‘உலக ஹலோ தினம்’ ஒவ்வொரு வருடமும், நவம்பர் 21ஆம் தேதி, உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. 1973ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நாள், இன்றைய காலகட்டத்திற்கு மிக அவசியமான தேவை. ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் மற்றும் இஸ்ரேல், ஹாமாஸ் போர் இன்னும் முடிவிக்கு வரவில்லை. இதைப் போன்ற மோதல்களை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக, வலிமையை உபயோகப் படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ‘உலக ஹலோ தினம்’ ஆரம்பிக்கப்பட்டு ஐம்பத்தோரு வருடங்கள் முடிவடைகின்றன
மிகவும் சாதரணமான, அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரச் சொல் ஹலோ. தெரிந்தவர், தெரியாதவர் எல்லோரையும் நம்முடன் இணைத்துக் கொள்ள உதவும் சொல். நாம் முதன் முதலில் சந்திப்பவரை சிரித்த முகத்துடன் ஹலோ சொல்லி விளிக்கும் போது, நட்பு உதயமாகிறது. பொதுவாக அலுவலகத்தில் மற்றவர்களை நம்மிடம் இணைக்கும் சொல் ஹலோ. ஹலோ என்ற சொல் நல்ல நண்பர்கள் தருவதுடன் சிலருக்கு நல்ல வாழ்க்கைத் துணையையும் தருகின்றது.
ஹலோ என்ற சொல் மற்றவர்களை நம்மிடம் ஈர்ப்பதற்குப் பயன்படுத்தும் சொல் என்கிறது ஆக்ஸ்வேர்ட் ஆங்கில அகராதி. இந்த சொல் முதன் முதலில் பழக்கத்தில் வந்தது 1827ஆம் வருடம். தொலைபேசியை கையிலெடுத்தவுடன் முதலில் சொல்ல வேண்டிய சொல் 'ஹலோ' என்று இந்த வார்த்தைக்கு முக்கியத்துவம் அளித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்.
உலக ஹலோ தினம் ஆரம்பித்தது இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போரினால். சிரியா, எகிப்து, ஜார்டன் அரசுகள் இஸ்ரேலைத் தாக்க திட்டமிடுவதாக அறிந்த இஸ்ரேல், அந்த மூன்று நாடுகளின் இராணுவத் தளவாடங்களின் மீது 1967ஆம் வருடம் அதிரடித் தாக்குதல் நடத்தி, இந்த நாடுகளின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றியது. இந்த பகுதிகளை திரும்பப் பெறுவதற்காக, அரபு நாடுகள் ஒன்று சேர்ந்து, 1973ஆம் வருடம் ‘யாம் கிப்பூர்' என்ற யூதர்கள் பண்டிகை தினத்தன்று இஸ்ரேலைத் தாக்கின. ஆகவே, இந்த போருக்கு ‘யாம் கிப்பூர்’ போர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான வீர்ர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர்.
இந்த சமயத்தில் அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்துக் கொண்டிருந்த ஃபிரியன், மைக்கேல் என்ற இரு சகோதரர்கள், ‘உலக ஹலோ டே’ என்ற தத்துவத்தை முன் வைத்தார்கள். உலகின் அமைதி மற்றும் நல்லறிவைப் பாதுகாக்க, பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்க இது உதவும் என்பது அவர்கள் நம்பிக்கை. உலகத் தலைவர்களுக்கு ஏழு மொழியில் 1360 கடிதங்கள் அனுப்பி இதன் தேவையை வலியுறுத்தினார்கள். இதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் நோபல் பரிசு பெற்றவர்களின் பேராதரவு கிடைத்தது. 1973ஆம் வருடம் முதல் இந்த நாள் 180 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினத்தை கொண்டாடுவது எப்படி? இந்த நாளில் மக்கள் ஒன்று கூடி, ஒருவர்க்கொருவர் ‘ஹலோ’ சொல்லி பேச ஆரம்பிப்பார்கள். இந்த நாளில், நாம் இதுவரை பேசியிராத புதியவர்கள் பத்து பேரையாவது சந்தித்து ஹலோ சொல்ல வேண்டும். தொடர்பு விட்டுப் போன நண்பர்களிடம், பேசி, நட்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். உறவு மற்றும் நண்பர்களிடம், சில காரணங்களால், நம்முடைய உறவு சீர் குலைந்து இருக்கலாம். அவர்களிடம் பேசி, உறவை சீர் செய்ய முயற்சிக்க வேண்டும். நம்முடைய தாய் மொழி தவிர மற்ற மொழியில் ‘ஹலோ’ என்று விளிக்கும் வார்த்தைக்கு ஈடான வார்த்தையை அறிந்து கொள்ள வேண்டும்.
ஒற்றைச் சொல் ‘ஹலோ’ நட்பின் கதவைத் திறக்கும் சொல் என்பதை உணர வேண்டும்.