

வாழ்க்கை இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தருவதோடு மட்டுமல்லாமல், வலிகள், துயரங்கள், இழப்புகள், ஏமாற்றம் மற்றும் வருத்தம் என துன்பத்தையும் சேர்த்தே கொடுக்கிறது. இன்பத்தில் மகிழும் மனித மனம், துன்பத்திலும் துயரத்திலும் சோர்ந்து விடுகிறது. பலர் அதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல், விரக்தியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்டுரையில், மனத் துயரங்களிலிருந்து மீண்டு, வாழ்க்கையை உறுதியுடன் எதிர்கொள்வது பற்றி விரிவாகப் பார்ப்போம்.
1. தவறுகளைக் கடந்து செல்லுங்கள்:
சிலர் மிகச் சிறிய விஷயங்களுக்குக் கூட அதீத எதிர் வினையாற்றுவார்கள். தெரியாமல் காபியை கொட்டிவிட்டாலோ அல்லது சிறிய தவறு செய்தாலோ அதற்காக நீண்ட நேரம் வருத்தப்படுவார்கள். 'நடந்தது நடந்துவிட்டது, இதைப் பற்றி யோசிப்பதால் எந்தப் பயனும் இல்லை' என்று நினைத்துக்கொண்டு அடுத்த வேலையை கவனிக்க வேண்டும். இத்தகைய விஷயங்கள் இயல்பாக நடக்கும் ஒன்றுதான் என்பதை உணர வேண்டும்.
எல்லாவற்றிலும் 100% சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கூடாது. எதிர்பாராமல் நாம் செய்த ஒரு தவறுக்காக நிம்மதியை இழப்பதற்குப் பதிலாக, அதை ஒரு கற்றலுக்கான தருணமாக நினைத்துக் கொள்ள வேண்டும்.
2. நமக்கு நாமே நண்பன்:
உங்கள் மனதில் துன்பமான நினைவுகளோ அல்லது உணர்வுகளோ எழும்போது, முதலில் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு வழியைத் தேட வேண்டும். புத்தகம் படிக்கலாம், சிறிது தூரம் நடந்து செல்லலாம், பிடித்த இசையைக் கேட்கலாம் அல்லது செய்து கொண்டிருக்கும் வேலையை சிறிது நேரம் நிறுத்திவிட்டு, உங்களுக்குப் பிடித்த வேறு ஏதாவது ஒரு செயலைச் செய்யலாம்.
3. சுய இரக்கம்:
நமக்கு நாமே கருணையுடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். சோர்வாக இருக்கும்போது, 'என் சிறந்த நண்பர் நான் தான், நான் எனக்கு நன்மை செய்ய வேண்டும்' என்று நினைத்துக்கொண்டு, ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி, தனக்குத் தானே தேற்றிக் கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் சுய இரக்கம் மிக மிக முக்கியமானது.
4. துக்கத்தை வெளிப்படுத்த நேரம் ஒதுக்குங்கள்:
அன்புக்குரியவர்களின் இழப்பு, பிடித்த வேலை கைநழுவிப் போவது, நல்ல நட்பு நீங்குவது போன்ற துக்கங்களைச் சமாளிக்க, உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது அவசியம். துக்கத்தை வெளிப்படுத்த ஒரு காகிதத்தை எடுத்து, 15 முதல் 30 நிமிடங்கள் ஒதுக்கி, மனதில் இருக்கும் உணர்வுகளை எழுதலாம்.
எல்லா நேரங்களிலும் துக்கப்படுவதைவிட, ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி துக்கப்பட்டு, நேரம் முடிந்ததும், “நாளைக்கு மீண்டும் இதைப் பற்றி யோசிக்கலாம்" என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வது, படிப்படியாக மனதின் துக்கத்திற்கு வடிகாலாக அமையும். துக்கத்தை எப்போதும் மனதில் வைத்துக் கொண்டே இருப்பது ஒரு பெரிய சுமையாகும்.
5. படைப்புத்திறன் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துதல்:
துக்கத்தை வெளிப்படுத்த எப்போதும் வார்த்தைகள் தேவை இல்லை. ஓவியம் வரைதல், இசைக்கருவி வாசிப்பது, தோட்டக்கலையில் ஈடுபடுவது போன்றவற்றின் மூலமும் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். இந்தச் செயல்பாடுகள், உடலின் உணர்ச்சிகளை எளிதாகக் கையாள்வதற்கான சக்திவாய்ந்த வழியாகும்.
6. நண்பருக்கு ஆறுதல்:
உங்கள் நண்பர் துக்கத்தில் இருக்கும்போது அல்லது மனச்சோர்வில் இருக்கும்போது நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், அவர் பேசுவதை பொறுமையாகக் கேட்பதுதான். அவருக்கு உடனடித் தீர்வுகள் அளிக்க வேண்டியதில்லை. “உங்கள் நிலைமை மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்தத் துயரத்திற்கு ஆறுதல் சொல்ல என்னிடம் சரியான வார்த்தைகள் இல்லை, ஆனால், நான் உங்களுக்கு எப்போதும் இருக்கிறேன்" என்று ஆறுதலாகச் சொல்ல வேண்டும்.
7. நினைவுகளை உயிர்ப்புடன் வையுங்கள்:
இழந்தவரை மதிக்கச் சிறந்த வழி, அவரது நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதுதான். இழந்த அன்புக்குரியவர் பற்றிய நேர்மறையான நினைவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது, துயரத்தைக் குணமாக்க உதவுகிறது. துயரத்திலிருந்து குணமடைவது என்பது நேசித்தவர்களை மறப்பதில் அல்ல; அவர்களை நினைவில் வைத்துக்கொண்டிருப்பதில் இருந்துதான் தொடங்குகிறது.