
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் (UNESCO) 1980 ஆம் ஆண்டு, அக்டோபர் 27 ஆம் நாளில் நடைபெற்ற 21 வது பொது மாநாட்டில், நகரும் படங்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரிப்பதற்கான பரிந்துரையை ஏற்று, உலகெங்கும் உள்ள ஒலி ஒளிமுறை காப்பகங்கள், ஒலி ஒளிமுறை மரபுடமையை நினைவு கொள்ளும் வழியில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27 ஆம் நாளை ‘உலக ஒலி ஒளிமுறை மரபுடைமை நாள்’ (World Day for Audiovisual Heritage) என்று கொண்டாட வேண்டும் என்று அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) மற்றும் ஒலி ஒளிமுறை காப்பகச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு (Coordinating Council of Audiovisual Archives Associations - CCAAA) ஆகியவற்றின் முன் முயற்சிகளுடன், ஒலி ஒளிமுறைக் காப்பகங்களைக் கொண்டாடும் நாளாகவும், ஒலி ஒளிமுறைப் பொருட்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், அவற்றைப் பாதுகாக்காமல் அல்லது பராமரிக்காமல் விட்டால் என்னவாகும்? என்பதைப் பற்றி எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நாளாகவும் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஒலி ஒளிமுறை மரபுடமையானது, நாம் கலந்து கொள்ளாத நிகழ்வுகளைக் காணவும், கடந்த காலத்தின் குரல்களைக் கேட்கவும், தகவல் மற்றும் மகிழ்விக்கும் கதைகளை உருவாக்கவும் உதவுகிறது. திரைப்படம் மற்றும் நிகழ்படங்களில் பதிவு செய்யப்பட்ட ஒலிகள் மற்றும் காட்சிப் படிமங்களை ஆராய்வதன் வழியாக, கலாச்சாரச் செல்வத்திற்கான மதிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், அதிலிருந்து மதிப்புமிக்க படிப்பினைகளையும் பெறமுடியும். ஒலி ஒளிமுறைப் பொருட்கள், உங்கள் கதை, உங்கள் உண்மை மற்றும் உங்கள் இருப்பைச் சொல்கின்றன. அவை உலகிற்கு ஒரு சாளரத்தை வழங்குகின்றன.
உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரங்கள் பற்றிய கதைகளை ஒலி ஒளிமுறைக் காப்பகங்கள் கொண்டிருக்கின்றன. அவைகளின் வழியாக, விலைமதிப்பற்ற மரபுவழியினை முதன்மைப்படுத்துகின்றன. இதன் வழியில் நமது கூட்டு நினைவகத்தை உறுதிப்படுத்துகிறது. மேலும், சமூகங்களின் கலாச்சார, சமூக மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. அனைவரும் பகிர்ந்து கொள்ளும் உலகத்தை வளரவும் புரிந்து கொள்ளவும் உதவுகின்றன. இந்த மரபுடமையைப் பாதுகாத்தல் மூலம், பொதுமக்களுக்கும் வருங்கால மரபுடமையினருக்கும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்கின்றன.
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், 2015 ஆம் ஆண்டில் ஆவண மரபுடமையைப் பாதுகாத்தல் மற்றும் அணுகுவது தொடர்பான பரிந்துரைகளைத் தனது உறுப்பு நாடுகளுக்கு வழங்கியிருக்கிறது. அதன் மூலம், உறுப்பு நாடுகள் அனைத்தும், தங்களிடமிருக்கும் பல்வேறு ஒலி ஒளிமுறைக் காட்சிகள் அனைத்தையும் எண்ணிம வடிவத்திற்கு மாற்றம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டுள்ளன.