ஐக்கிய நாடுகள் அமைப்பு பற்றி அறிந்து கொள்வொம்!

அக்டோபர் 24: ஐக்கிய நாடுகள் தினம்!
United Nations Day
United Nations Day
Published on

1947 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஐக்கிய நாடுகளின் பட்டய ஆவணத்தின் ஆண்டு விழாவான அக்டோபர் 24 ஆம் நாளை, உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும், ஐக்கிய நாடுகள் நாள் (United Nations Day) என்று கொண்டாடத் தீர்மானித்தது.

1971 ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782-ன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனைப் பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது. ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் நாமும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தோன்றிய வரலாறு, அதன் நோக்கம் போன்றவைகளைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளலாம் ஐநா அமைப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எதிர்காலப் போர்களைத் தடுக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. இதற்கு முன்னர் இருந்த பன்னாட்டு அமைப்பான உலக நாடுகள் சங்கம் பயனற்றது என்று வகைப்படுத்தப்பட்டு கலைக்கப்பட்டது. 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று 50 அரசுகள் சான் பிரான்சிஸ்கோவில் ஒரு மாநாட்டிற்காகச் சந்தித்து, ஐக்கிய நாடுகளின் பட்டயத்தை உருவாக்கத் தொடங்கின. 1945 ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 24 முதல் நடைமுறைக்கு வந்தது. இவ்வமைப்பு நிறுவப்பட்ட போது, இது 51 உறுப்பு நாடுகளைக் கொண்டிருந்தது; 2011 இல் தெற்கு சூடானின் சேர்க்கையுடன், உறுப்பினர்களின் எண்ணிக்கை 193 ஆக உள்ளது, இது உலகின் அனேகமாக அனைத்து இறையாண்மை நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது

ஐக்கிய நாடுகள் அமைப்பின் நோக்கங்களாக;

  • கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல்.

  • பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல்.

  • மக்களின் சம உரிமைகளையும் சுய நிர்ணய உரிமைகளையும் மதித்தல்.

  • மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய, பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்.

  • இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சமமானவர்களே.

  • உறுப்பு நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படாத வகையில் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

  • உறுப்பு நாடுகள் எக்காரணம் கொண்டும் பிற நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக் கூடாது.

போன்றவை இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் முறைமை 1994 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்வரும் 6 முதன்மை அமைப்புகளைக் கொண்டிருந்தது.

  1. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை

  2. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை

  3. ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை

  4. ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்

  5. ஐக்கிய நாடுகள் செயலகம்

  6. அனைத்துலக நீதிமன்றம்

1994 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவையின் கடைசிப் பொறுப்பாட்சிப் பகுதியான பலோ (Palau) விடுதலை பெற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் செயலற்றுப் போனது. இப்போது, அம்மன்றம் தவிர, ஏனைய ஐந்து அமைப்புக்கள் மட்டுமே உள்ளன. இந்த ஐந்து அமைப்புக்களுள் நான்கு அமைப்புகள் நியூயார்க் நகரில் உள்ள அனைத்துலக ஆட்சிப் பகுதியுள் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் இயங்குகின்றன. அனைத்துலக நீதிமன்றம் ஹேக் நகரில் உள்ளது. மேற்குறிப்பிட்டவை தவிர்த்த, மேலும் சில முக்கியமான அமைப்புக்கள் செனீவா, வியன்னா, நைரோபி போன்ற நகரங்களில் இருந்து இயங்கி வருகின்றன. ஐக்கிய நாடுகள் அவையுடன் தொடர்புடைய மேலும் பல அமைப்புக்கள் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன.

இதையும் படியுங்கள்:
தெற்கு ஒத்துழைப்பிற்கான ஐக்கிய நாடுகள் தினம் - இத்தினத்தின் முக்கியத்துவம் என்ன?
United Nations Day

இவ்வமைப்பின் அரசுகளுக்கு இடையிலான கூட்டங்களிலும், ஆவணங்களிலும், அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம் எனும் ஆறு மொழிகள் அலுவல் மொழிகளாகப் பயன்பட்டு வருகின்றன. செயலக வேலைகளுக்கு ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகள் பயன்பட்டு வருகின்றன. ஆறு அலுவல் மொழிகளுள் நான்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தேசிய மொழிகள். இவற்றுக்குப் புறம்பாக, அதிகமான நாடுகளில் தேசிய மொழிகளாக உள்ள எசுப்பானியமும், அரபு மொழியும் அலுவல் மொழிகளாகச் சேர்க்கப்பட்டன. இவற்றுள் எசுப்பானியம் 20 நாடுகளிலும், அரபு மொழி 26 நாடுகளிலும் அலுவல் மொழிகளாக உள்ளன. இம்மொழிகளுள் ஐந்து ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்ட போதே அலுவல் மொழிகளாகத் தெரிவு செய்யப்பட்டன. அரபு மொழி 1973 ஆம் ஆண்டில் அலுவல் மொழியாக்கப்பட்டது. ஐநாவின் கைநூலில் பிரித்தானிய ஆங்கிலமும், ஆக்சுபோர்டு எழுத்துக் கூட்டலுமே ஆங்கிலத்துக்கு நியமமாகச் சொல்லப்படுகின்றன. எளிமையாக்கிய சீனமே சீன மொழிக்குரிய நியம எழுத்து முறையாகக் கொள்ளப்படுகின்றது. 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமை சீனக் குடியரசிடம் இருந்து, மக்கள் சீனக் குடியரசுக்குக் கைமாறிய போது சீன எழுத்து முறைக்கான நியமம் மரபுவழிச் சீன எழுத்து முறையில் இருந்து, எளிமையாக்கிய சீன எழுத்து முறைக்கு மாற்றப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com