ஒலிம்பிக் போட்டிகள்... விமானத்தில் பறக்கும் குதிரைகள்!

Olympic Games 2024
Olympic Games 2024
Published on

ஒலிம்பிக்ஸின் ஒட்டுமொத்த விளையாட்டுகளும் வீரர், வீராங்கனைகளின் திறமையைச் சார்ந்தே இருக்கையில், ஒரு விளையாட்டுக்கு மட்டும் விலங்கு ஒன்றின் திறமையும் முக்கியமாக இருக்கிறது. அது குதிரையேற்றம்.

அந்த விளையாட்டில் பங்குபெறும் அந்த குதிரைகளின் செயல்பாட்டின் அடிப்படையிலும் பதக்கம் நிர்ணயம் ஆகிறது. ஏறத்தாழ அதுவும் ஒரு போட்டியாளர் என்ற கணக்குதான்! முக்கியத்துவம் வாய்ந்த இந்த குதிரையை வளர்ப்பது மற்றும் அதை பழக்கப்படுத்துவது மட்டுமல்ல, போட்டிகள் நடைபெறும் தொலைதூர இடங்களுக்குக் கொண்டுசெல்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. 

ஒரு அமெரிக்க குதிரையேற்ற குழுவினர் பாரிசுக்கு பயணம் மேற்கொண்டால் அதற்கு செய்ய வேண்டியவைகள் என்னென்ன தெரியுமா?

அமெரிக்க குதிரையேற்ற குழுவினர் முதலில் தங்கள் குதிரைகளுடன் பென்சில்வேனியா மாகாணத்தில் இருந்து ட்ரக் மூலமாக  நியூயார்க் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வருவார்கள். அங்கு அவர்களுக்கும் அவர்களின் குதிரைகளுக்குமான ஆவண நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த அணியினருடன் கால்நடை மருத்துவர் ஒருவரும் பயணிப்பார். விருப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குதிரைக்கு உரிய போட்டியாளரும் பயணிப்பார்.   

மனிதர்களைப்போல வெளிநாடுகளுக்கு பயணிக்கும் ஒவ்வொரு குதிரைக்கும் கடவு சீட்டு, பாஸ்போர்ட் உள்ளது. குறிப்பிட்ட குதிரைதான் பயணிக்கிறதா என்பதை உறுதி செய்யும் ஆவணங்கள் அதில் இருக்கும். அத்துடன் உரிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட விவரம், ரத்தப் பரிசோதனை விவரம் போன்றவையும் அதில் இருக்கும். பின்னர் குதிரைகள் அவற்றுக்கென பிரத்தியேகமாக இருக்கும் ஒரு பெட்டியில் ஏற்றப்படும். 

இதையும் படியுங்கள்:
உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இன்று தொடக்கம்!
Olympic Games 2024

ஒரு பெட்டியில் இரு குதிரைகள் ஏற்றப்படுகின்றன. அவற்றுக்கு இடையே ஒரு மறைப்பும் இருக்கும். குதிரைகள் இருக்கும் பெட்டிகள் விமானத்தின் சரக்கு பெட்டக பகுதியில் வைக்கப்படுகின்றன. அதில் குதிரைகளுக்கான உணவு, தண்ணீர் போன்றவையும் இருக்கும். பயணத்தின்போது குதிரைகளுடன் எப்போதும் இரு உதவியாளர்கள் இருப்பார்கள். 

குதிரைகள் தங்களின் தலையை வைத்து ஓய்வெடுக்கும் வகையில் குறுக்குப்பட்டைகளும் இருக்கும். விமானம் பறக்கத் தொடங்கும்போதும் டேக் ஆஃப் மற்றும் தரையிறங்கும்போதும் ஏற்படும் குலுங்கல்களால் அவற்றுக்கு அடிபடாமல் இருக்கும்வகையில் அவற்றைச் சுற்றிலும் பஞ்சு போன்ற தடுப்பு அமைப்புகள் இருக்கும். 

பயணத்தின்போது குதிரைகள் பெரும்பாலும் அதற்கான உணவை சாப்பிட்டவாறே இருக்கும். 19 லிட்டர் வரையில் குதிரை தண்ணீர் குடிக்கும். அதை ஊக்கப்படுத்துவதற்காக அதில் ஆப்பிள் துண்டுகளும் சேர்க்க வேண்டும். 

எட்டு மணி நேரப் பயணத்தை அடுத்து, லக்ஸம்பர்க்கில் தரையிறங்கியபிறகு, அங்கு குதிரைகளுக்கான சுங்க முறைகள் பூர்த்தி செய்யப்படும். விமான நிலையத்திலிருந்து அவை முதலில் விட்டெல் நகரில் இருக்கும் ஃபேஸ் கிளப்புக்கு ட்ரக்கில் செல்கின்றன. குதிரைகள் அங்கு சற்று நேரம் ஓய்வெடுக்கும். 

இதையும் படியுங்கள்:
பண்டைய ஒலிம்பிக் பந்தயங்களில் போட்டியாளர்கள் நிர்வாணமாக பங்கேற்றனர் என்பது தெரியுமா?
Olympic Games 2024

ஜெட்லேக் என்ற பயணக் களைப்பு குதிரைகளுக்கும் இருக்கும். அதற்கான புத்துணர்ச்சி நடைபயிற்சி அளிக்கப்படும். விட்டெல் நகரத்திலிருந்து அமெரிக்க அணிக்கான பாரீஸ் கேம்ப் இருக்கும் வெர்செய்ல்ஸ் என்ற இடத்திற்கு அணியினர் வருவார்கள். அங்கிருந்து குதிரைகளுக்கு போட்டிக்கான வழக்கமான பயிற்சி நடைமுறைகள் தொடங்குகின்றன. 

அங்கும் குதிரைகளுக்கான கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்படும். அவற்றுக்கு காய்ச்சல் ஏதாவது இருக்கிறதா என்று பார்ப்பார்கள். இரு முறை உடல் வெப்ப பரிசோதனை செய்வார்கள். பிறகு அவற்றை நல்ல மனநிலையில் வைப்பதற்காக பிடித்த உணவுகள் இனிப்புகள் வழங்குவார்கள். 

இத்தனை ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளுக்குப்பிறகு, போட்டியில் கலந்துகொண்டு குதிரை வெற்றி பெறுவது அதன் கையில்,... நோ நோ.. அதன் காலில்தான் உள்ளது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com