
இறைவன் படைப்பில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள். சிலர் நன்றாகப் பிறக்கிறாா்கள், சிலர் சில உடல் குறைபாடுகளோடு பிறக்கிறாா்கள். அப்படி உடல் குறைபாடுகளுடன் பிறந்தாலும், தனது விடாமுயற்சி, தன்னம்பிக்கை எனும் தாரக மந்திரங்களைக் கடைபிடித்து வாழ்க்கையில் உச்சம் தொடுபவர்களும் அநேகம் பேர் உண்டு!
பொதுவாக, பார்வை குறைபாடு உடையோருக்கும், காது கேளாதவர்களுக்கும் பலவித பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. அது அவர்களுக்கு பல வகையிலும் கைகொடு்ப்பது நிஜம்! காதுகள் கேளாதவர்கள் எதிா்முனையில் பேசும் நபர்களின் வாய் அசைவைக் கொண்டே, என்ன பேசுகிறாா்கள் என்ற விபரங்களைப் புரிந்து கொள்ளும் அமானுஷ்ய சக்தியும் அவர்களுக்கு இறைவன் தந்த வரப்பிரசாதமாகும். சைகை மொழியால் பேசுவதைப் புாிந்து கொள்ளும் ஆற்றலும் அவர்களிடம் இருக்கிறது!
இதுபோன்ற விஷயங்களை வலியுறுத்தும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 23ம் நாள் சர்வதேச சைகை மொழி தினமாக (International Day Of Sign Languages) அனுஷ்டிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் சைகை மொழிகளின் முக்கியத்துவம் மற்றும் காது (செவி) கேளாதோா் சமூகத்தின் குறை, நிறைகளை சீா்தூக்கிப் பாா்க்கும் வகையிலும், அவர்களது உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்,
இவர்களுக்கான கூட்டமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. 1951ம் வருடம் செப்டம்பர் திங்கள் 23ல் காது கேளாதோா் கூட்டமைப்பு (WPD) உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பின் நோக்கமே சிறப்பானது. இந்த அமைப்பானது சைகை மொழிக் கல்வி பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டது. மேலும் சைகை மொழிக்கல்வி, காது கேளாதோரின் நலன் மற்றும் வளா்ச்சி போன்றவையே இந்தக் கூட்டமைப்பின் நோக்கமாகும்.
இந்தக் கூட்டமைப்பு தந்த தகவலின்படி உலகம் முழுவதும் தோராயமாக 72 மில்லியன் எண்ணிக்கையில் காது கேளாதவர்கள் வசிப்பதாக தகவல்கள் தொிவிக்கின்றன. இதில் 75 சதவிகிதத்திற்கு மேலாக வளரும் நாடுகளில் வசிக்கிறாா்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது!
பொதுவாக, மனிதனை மனிதன் மதிப்பதோடல்லாமல், மாற்றுத்திறனாளிகளின் இயலாமையைக் கண்டு நாம் ஒருபோதும் எள்ளி நகையாடும் பழக்கத்தை கடைபிடிப்பது தவறான செயலாகும். எனவே, நம்மிடமும் கை கால் நேராக இருந்தாலும் சில குறைபாடுகள் தலைதூக்குகின்றனவே! அது இறைவன் தந்த குறையல்ல, நம்மால் கையாளப்படுவதே! எனவே, யாரையும் அவர்களது அங்கஹீனம் கருதி ஒதுக்காதீா்கள். அவர்களும் நமது நண்பர் மற்றும் உறவுகளே என்ற உயர்வான எண்ணங்களுடன் வாழ்வதே நல்லது.