கழிவறைக்கெல்லாம் ஒரு சிறப்பு நாளா? இது மிக மிக அவசியம்!

நவம்பர் 19: உலகக் கழிவறை நாள்!
World Toilet Day
World Toilet Day
Published on

கழிவறைக்கெல்லாம் ஒரு சிறப்பு நாளா என்று நினைக்க வேண்டாம்! அதன் முக்கியத்துவம் என்னவென்று அறியலாம்...!

2001 ஆம் ஆண்டில், நவம்பர் 19 ஆம் நாளில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் உலகக் கழிவறை நாள் (World Toilet Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வந்தன. அதன் பிறகு, 2013 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில், நவம்பர் 19 ஆம் நாளை ஐக்கிய நாடுகளின் உலகக் கழிவறை நாளாகக் கொண்டாட வேண்டுமென்று சிங்கப்பூர் நாடு ஒரு கோரிக்கையை முன் வைத்தது. அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடந்து, ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் இந்நாளைக் கொண்டாடி வருகின்றன. 

அடிப்படைக் கழிவறை வசதிகள் செய்தல், அதன் வழியாகச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உடல் கழிவுகளான மலம், சிறுநீர் ஆகியவற்றை உடலிருந்து அகற்றுவது மனிதனின் அன்றாட தேவைகளில் ஒன்று. பெரும்பான்மையான நாடுகளில் 1800 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் காட்டுப்புறத்தில் அல்லது ஊரின் ஒதுக்குப்புற இடங்களில் மனிதர் உடல் கழிவுகளை அகற்றினர். சில ஐரோப்பிய நாடுகளில் அறை தொட்டி (Champer Pot) பயன்படுத்தப்பட்டது. 1800 ஆம் ஆண்டுக்குப் பின்னர், தற்காலத்திப் பயன்பாட்டிலிருந்து வரும் கழிவறை (Toilet) முறையும் அதை அப்புறப்படுத்தும் முறையும் நடைமுறைக்கு வந்தது.

கழிவுகளை பாதுகாப்பாக, அகற்ற வேண்டிய தேவை 1850 ஆம் ஆண்டுக்குப் பின்னரேத் தெளிவாக உணரப்பட்டது. கழிவுகள் நீர்நிலைகளை களங்கப்படுத்தினால், அவற்றின் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், கழிவுகளில் நோய்க்கிருமிகள் தங்கி மனிதருக்கு நோய்களைப் பரப்புகின்றன என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, கழிவு, நீர்நிலை, நோய்க்கிருமி, நோய் ஆகியவற்றின் தொடர்புகள் நிரூபிக்கப்பட்டன.  அதன் பிறகு, கழிவுகளைக் குடிநீர் நிலைகளில் இருந்து பிரிப்பது அவசியத் தேவையானது.

ஐக்கிய நாடுகள் அவையானது, '2030க்குள் அனைவருக்கும் பாதுகாப்பான கழிவறைகள்' என்பது நிலையான வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகக் கொண்டிருக்கிறது. ஆனால், உலகம் இவ்வழியில் மெதுவாகவேச் சென்று கொண்டிருக்கிறது. 

உலகச் சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் அமைப்புகளின் புள்ளிவிவரக் கணக்கின்படி, 3.5 பில்லியன் மக்கள் இன்னும் பாதுகாப்பாக நிர்வகிக்கப்படும் சுகாதாரம் இல்லாமல் வாழ்கின்றனர். இதில் 419 மில்லியன் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர் என்றும், 2.2 பில்லியன் மக்கள் இன்னும் பாதுகாப்பாக நிர்வகிக்கப்பட்ட குடிநீர் இல்லாமல் வாழ்கின்றனர் என்றும், 115 மில்லியன் மக்கள் மேற்பரப்பு நீரைக் குடிக்கிறார்கள் என்றும், 2 பில்லியன் மக்களுக்கு இன்னும் அடிப்படை சுகாதார சேவைகள் இல்லை, இதில் 653 மில்லியன் மக்களுக்கு எந்த வசதியும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

கழிப்பறையில் பொதுவாக, 1. உலர் கழிப்பறை, 2. ஈரக் கழிப்பறை, 3. உரக் குழிக் கழிப்பறை, 4. சூமேசு (ECOSAN) கழிப்பறை என்று நான்கு வகையான கழிப்பறைகள் இருக்கின்றன.

உலக கழிப்பறை தினம் 2024 அன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாக கீழ்க்காணும் மூன்று செய்திகளைக் குறிப்பிடுகிறது.

 1. கழிப்பறைகள் அமைதிக்கான இடம் 

இந்த இன்றியமையாத இடம், நம் வாழ்வின் மையத்தில், பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆனால், பில்லியன் கணக்கான மக்களுக்கு, சுகாதாரம் மோதல்கள், காலநிலை மாற்றம், பேரழிவுகள் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் உள்ள கழிப்பறை அருங்காட்சியகம்!
World Toilet Day

2. கழிப்பறைகள் பாதுகாப்புக்கான இடம் 

நமக்கும் நமது கழிவுகளுக்கும் இடையில் ஒரு தடையை உருவாக்குவதன் மூலம், பொது மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு உதவவும், சுகாதாரச் சேவைகள் அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால், கழிவறை அமைப்புகள் போதுமானதாக இல்லாமல், கழிவறைகள் சேதமடைந்தால் அல்லது உடைந்தால், மாசு பரவுகிறது மற்றும் கொடிய நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புகளாக இருக்கின்றன.

3. கழிப்பறைகள் முன்னேற்றத்திற்கான இடம் 

சுகாதாரம் என்பது மனித உரிமை. இது அனைவரின் கண்ணியத்தையும் பாதுகாக்கிறது, குறிப்பாக, பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையை மாற்றுகிறது. அதிக முதலீடு மற்றும் துப்புரவு சிறந்த நிர்வாகம் ஆகியவை நியாயமான, அமைதியான உலகத்திற்கு முக்கியமானவை.

கழிப்பறைகள் குறித்த இந்த மூன்று செய்திகளை அடிப்படையாக் கொண்டு, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கழிப்பறைப் பயன்பாட்டையும், அதன் வழியாகப் பாதுகாப்பையும் வலியுறுத்துவதுடன், திறந்த வெளியிடங்களில் சுகாதாரமற்ற வழிகளில் உடல் கழிவுகளை அகற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com