ஒலிம்பிக்ஸ் போட்டியின் வரலாறு:
கோடை கால ஒலிம்பிக்ஸ், பாரிஸ் நகரில் ஜூலை 26 அன்று தொடங்கி, ஆகஸ்ட் 11 அன்று நிறைவடைகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 776 வருடங்களுக்கு முன்பு, கிரேக்க நாட்டின், ஒலிம்பியா என்ற நகரில் முதல் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டி, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கிடையே, பல நாடுகளின் விளையாட்டு வீரர்கள், பங்கேற்க நடைபெற்று வந்தது.
முதலில் ஓட்டப் பந்தயம் என்ற ஒற்றை விளையாட்டுடன் நடந்து வந்த இந்தப் போட்டியில், பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, மல்யுத்தம், ஈட்டி எறிதல், குத்துச் சண்டை, நீளம் தாண்டுதல் போன்றவை சேர்க்கப்பட்டன. இந்தப் போட்டிகள் எல்லாம் தற்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் நடைபெற்று வருகின்றன.
இவற்றைத் தவிர தேர் பந்தயம் ஒரு முக்கியமான விளையாட்டாக இடம் பெற்றிருந்தது.
விளையாட்டு வீரர்களிடையே நடைபெறுகின்ற போட்டிகள் என்பது முக்கிய அம்சமாக இருந்தாலும், போட்டியிடும் நாடுகளிடையே அமைதி, நேர்மை, வளர்ச்சி, கல்வி ஆகியவற்றை வலியுறுத்தும் நிகழ்வாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒலிம்பியாவில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வந்த இந்தப் போட்டியில், மிகக் கடுமையான விதிகள், வீரர்களுக்கான ஒழுங்கு முறைகள் வரையறுக்கப் பட்டிருந்தன. இந்தப் போட்டிகளை கண்காணித்து நடத்துவதற்கு, பயிற்சி பெற்ற பத்து நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். ஒலிம்பியாவில் நடைபெற்று வந்த இந்தப் போட்டி, கி.பி. 393ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது. இதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896ஆம் வருடம் ஏதென்ஸில் தொடங்கின.
பல இடங்களில் ஒலிம்பியா வகைப் போட்டிகள் – பண்டைய கிரேக்க நாட்டில், ஒலிம்பியாவில் நடைபெறுவது போன்று, பல நகரங்களிலும் போட்டிகள் நடைபெற்றன. ஆண்டு தோறும் போட்டிகள் நடைபெற்ற முக்கிய நகரங்கள் – நேமியா, டெல்பி, கொரிந்தின் இஸ்த்மஸ், மற்றும் ஒலிம்பியா. இந்தப் போட்டிகள் புனித விளையாட்டுகள், பன்ஹெலனிக் கேம்ஸ், கிரவுன் கேம்ஸ் என்றும் அழைக்கப்பட்டன. ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பியா போட்டியில் வெற்றிபெறுவது மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது.
ஒலிம்பிக் போர் நிறுத்தம் – ஐக்கிய நாடுகள் சபை 1994ஆம் வருடம், “அமைதியான சிறந்த உலகத்தை விளையாட்டின் மற்றும் ஒலிம்பிக் இலட்சியத்தின் மூலம் உருவாக்குவோம்” என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் துவக்கத்தில் இதனை நினைவு கூறுகின்றன. இதைப் பற்றிய சிந்தனை பண்டைய காலத்தில் இருந்தது. கிரேக்க நகர் எலிஸின் மன்னர் இஃபிடோஸ், பிராந்தியத்தில் நடைபெறும் முடிவில்லாத மோதல்களால் சலிப்படைந்தார். அப்போது அரசர், பாதிரியார் டெல்பின் ஆரக்கிளை அணுகி ஆலோசித்த போது, அவர், அமைதியான தடகளப் போட்டிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டாலும், இது தடகள வீரர்கள் தங்கு தடையின்றி போட்டிகளில் பங்கேற்க வழி செய்தது.
ஒலிம்பிக் சுடர் – தற்போது ஒலிம்பிக்ஸ் போட்டியின் ஆரம்பத்தில், ஒலிம்பிக் சுடரை ஏற்றுவது முக்கிய நிகழ்வாக உள்ளது. ஒலிம்பிக்ஸ் போட்டி ஆரம்பிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னால், ஒலிம்பியாவில் சுடர் ஏற்றப்படும். பின்பு, அது பல இடங்களைக் கடந்து போட்டிகள் நடக்கும் ஒலிம்பிக்ஸ் மைதானத்தில் உள்ள பெரிய ஜோதியை ஏற்றும். ஆனால், இந்த நடைமுறை பண்டைய ஒலிம்பிக்சில் இருக்கவில்லை. 1936ஆம் வருடம், பெர்லினில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியின் போது, முதல் முறையாக, ஒலிம்பிக் சுடர், ஒலிம்பியாவில் ஏற்றப்பட்டு, விளையாட்டு வீரர்கள், அதனைக் கையிலேந்தி பல நாடுகள் கடந்து பெர்லின் மைதானத்தில் ஜோதியை ஏற்றினர்.
பண்டைய ஒலிம்பிக்ஸில் - எல்லோரும் போட்டியிட முடியாது. பெண்கள் போட்டியிடுவது தடைசெய்யப்பட்டிருந்தது. எந்த கிரேக்க ஆண் மகனும் போட்டியில் பங்கேற்கலாம். ஆனால், போட்டிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு தடகள வீரரும், பத்து மாதங்கள் போட்டிக்கான பயிற்சி பெற வேண்டும். இதனால், திறமையிருந்தும், வறுமையின் காரணமாக சிலர் கலந்து கொள்ள முடியாமல் இருந்தது. சில செல்வந்தர்கள் அரசு உதவித் தொகை பெற்றுப் போட்டியில் பங்கேற்றனர்.
ஒலிம்பிக் கிராமம் – போட்டியிட விரும்புபவர்கள், ஒலிம்பிக் கிராமத்தில், போட்டி தொடங்குவதற்கு முன்னால் கட்டாயமாக ஒரு மாதம் தங்கி தீவிரப் பயிற்சி மேற் கொள்ள வேண்டும். இதற்கென்று ஒலிம்பிக் பயிற்சியாளர்கள், போட்டியின் நடுவர்கள் இருந்தனர். தற்போதைய ஒலிம்பிக்ஸில் போட்டி நடைபெறும் போது மட்டுமே விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் ஒன்றாக வாழ்கிறார்கள்.
நீண்ட தூர ஓட்டப்பந்தயம் – பண்டைய ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், தற்போது உள்ள 26.2 மைல் மராத்தான் போட்டி இல்லை. பண்டைய ஒலிம்பிக்ஸில், அதிக தூர ஓட்டம் 3 மைல் மட்டுமே.
பதக்கங்கள் இல்லாத ஒலிம்பிக்ஸ் – பண்டைய ஒலிம்பிக்ஸில், முதல் இடத்தைப் பெற்றவர்களுக்கு ஆலிவ், பார்ஸ்லி, லாரல், பைன் இவற்றினால் செய்யப்பட்ட கிரீடம் பரிசாக அளிக்கப்பட்டது. இரண்டாவது, மூன்றாவது இடம் பெற்றவர்களுக்கு பரிசு கிடையாது. பரிசு பெற்றவர்களுக்கு அவர்கள் கிராமத்தில் மதிப்பு. பணம் மற்றும் எண்ணெய் பானைகளை பரிசாக வழங்குவார்கள். அரசு வேலைக்கான வாய்ப்பு உண்டு.
பந்தயங்களில் நிர்வாணமாக பங்கேற்றனர் – போட்டிகள், போட்டியாளர்களின் உடல் வலிமையை முக்கியப்படுத்துவதால், அவர்கள் போட்டிகளில் ஆடைகள் அணியாமல் பங்கேற்க வேண்டும். பயிற்சியாளர்களும் ஆடைகள் அணியாமல் இருக்க வேண்டும்.
ஏன் பண்டைய ஒலிம்பிக்ஸ் நிறுத்தப்பட்டது? – பண்டைய ஒலிம்பிக்ஸ், கிரேக்க கடவுள்களின் அரசரான சீயஸ் அவர்களை கௌரவிக்கும் விதமாக நடத்தப்பட்டது. கிறிஸ்து பிறப்பதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால், கிரேக்க நாடு, ரோமானியர்கள் வசம் வந்தது. அப்போது போட்டிகளின் முக்கியத்துவம் குறைந்தது. கி.பி.300ல் ரோமானியர் கிறித்துவ மதத்தை தங்கள் மதமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் பேகன் மதம், சடங்குகள், திருவிழாக்கள் ஆகியவற்றிற்கு தடை விதித்தனர். இதனால் பண்டைய ஒலிம்பிக்ஸ் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறினாலும், கிரேக்க நாட்டின் பொருளாதார நிலை காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.