய ஆட்சியில்தான்.

தமிழ் நாட்டின் வரலாற்றில் அதிகபட்ச இடங்களில் வென்று ஒரு கட்சி ஆட்சி அமைந்தது அவருடைய தலைமையின் கீழ்தான் 1971ம் ஆண்டு தேர்தலில் 182 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது. அதேபோல், அதிக அளவில் இடங்களில் வென்று எதிர்கட்சியாக இருந்ததும் அவருடைய தலைமையின் கீழ்தான். 2016ல் அவருடைய கட்சி 89 இடங்களில் வென்றது.

தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தனது 60 வருட அரசியல் வாழ்வில் ஒரு முறை கூட எம்.எல்.ஏ பதவிக்கு நின்று தோற்றதில்லை. 1957 முதல் 2016 வரை அவர் எம்எல்ஏவாகவே இருந்தார். தனது கடைசி தேர்தலில் கூட அவர் 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நாட்டுக்கு என்று தேசிய கீதம் இருப்பது போல், தமிழ்நாட்டிற்கு என்று தமிழ்த்தாய் வாழ்த்து வேண்டும் என்று ‘நீராரும் கடலுடுத்த’ பாடலை தேர்வு செய்து 23.11.1970ல் அதை சட்டமாக்கியவர் கருணாநிதி. 1996ல் நான்காம் முறையாக முதல்வராக வந்து 1996 ஜூலை 17ம் தேதி மெட்ராஸ் என்பதை சென்னை என பெயர் மாற்றம் செய்தார்.

இதையும் படியுங்கள்:
கின்னஸ் சாதனைப் படைத்த ‘மிகபெரும் மரபுவழி நடனம்’!
Kalaignar Karunanidhi

தமிழ்நாட்டில் அதிகமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதும் அவருடைய ஆட்சியில்தான். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம், மே தினத்தை அரசு பொது விடுமுறை என்றது, காவல் துறையில் மகளிர் பணி நியமனம், காவல் துறை கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டது, கம்ப்யூட்டர் சயின்ஸ் தமிழ் நாட்டின் பாடத்திட்டத்தில் சேர்த்தது போன்றவை.

தமிழ்நாட்டில் அதிக பாலங்கள் மற்றும் அறைகள் கட்டப்பட்டது கருணாநிதி ஆட்சியில்தான். இவருடைய ஆட்சியில் தமிழகத்தில் 42 அணைகள் கட்டப்பட்டன. தமிழ்நாட்டில் வேளாண் துறை, மருத்துவ துறை, சட்டத்துறை, கால்நடை மருத்துவ துறையில், கடல் சார்ந்த படிப்பு, தோட்டக்கலை படிப்பு என அனைத்து துறைகளிலும் பல்கலைக்கழகம் கொண்டு வரப்பட்டது இவருடைய ஆட்சியில்தான். அதேவேளையில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி துவங்கியதும் இவருடைய ஆட்சியில்தான்.

கருணாநிதி திமுக தலைவராக 1969 ஜூலை 27ல் பதவியேற்றார். தொடர்ந்து தலைவராக இருந்த அவர், உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியே கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 2018 ஜூலை 27ல் கட்சியின் தலைவராக பொன் விழா கண்டார். இந்தியாவில் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக தொடர்ந்து 50 ஆண்டுகள் இருந்தவர் கருணாநிதி மட்டுமே.

கடின உழைப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் கருணாநிதி. இவர் முதல்வராக இருந்தபோது பல நேரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தலைமைச் செயலகம் சென்று பணியாற்றும் வழக்கம் கொண்டிருந்தார்.

சினிமா கதாசிரியர், வசனகர்த்தா, இலக்கியவாதி மற்றும் எழுத்தாளராக விளங்கிய கலைஞர், தான் எழுத பயன்படுத்தியது நீலநிற மை நிரப்பட்ட ‘வாலிட்டி 69' ஃபவுண்டன் பேனாதான் இந்தப் பேனாவில் எழுதுவது என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்கும். சென்னை பாரீஸ் கார்னரில் இருந்த நூற்றாண்டு கண்ட ஒரு கடையில் வாங்கிய அந்தப் பேனாவில்தான் தன் எழுதிய அனைத்தையும் எழுதினார்.

மேடை பேச்சு குறிப்புகள், கட்சி அறிக்கைகள், ஆட்சியில் இருந்தபோது கோப்புகளில் கையெழுத்து போட்டது என அனைத்து வகையான தேவைகளுக்கும் அந்த ‘வாலிட்டி 69' பேனாவைதான் அவர் பயன்படுத்தி வந்தார். அதை எப்போதும் தனது சட்டைப்பையில் சொருகியபடியே வலம் வருவார். அவரது மறைவுக்கு பின் அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டபோது அவரது உற்ற தோழனான ‘வாலிட்டி 69' பேனாவும் அவரோடு மண்ணுக்குள் சென்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com