உலகளவில் குழந்தைகளிடையே விழிப்புணர்வு மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்துவதற்காக, அவர்களுக்கான வசதிகள் மற்றும் அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டுமென்கிற நோக்கத்தில் 1954 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 அன்று ‘உலகக் குழந்தைகள் நாள்’ (World Children’s Day) கொண்டாடப்பட்டு வருகிறது.
1959 ஆம் ஆண்டு, நவம்பர் 20 ஆம் நாளன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை குழந்தைகளின் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது. 1989 ஆம் ஆண்டு, நவம்பர் 20 ஆம் நாளில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டை ஏற்றுக்கொண்டது என்பது இங்கு கவனத்திற்குரியது.
மாசசூசெட்ஸில் உள்ள செல்சியாவில் உள்ள யுனிவர்சலிஸ்ட் சர்ச் ஆஃப் ரிடீமர் பாதிரியாரான ரெவரெண்ட் டாக்டர் சார்லஸ் லியோனார்ட் என்பவர், 1857 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையினைக் குழந்தைகள் தினம் என்று முதன் முதலாக நிறுவினார். அந்நாளில் லியோனார்ட் குழந்தைகளுக்கான சிறப்பு விழாவை ஏற்படுத்தி, அவர்களுக்குப் பல்வேறு பரிசுகளை வழங்கினார். இந்த நாள் முதலில் ‘மலர் ஞாயிறு’ என்றும், பின்னர் ‘குழந்தைகள் நாள்’ என்றும், அதன் பின்னர், ‘ரோஸ் டே’ என்றும் பெயரிட்டார்.
துருக்கிக் குடியரசு, 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாளை, முதன் முதலாக, குழந்தைகள் நாள் என்று அறிவித்து, அன்றைய நாள் தேசிய விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு, துருக்கியக் குடியரசின் நிறுவனரும் ஜனாதிபதியுமான முஸ்தபா கெமால் அட்டதுர்க், 1929 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் குழந்தைகள் நாளுக்கான முறையான அறிவிப்பை வெளியிட்டு, குழந்தைகள் நாள் கொண்டாட்டத்தை விளக்கவும் சட்டப்பூர்வமாக்கவும் அதிகாரப்பூர்வமாகவும் உறுதிப்படுத்தினார்.
அதன் பின்னர், ஐக்கிய நாடுகள் சபை 1954 ஆம் ஆண்டில் நவம்பர் 20 ஆம் நாளை ‘உலகளாவிய குழந்தைகள் நாள்’ என்று அறிவித்தது. இந்தக் குழந்தைகள் நாள் அறிவிப்புக்குப் பின்பு;
தனிநபர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் பொதுவாக அதிகாரப்பூர்வ அரசாங்க ஆவணங்களில் பெரியவர்களுக்கானது என விளக்கப்படுகிறது. இருப்பினும், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அறிவிப்புக்குப் பின்பு, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் குழந்தைகளின் வாழ்க்கை, கல்வி, சுகாதாரம், குடும்பம், விளையாட்டு மற்றும் வன்முறை, பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான உரிமையை உறுதி செய்யும் ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டுள்ளன.
இதேப் போன்று, உலகிற்கு நிலையான, பாதுகாப்பான மற்றும் நிலையான எதிர்காலத்தைப் பெற வேண்டுமானால், இன்றையக் குழந்தைகளிடம் இருந்து தொடங்க வேண்டும். அதற்கு ஆரம்பக் கல்வி அவசியமானது. எனவே, அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதற்கான முயற்சிகளைச் செயல்படுத்தும் நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை அனைத்து நாடுகளுக்கும் குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வியை அளிக்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய குழந்தைகள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் கவனிக்கப்படாவிட்டால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களுக்கான அனைத்துக் குறைபாடுகளையும் புறந்தள்ளாமல், அதை நிறைவேற்ற வேண்டும். உலகம் முழுவதும் மருத்துவம், கல்வி அல்லது வாய்ப்புகள் இல்லாத மில்லியன் கணக்கான குழந்தைகளை அடையாளம் கணடு, அவர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டுமென்று பரப்புரைகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் நாளுக்கு ஒரு கருத்துரு முன்னெடுக்கப்பட்டு, அந்தக் கருத்துரு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டின் உலக குழந்தைகள் நாளுக்கு, 'ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமை' என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அனைத்துக் குழந்தைகளும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதை, உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறது. உணவு, கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் தீங்கு விளைவிக்கும் வேலையில் இருந்து பாதுகாப்பு ஆகியவைகளும் இதில் அடங்கும்.
தாய் தந்தையர், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள், அரசாங்கத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், சமய மற்றும் சமூகப் பெரியவர்கள், பெருநிறுவன முதலாளிகள் மற்றும் ஊடக வல்லுநர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளும் உலக குழந்தைகள் தினத்தை பொருத்தமானதாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
உலகக் குழந்தைகள் நாளில், நம் ஒவ்வொருவருக்கும் குழந்தைகளின் உரிமைகளை வலியுறுத்தவும், ஊக்குவிக்கவும், கொண்டாடவும், உரையாடல்களாகவும், குழந்தைகளுக்கான சிறந்த உலகத்தை உருவாக்கும் செயல்களாகவும் மொழிபெயர்க்கும் ஒரு உத்வேகமான நுழைவுப் புள்ளியை வழங்குகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (United Nations International Children's Emergency Fund - UNICEF) 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் உலக அளவில் சுமார் 30 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் வறுமை நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப் பெறாமல் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 5 வயதிற்குட்பட்ட ஏறக்குறைய 40 கோடி குழந்தைகள் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. காலநிலை மாற்றங்களால் 100 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், உலகில் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் வன்முறை நிகழ்வுகளால் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை உயிரிழப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இதனைக் குறைக்க, உலக நாடுகள் அனைத்தும் முயற்சிக்க வேண்டும் என்றும், இந்நிலையை மாற்ற அனைத்து நாடுகளும் இக்குழந்தைகள் நாளில் ஒத்துழைப்பு தர வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.