'உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்ற திருமூலரின் வாக்கிற்கிணங்க மனிதனின் வளமான வாழ்க்கைக்கு சுகாதாரமான உடல் நலமே ஆதாரம் ஆகும். எனவே நம்முடைய சுகாதார பராமரிப்பு முறைகளில் முதல் படியில் இருப்பது கை கழுவுதல் தான்.கொரோனா பெருந் தொற்று ஏற்பட்டு நாடு முழுவதும் மக்கள் பல்வேறு அல்லல்களுக்கு உட்பட்ட போதும் கூட ஆய்வாளர்கள் முதலில் அறிவுறுத்திய பாதுகாப்பு நெறிமுறை இந்த கை கழுவும் முறையை தான். உலக சுகாதார நிறுவனம்( WHO) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் நாளை உலக கை கழுவும் தினமாக கடைப்பிடித்து வருகிறது. எனவே அத்தகைய கை கழுவுதலின் அவசியத்தையும், கழுவுவதன் முறைகளையும் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம்மை தாக்கும் நோய்க் கிருமிகள் அதிகம் பரவுவது கைகள் மூலமாகத்தான். கைகளை முறையாக பராமரிப்பதன் மூலம் 95% நோய் கிருமிகள் பரவுதலை தடுக்க முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். சிறிய செயலாக இருக்கக்கூடிய இந்த கை கழுவுவதன் மூலம் பல பெரிய நன்மைகளுக்கு நம்மால் அடித்தளம் இட முடிவதோடு ,பல்வேறு நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.
கை கழுவுவதற்கு ஏற்ற கிருமிநாசினி:
பெரும்பாலும் நாம் அனைவரும் தண்ணீரில் கைகளை நனைத்து நன்கு தேய்த்தால் அதையே கை கழுவுதலாக நினைக்கிறோம். ஆனால் அதையும் தாண்டி கை கழுவுதலை சோப்பு நீரிலோ அல்லது சோப்பு பயன்படுத்தியோ கழுவ வேண்டும். அவ்வாறு நாம் பயன்படுத்தும் சோப்பில் 70% ஆல்கஹால் கலவை இருக்க வேண்டும். சிலர் கைகளில் சுத்தத்தை பராமரிப்பதற்கு சானிடைசரை பயன்படுத்துவதும் உண்டு, இருப்பினும் சானிடைசரை விட சோப்பே சிறந்தது. எப்போதும் கை கழுவுவதற்கு 20 முதல் 30 வினாடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
கை கழுவுவதில் மட்டும் மொத்தம் 7 படிநிலைகள் உள்ளன. கை விரல்கள், விரல் இடுக்குகள், நக இடுக்குகள், உள்ளங்கையை ஒன்றோடு ஒன்றாக உரசி கழுவுவது, பின்புறம் கழுவுவது, என இத்தகைய படிநிலைகளை பயன்படுத்தி கை கழுவுவதன் மூலம் 80% நோய் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். அடிக்கடி கைகளை கழுவி கைகளில் சுகாதாரத்தை பேணிக்காப்பதன் மூலம் சளி இருமல், நிமோனியா, காலரா, டைபாய்டு, வாந்தி பேதி, சுவாசப் பிரச்சினை, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும்.
எப்பொழுதெல்லாம் கை கழுவ வேண்டும்:
* சாப்பிடும் முன்பு
விளையாடிய பின்பு
கழிவறைகளை பயன்படுத்திய பின்பு
சமைக்க தொடங்கும் முன்பு
காய்கறிகளை நறுக்கும் முன்பு
வாகனம் ஓட்டிய பின்பு
வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் வரும் முன்பு
பச்சிளம் குழந்தைகளை தொட்டு தூக்குவதற்கு முன்பு
நாய்,பூனை போன்ற செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பின்பு
உணவுப் பொருள்களை தொடுவதற்கு முன்பு
உணவுப் பொருட்களை பரிமாறுவதற்கு முன்பு
கழிப்பறைகளை சுத்தம் செய்து வந்த பின்பு
அசுத்தமான இடங்களில் கை வைத்த பின்பு
இத்தகைய செயல்பாடுகளின் போதெல்லாம் கைகளை கழுவுவதன் மூலம் நோய் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதோடு ஒருவரிலிருந்து மற்றவருக்கு நோய்க்கிருமிகள் பரவுவதையும் தடுக்க முடியும். மேலும் கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி கைகளை நன்கு கழுவி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.அதிலும் குறிப்பாக கழிவறையை பயன்படுத்திய பின்பு நன்கு சோப்பு போட்டு கைகளை கழுவுவது மிகவும் அவசியம். உலகில் உள்ள 53 சதவீத மக்கள் மட்டுமே கழிப்பறையை பயன்படுத்திய பின்பு கை கழுவுவதாக யுனிசெப் அமைப்பு தெரிவிக்கிறது.
எப்பொழுதும் வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும்போது சோப்பு போட்டு 30 வினாடிகள் தொடர்ந்து ஓடும் நேரில் கைகளை கழுவ வேண்டும். அவ்வாறு கைகளை கழுவுவதற்கு முன்பு கைகளை அடிக்கடி முகத்தில் வைப்பதோ, கண்களை துடைப்பதோ, வாய் அருகில் கொண்டு செல்வதோ கூடாது. எப்போதும் கை கழுவும் போது குழந்தைகள் முழங்கை வரை கழுவுதல் வேண்டும். பெரியவர்கள் மணிக்கட்டு வரை கழுவ வேண்டும். மேலும்
குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கை கழுவும் பழக்கத்தை முறையாக கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு கற்றுக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் சுகாதாரத்தை நாம் உறுதி செய்ய முடியும்.
கைகளை முறையாக கழுவி பராமரிப்பதில் நம்மிடையே இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்று WHO தெரிவிக்கிறது. எனவே கை கழுவுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15 ஆம் நாளை கை கழுவும் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இன்றைய காலகட்டங்களிலும் கூட 5 ல் 2 பேர் மட்டுமே முறையான கை கழுவும் பழக்கத்தை உடையவர்களாக இருக்கின்றனர். மேலும் 41 சதவீத பள்ளிகளில் முறையான கை கழுவும் வசதிகள் இல்லை என்கிறது புள்ளிவிவர ஆய்வு. எனவே இத்தகைய குறைகளை எல்லாம் சரி செய்து இதனை ஒரு ஆரோக்கியமான பழக்கமாக மாற்றிக் கொள்வதன் மூலமே நம்மால் வளமான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.
எனவே கை கழுவுதல் சிறிய ஒரு பழக்கம் தானே என எண்ணாமல் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதை மனதில் கொண்டு கைகளை முறையாக கழுவி பராமரித்து சுகாதாரமான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்!